Published : 28,Jun 2017 02:48 PM

“தேசம் மருத்துவர்களை இழக்கும்”

Our-nation-will-lose-doctors-due-to-NEET

இந்தியாவில் சராசரியாக 2 ஆயிரம் பேருக்கு ஒரு மருத்துவர் இருக்கிறார். அவர்களில் 80 சதவீதம் பேர் நகர்ப்பகுதிகளில் உள்ளனர். இவர்களது மருத்துவத் தகுதியைப் பார்த்தால் சராசரிக்கும் கீழாகவே உள்ளது. உலக சுகாதார அமைப்பு விதிகளின் படி ஆயிரம் பேருக்கு குறைந்தது ஒரு மருத்துவராவது இருக்க வேண்டும். இதையே வேறுமாதிரியாகச் சொன்னால் இந்தியாவில் இன்னும் 5 லட்சம் மருத்துவர்களுக்கான தேவை இருக்கிறது. நீட் அல்லது தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வின் மூலம் தேசிய அளவில் தேர்வு செய்யப்பட்ட மருத்துவ மாணவர்கள் இந்த ஆண்டில் ஏறத்தாழ 64 ஆயிரம் பேர்தான்.

கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட நீட் தேர்வு முடிவுகள் தமிழகத்திற்கு அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது. முதல் 200 பேரில் தமிழக மாணவர் ஒருவர் கூட இல்லை. அதிக மதிப்பெண் எடுத்தவர் 261வது இடத்தில்தான் வந்திருக்கிறார். அருகில் உள்ள கேரளாவில் இருந்து முதல் 25 மாணவர்களில் மூன்று பேர் இடம் பிடித்திருக்கின்றனர். கர்நாடகத்தில் பெங்களூரு மாணவர் ஒருவர் நான்காவது இடத்தில் வந்திருக்கிறார். ஆந்திரா மற்றும் தெலங்கானா மாணவர்கள் முதல் பத்து இடங்களில் வரவில்லை. எனினும் 11வது இடத்தில் இருந்து 100வது இடத்திற்குள் 22 மாணவர்கள் வந்துள்ளனர். பஞ்சாப் மாணவர் முதல் இடத்திற்கும் மத்தியப் பிரதேச மாணவர்கள் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளனர்.

தமிழக மாணவர்கள் தேர்வை நன்கு எழுதாதது குறித்து இங்கு அவநம்பிக்கை நிலவுகிறது. இந்த விஷயத்தில் மாநில அரசுதான் குற்றவாளி என்பது மிகத் தெளிவு. அடுத்தடுத்து இரண்டு ஆண்டுகள் வெற்றிகரமாக நீட்டை தடுத்து நிறுத்தியதற்குப் பிறகு, இந்த ஆண்டும் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற்று விடலாம் என தமிழக அரசு உறுதி அளித்திருந்தது. மாநில அமைச்சர்கள் டெல்லிக்கும் சென்னைக்கும் இடையே போய் வந்து கொண்டிருந்தது, இந்த ஆண்டும் 12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவ இடங்களைப் பெற்று விடலாம் என்ற ஒரு பொய்யான நம்பிக்கையை மாணவர்களிடம் ஏற்படுத்தியது. எனவே அவர்கள் நீட் தேர்வுக்குத் தயாராகவில்லை அல்லது அரைகுறையாகத் தயாரானார்கள்.

மருத்துவர்களின் எண்ணிக்கைக்கும் தற்போதைய தேவைக்கும் இடையே தெளிவாக ஒரு பெரிய இடைவெளி நிலவுகிறது. இந்த இடைவெளியை நிரப்புவதற்கு, இந்திய கல்விக் கொள்கையானது, ஒருபுறம் உயர்கல்வியில் தரத்தையும் ஒரே சீரான தன்மையையும் பாதுகாக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. மற்றொருபுறம் பிராந்திய அளவில் போதுமான பிரதிநிதித்துவம் அளிப்பதில் ஒரே சீரான தன்மையையும் குறிப்பாக நகரம் மற்றும் கிராமங்களில் வசிக்கும் மருத்துவக் கனவில் உள்ள - தங்களின் சொந்த மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என நினைக்கும் - மாணவர்களுக்கு வாய்ப்புக்களை உருவாக்கவும் வேண்டியிருக்கிறது. 

தமிழக நீட் தேர்வு முடிவுகளை உதாரணத்திற்கு எடுத்துக் கொண்டால், மத்திய அரசும் மாநில அரசும் மாணவர்களைக் கைவிட்டு விட்டன என்றே சொல்ல வேண்டும். கல்வித்துறை மத்திய மற்றும் மாநிலப் பட்டியலில் (பொதுப்பட்டியலில்) உள்ளதால் அது தொடர்பான கொள்கை உருவாக்கம் மற்றும் அதை அமல்படுத்த வேண்டிய பொறுப்பு இரு அரசுகளுக்குமே உள்ளது. இந்திய அரசியல் சாசனம் தொடர்பான விளக்கம் ஒன்று பொதுப்பட்டியலில் உள்ள விஷயங்களில் “ ஒரே சீரான நிலை என்பது விரும்பத்தக்கது ஆனால் அத்தியாவசியமானது அல்ல” என கூறுகிறது. சிபிஎஸ்இ அல்லது மத்திய இடைநிலைக் கல்வித் தேர்வு வாரிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் நீட் தேர்வை நடத்துவதன் மூலம் மத்திய அரசு ஒரே சீரான தன்மையையும் வடிகட்டிய தரத்தையும் உத்தரவாதப்படுத்த முனைவதாகத் தோன்றுகிறது. ஆனால் இந்த நடவடிக்கைகளில் கிராமப்புற மாணவர்களுக்கு குறிப்பாக மாநில மொழிகளில் (மாநில பாடத்திட்டத்தின் கீழ்) படித்தவர்களுக்கு போதுமான பிரதிநிதித்துவம் இல்லாமல் போகிறது.

ஆங்கிலம் மற்றும் இந்தி தவிர இந்த ஆண்டு நீட் தேர்வு எட்டு மாநில மொழிகளிலும் நடத்தப்பட்டது. அதில் 80 சதவீதம் பேருக்கு மேல் ஆங்கிலத்திலும் 10.5 சதவீதம் பேர் இந்தியிலும் 9.5 சதவீதம் பேர் மட்டும் மாநில மொழிகளிலும் தேர்வை எழுதினர். அதில் 4.20 சதவீதம் பேர் குஜராத்தியிலும் 3 சதவீதம் பேர் பெங்காலியிலும் 1.33 சதவீதம் மட்டுமே தமிழிலும் தேர்வு எழுதினர். தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளில் எழுதியவர்கள் மிக மிகக் குறைவு. பிராந்திய மாணவர்கள் ஒரே சமயத்தில் இரண்டு பிரச்சனையை எதிர் கொண்டனர். சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது என்பது மட்டுமல்ல. மாநில மொழி கேள்வித்தாள்களில் இடம் பெற்றிருந்த கேள்விகள் மிகக் கடினமாக இருந்தன என்ற புகாரும் எழுந்தது. இது தொடர்பாக மாணவர் ஒருவர் மதுரை உயர்நீதிமன்றத்தைக் கூட அணுகினார். ஆனால் அவருக்கு நிவாரணம் கிடைக்கவில்லை.

பிரச்னையைக் கண்டுபிடிப்பது சுலபம்தான். 11 மற்றும் 12ம் வகுப்பு, மற்றும் ஒரு சில மாநிலங்களில் ஜூனியர் கல்லூரி என அழைக்கப்படும் வகுப்புகளில் மாநில பாடத் திட்டமும் மத்திய பாடத்திட்டமும் ஒரே மாதிரியாக இருக்கும் நிலையில், பாடப் புத்தகங்கள் மற்றும் அதில் இடம்பெற்றுள்ள பாடத்தில் மிகப்பெரிய வேறுபாடு இருக்கிறது. உதாரணமாக, மாநில பாடத்திட்ட புத்தகத்தில் ஒரே பாராவில் சுருக்கப்பட்டிருக்கும் ஒரு விஷயம், என்சிஇஆர்டி அல்லது சிபிஎஸ்இ பாடத்திட்ட புத்தகத்தில் நான்கு பக்கங்களுக்கு மேல் விவரிக்கப்பட்டிருக்கின்றன என்று ஒரு மாணவி குறிப்பிடுகிறார். 

ஆனால் எல்லாவற்றிற்கும் மேல் மிக முக்கியமான விஷயம் ஆசிரியர்கள் பாடங்களைச் சொல்லிக் கொடுக்கும் முறை. தமிழ்நாட்டில் பொருள் உணராமல் வெறும் மனப்பாடம் செய்வதற்கே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்பது தெளிவு. இது, பாடத்தின் அடியாழத்தில் உள்ள பொருளை விளக்கி பல்வேறு வகையிலான கேள்விகளுக்கும் பதில் அளிக்கும் விதத்தில் மாணவர்களைத் தயார் செய்வதை புறக்கணிக்கிறது. நீட் தேர்வில் நான்காம் இடத்தைப் பெற்ற பெங்களூரு மாணவர், பாடப் புத்தகத்திற்கு வெளியே, கோட்பாடுகள் அடிப்படையில் கேள்விகளுக்கு பதிலளித்ததுதான் தனது வெற்றிக்குக் காரணம் எனத் தெரிவித்திருக்கிறார்.

கல்வியாளர்கள் நீட் தேர்வு முடிவுகளை மாநில பாடத்திட்டத்தின் கீழ் படித்தவர்களின் தரவுகள் அடிப்படையில் அணுக வேண்டும். அது மாநில பாடத்திட்டம் அல்லது மாநில மொழிகளில் படித்த மாணவர்கள் எப்படி தேர்வை எழுதி இருகின்றனர், அவர்கள் பெற்ற பங்கு என்ன என்பது குறித்த தெளிவைக் கொடுக்கும். சில இடங்களில் மாநில பாடத்திட்டத்தில் படித்த மற்றும் பிராந்திய மாணவர்கள் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் அல்லது மிக முக்கியமாக ஆங்கில வழிப்பள்ளிகளில் படித்தவர்களோடு ஒப்பிடுகையில் மோசமாகத் தேர்வு எழுதி இருக்கின்றனர். அவர்களில் பிளஸ் டூ தேர்வில் 90 சதவீத மதிப்பெண்கள் பெற்றவர்களும் இருக்கிறார்கள். ஆனால் நீட் தேர்வில் அவர்களால் தேர்ச்சி பெறக் கூட முடியவில்லை.

ஒரு சில கல்வியாளர்கள், மாநில மாணவர்கள் அனேகம் பேர் தேர்வு எழுத விண்ணப்பிக்கக் கூட இல்லை என்று கூறுகின்றனர். உதாரணமாக தமிழ் வழிக்கல்வியில் பயின்றவர்களில் 3 லட்சம் பேர் பிளஸ்டூவில் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். அவர்களில் 15,026 மாணவர்கள் மட்டுமே நீட் தேர்வை தமிழில் எழுதி இருக்கின்றனர். இதே போல் தெலுங்கில் 1766 மாணவர்களும் கன்னடத்தில் 712 பேர் மட்டுமே தேர்வு எழுதி இருக்கின்றனர். 3 லட்சம் பேருமே மருத்துவ கனவில் இருந்திருப்பார்கள்  என்று எதிர்பார்க்க முடியாதுதான். ஆனால் அந்த கனவில் இருந்தவர்களால் கூட அதனை எட்டிப்பிடிக்க முடியவில்லை என்பது மட்டும் தெளிவாகிறது.

ஒரு புறம் மத்திய அரசு ஒரே சீரான நிலை என்று அடம்பிடித்துக் கொண்டிருக்கும் நிலையில், மாநிலங்களில் உள்ள அரசியல்வாதிகள் தரமான கல்வி பற்றியோ மாணவர்களின் எதிர்காலம் பற்றியோ மிகக் குறைவாகத்தான் கவனம் செலுத்துகின்றனர். மாநிலங்களில் கிடைக்கும் வெற்றிகளுக்கு கூட சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை நடத்தும் பள்ளிகள், அதிலும் குறிப்பாக நெய்வேலி போன்ற பொதுத்துறை நிறுவனங்களின் டவுன்ஷிப்பில் உள்ள பள்ளிகள் தான் காரணம் என்கிறார் கல்வியாளர் நெடுஞ்செழியன்.

முதல் இடத்தைப் பிடித்த பஞ்சாப் மாணவர் மாநில பாடத்திட்டத்தில் படித்தவர். அதே சமயத்தில் இரண்டு, மூன்று, நான்காவது இடத்தைப் பிடித்தவர்கள் சிபிஎஸ்இ பள்ளிகளில் படித்தவர்கள். எனினும் அரசுப் பள்ளிகளில் படித்த அவர்கள் அனைவரும் பிரத்யேக பயிற்சி வகுப்புகளுக்கு சென்றுள்ளனர். 

தென்மாநிலங்களில் உள்ள அரசியல்வாதிகளும் கல்வியாளர்களும் கிராமப்புற குழந்தைகள் மற்றும் குறிப்பாக மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்கள் அகில இந்திய போட்டித் தேர்வுகளின் போது பாதிக்கப்படுகின்றனர் என கொஞ்சம் புலம்பினாலும், இந்த நிலையைச் சீர்படுத்துவதற்கு அவர்கள் செய்திருப்பது கொஞ்சம்தான். மாநில மாணவர்களுக்கு 85 சதவீத ஒதுக்கீடு அளிக்கவும் மீதமுள்ள இடங்களை அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு ஒப்படைக்கவும் வகை செய்யும் சட்டத்திருத்தம் ஒன்றை சட்டமன்றத்தில் கொண்டு வர தமிழக அரசு தற்போது உத்தேசித்திருக்கிறது. தற்போது அவர்கள் கல்வித் தரத்தை உயர்த்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்பது தெளிவு. அதற்கு அவர்கள் பாடத்திட்டத்தை சீரமைக்க வேண்டும். பள்ளி நிர்வாகங்களிடம் பேச வேண்டும். ஆசிரியர்களை மேம்படுத்த வேண்டும். மறுபடி அவர்களுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும். எதார்த்தத்தை எதிர்கொள்ளும் திறனை வளர்க்க மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகளை நடத்த வேண்டும். இல்லையெனில் தேசம் மருத்துவர்களை இழக்கும். போதுமான சுகாதார வசதி இருக்காது.

 

 

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்