[X] Close

'மாஸ் + க்ளாஸ்' கேஜிஎஃப்... அத்தியாயம் 2 மீதான 'பவர்ஃபுல்' எதிர்பார்ப்பு ஏன்?- ஒரு பார்வை

சினிமா,சிறப்புக் களம்

KGF-Chapter-2-Teaser-and-Fans-expectations--Movie-Analysis

'மாஸ்' ரசிகர்களின் மரண வெயிட்டிங் முடிவுக்கு வரவிருக்கிறது. ராக்கி பாய் கதாபாத்திரத்தில் நடிகர் யஷ் நேற்று இரவிலிருந்து மீண்டும் ரசிகர்களின் நாடித்துடிப்பில் இடம்பெற தொடங்கியுள்ளார். அதற்கு காரணம், அவர்களுக்கு செம தீனி போடும் வகையில் அமைந்திருக்கிறது 'கே.ஜி.எஃப் 2' படத்தின் டீசர்.


Advertisement

2018 வரை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு யஷ் என்ற பெயர் பரிச்சயம் கிடையாது. ஆனால், இன்று லட்சக்கணக்கான இளைஞர்கள் யஷ்ஷின் தீவிர ரசிகர்களாக மாறியிருக்கிறார்கள். இதையெல்லாம் நிகழ்த்திக்காட்டியது 'மாஸுக்கெல்லாம் மாஸ்' படமாக அமைந்த 'கே.ஜி.எஃப்'.

கோலார் தங்கச் சுரங்கத்தை மையக் கதையாக வைத்து 2018-ல் படம் வெளியானது. படத்தின் ஆரம்பமே, ``விதியோட விளையாட்டுல அன்னைக்கு ராத்திரி 2 சம்பவங்கள் நடந்துச்சு. தங்கச் சுரங்கமும் பொறந்துச்சு, அவனும் பொறந்தான்'' என ஒருவித உணர்வுபூர்வமாக தொடங்கும். ராக்கி என்னும் ராஜ கிருஷ்ண வீரய்யாவிடம் தாய், ``நீ எப்படி வாழப்போறியோ எனக்குத் தெரியாது. ஆனா சாகும்போது, இந்த உலகமே மதிக்குற பெரிய பணக்காரனத்தான் சாகணும்'' என்று சத்தியம் வாங்க, தாயின் சத்தியத்தை காப்பாற்ற வெறியுடன் வளர்கிறான் ராக்கி.


Advertisement

image

இந்த சீன்களுக்கு பிறகுதான் 'கே.ஜி.எஃப்' என்னும் மாஸ் மேஜிக் தொடங்குகிறது. படத்தில் ஏழு வயது சிறுவனுக்கும் மாஸ் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். ஒரு காட்சியில் ராக்கி, ஏழு வயது சிறுவனாக இருக்கும்போது, போலீஸ் தலையில் பாட்டிலை அடித்துவிடுவான். இதனால் அவனை அனைத்து போலீஸும் சல்லடை போட்டுத் தேடுவார்கள். அப்போது மீண்டும் அடிபட்ட போலீஸிடம் வந்து, அடிச்சது யாருன்னு உனக்கு தெரியாதுல்ல. அடிச்சது ராக்கி" என சொல்லிவிட்டு மீண்டும் பாட்டிலால் போலீஸை பதம் பார்ப்பான் ராக்கி.

'கே.ஜி.எஃப்' கதை முழுவதும் ஏகப்பட்ட கேரக்டர்கள் இருக்கும். ஆனால், ராக்கியின் கதாபாத்திரத்துக்கு மட்டுமே முக்கியத்துவம் இருக்கும். ஒவ்வொரு காட்சியிலும் ராக்கி கதாப்பாத்திரத்துக்கு, மாஸைக் கூட்டிக்கொண்டே சென்றது வேற லெவல். அதிலும் ஒரு சீனில் அடியாளின் கையை உடைத்து, அந்தக் கையாலாயே தன் தலைமுடியை சரி செய்து மாஸ் காட்டுவார் யஷ்.


Advertisement

image

தமிழ், தெலுங்கு சினிமாவில் நான்கைந்து மாஸ் காட்சிகள் இடம்பெறும். அதுவே, சிலசமயம் ரசிகர்களுக்கு சலிப்பைத் தரும். ஆனால், இரண்டரை மணிநேர 'கே.ஜி.எஃப்' படத்தில் இரண்டு மணிநேரம் மாஸ் காட்சிகள் மட்டுமே. அத்தனையும் ரசிக்கும் விதம் அமைத்திருப்பார் இயக்குநர் பிரசாந்த் நீல். அதனால்தான் இத்தனை ரசிகர்கள் மனதில் கே.ஜி.எஃப் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறது. ஒவ்வொரு ஃபிரேமிலும் செட், பின்னணி இசை, சண்டைக் காட்சிகள் படத்தின் மாஸ் லெவலை கூட்டிகொண்டே இருக்கும்.

படத்தின் வசனங்கள்... சொல்ல வேண்டியதே இல்லை, ஒவ்வொரு வசனத்திலும் தீப்பொறி பறக்கும்.

``நான் பத்து பேர அடிச்சு டான் ஆகல. நான் அடிச்ச பத்து பேருமே டான்தான், காயப்பட்ட சிங்கத்தோட மூச்சு, கர்ஜனைய விட பயங்கரமா இருக்கும், யுத்தத்துல யாரு மொதல்ல அடிக்கறாங்கறது கணக்கில்ல, மொதல்ல யாரு கீழ விழறங்கறதுதான் கணக்கு, கேங்க கூட்டிட்டு வர்றவன் கேங்ஸ்டர்.. ஒத்தையா வர்றவன் மான்ஸ்டர்" என்ற வசனங்கள் ரசிகர்களின் ஃபேவரைட்டாக மாறிப்போனது.

ராக்கி பாயாக யஷ் வரும் ஒவ்வொரு காட்சியும் ஆக்‌ஷன்தான். இப்படி படம் முழுக்க மாஸ் காட்சிகள்தான் இத்தனை ரசிகர்களுக்கு பிடித்திருக்கிறது என்றால், இல்லை. சென்டிமென்ட் காட்சிகள், தாய்ப் பாசம், படத்தின் சஸ்பென்ஸ், புதிது புதிதாக வரும் வில்லன்கள், அதைவிட கே.ஜி.எஃப் சுரங்கத்தின் அதிகாரத்தை கைப்பற்ற நடக்கும் அரசியல் சதுரங்கங்கள் என திரைக்கதையும், ஒவ்வொரு ஃபிரேமும் படத்தின் வெற்றிக்கான பலம். முதல் பாதியில் சாதாரண கேங்ஸ்டர் கதையாக தொடங்கினாலும் போகப் போக ரசிகர்களை சீட்டின் நுனியில் உட்கார வைத்திருப்பார்கள்.

இதன் காரணமாகவே தமிழ் ரசிகர்கள் 'கே.ஜி.எஃப்' படத்தின் வெறித்தன ரசிகர்களாக மாறிபோயினர். இதற்கு சான்று, ரசிகர்கள் பகிர்ந்து வரும் மீம் டெம்ப்ளேட்டுகள். படம் வெளியானபோது கே.ஜி.எஃபின் ஒவ்வொரு வசனமும் மீம் டெம்ப்ளேட்களாகத் தெறிக்கவிட்டனர் ரசிகர்கள். குறுகிய வட்டத்தில் பயணித்துக் கொண்டிருந்த கன்னட சினிமாவை கே.ஜி.எஃப் மாற்றி எழுதியது.

image

முதல் பாகத்தின் பிரமாண்ட வெற்றி, இரண்டாம் பாகத்தை உடனடியாக எடுக்கவைத்தது. முதல் பாகத்தின்போதே, இரண்டாம் பாகத்துக்கான காட்சிகளும் படம்பிடிக்கப்பட்டு பத்திரப்படுத்திய தகவலும் உண்டு. 'கே.ஜி.எஃப் 2' படத்தின் வில்லனாக பாலிவுட் நடிகர்கள் சஞ்சய் தத், ரவீனா டாண்டன் இடம்பெற்றுள்ளனர். மேலும், பல தமிழ் நடிகர்களும் இதில் நடித்துள்ளனர். இது கூடுதல் ஆர்வத்தை தூண்டியுள்ளது.

இப்போது, ராக்கி பாய் யஷின் பிறந்தநாளையொட்டி வெளியான டீசர் எதிர்பார்ப்பை மேலும் எகிற வைத்துள்ளது. கே.ஜி.எஃப் 2 டீஸரில்
எதிரிகளை சுட்டுப் பொசுக்கி கொலைவெறியாட்டத்தை மிக நிதானமாக அரங்கேற்றும் ராக்கி பாயை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

இதனிடையே, 'கேஜிஎஃப் டைம்ஸ்' என்று நாளிதழ் வடிவில் படக்குழு வெளியிட்ட சில போஸ்டர்களும் கவனத்தை ஈர்த்துள்ளதுடன், கதையின் போக்கு மீதான எதிர்பார்ப்பார்ப்பையும் கிளப்பிவிட்டிருக்கிறது.

ராக்கி பாய்... ஹீரோவா, வில்லனா என்பதற்கான விடையும் இந்த அத்தியாயத்தில் தெரியவரும் என்பதால் தியேட்டர் ரிலீஸுக்காக மரண வெயிட்டிங்கில் இருக்கிறார்கள் கேஜிஎஃப் பிரியர்கள்.

image

கே.ஜி.எஃப் கன்னடம் தவிர்த்த மற்ற மொழிகளிலும் ரசிகர்களைக் கட்டிப் போதற்குக் காரணம், அந்தப் படத்தின் வசனங்களை மொழியாக்கம் செய்த விதம்தான். தமிழில் வசனங்களை எழுதியவர், 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தில் விஜய் சேதுபதி பாசத்துடன் அழைக்கும் நாகராஜ் அண்ணன்தான். குறிப்பாக, 'கேஜிஎஃப்' கதையைச் சொல்லும் கதாபாத்திரத்துக்கு கச்சிதமாகப் பொருந்தியதுடன், டெம்ப்பைக் கூட்டியது நிழல்கள் ரவியின் குரல்.

முதல் பாகம் தியேட்டரில் ரிலீஸானபோது, இந்த அளவுக்கு ரசிகர்களின் பேராதரவு கிடைக்கவில்லை. பின்னர், அமேஸான் பிரைமை அதிகமானோர் இன்ஸ்டால் செய்வதற்கே காரணமாக அமைந்தது கேஜிஎஃப்தான். குறிப்பாக, லாக்டவுண் காலத்தில் ஓடிடியில் அதிகம் பார்க்கப்பட்ட இந்தியப் படங்களில் முதன்மையான இடம் வகித்தது கேஜிஎஃப்.

மரண மாஸ் மசாலா சினிமாவை க்ளாஸ் ஆக எடுத்து விருந்து படைத்தால், அதை ரசிகர்கள் மொழி கடந்து கொண்டாடித் தீர்ப்பார்கள் என்பதற்கான இந்திய உதாரணம்தான் இந்தப் படம்.

பவர்ஃபுல் படங்களை பவர்ஃபுல் படைப்பாளிகளால்தான் எடுக்க முடியும் என்ற சரித்திரத்தைத் திருத்தி எழுதியது 'கேஜிஎஃப்'. ஆம், அதிகம் வர்த்தக ரீதியில் கவனிக்கப்படாத கன்னட சினிமா எனும் இடத்தை பவர்ஃபுல்லாக்கியிருக்கிறது, இந்த பவர்ஃபுல் கேஜிஎஃப் படைப்பாளிகள், நட்சத்திரங்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் டீம்.

ரத்தம் தெறிக்க தயாராகியிருக்கும் `கே.ஜி.எஃப் 2-ம் பாகத்தைக் காண ரசிகர்கள் வெறித்தன வெயிட்டிங். குறிப்பாக, 'பவர்ஃபுல் பீப்பிள் மேக் பவர்ஃபுல் ப்ளேசஸ்' என்ற டீசர் பஞ்ச், அத்தியாயம் இரண்டின் அட்டாகசத்துக்கு அச்சாரமாக அமைந்திருக்கிறது.

- மலையரசு


Advertisement

Advertisement
[X] Close