Published : 26,Jul 2020 02:18 PM
வடகொரியாவில் கொரோனா அறிகுறி : ஊரடங்கிற்கு உத்தரவிட்ட அதிபர் கிம் ஜாங் உன்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கோரத் தாண்டவம் ஆடி வரும் சூழலில் தங்கள் நாட்டில் கொரோனா பாதிப்பே இல்லை எனச் சொல்லி வந்தது வடகொரியா.
இந்நிலையில் தற்போது அங்கு தென்கொரியாவிலிருந்து, வடகொரிய நாட்டின் எல்லையில் அமைந்துள்ள கேசாங்க நகருக்குள் அத்துமீறி உள்ளே நுழைந்த நபர் ஒருவருக்கு கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டதால் அவரை தனிமைப்படுத்தியுள்ளனர். அவருக்கு கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதோடு அவருடன் கடந்த ஐந்து நாட்களாக தொடர்பிலிருந்த நபர்களையும் அடையாளம் கண்டு, அவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வடகொரிய அரசு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேசாங் நகர எல்லையை முழுவதுமாக மூடி சீல் வைக்க உத்தரவிட்டுள்ளார் அதிபர் கிம் ஜாங் உன். சுமார் இரண்டு லட்சம் மக்கள் வசிக்கின்ற கேசாங் பகுதியில் ஊரடங்கு உத்தரவையும் பிறப்பித்துள்ளார்.
கொரோனா பரவலைத் தடுக்க கடந்த ஜனவரி மாதம் முதலே வடகொரியாவில் தேசிய அவசரகால நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனால் அனைத்து எல்லைகளையும் அந்நாடு மூடியது. விமான போக்குவரத்துக்கும் தடை விதித்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.