Published : 20,Jun 2020 06:34 AM
தந்தையின் மகிழ்ச்சிக்காக சிலையை திருமணம் செய்துகொண்ட இளைஞர்: உத்தரப் பிரதேசத்தில் விநோதம்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் இளைஞர் ஒருவர் அவரது தந்தையின் மகிழ்ச்சிக்காக ஒரு சிலையை மணமுடித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் குர்பூர் கிராமத்திலுள்ள பைத்பூர் பகுதியைச் சேர்ந்தவர் பஞ்ச் ராஜ் (32). இவர் கடந்த செவ்வாய்க் கிழமை மாலை ஒரு சிலையை மணமுடித்துள்ளார். இது குறித்து பஞ்ச் ராஜின் தந்தையும் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியருமான சிவ மோகன் பால் கூறும்போது “ எனக்கும் மொத்தம் 9 மகன்கள், 3 மகள்கள். இதில் பஞ்ச் ராஜ்ஜை தவிர்த்து பிற அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. எட்டாவது மகனான பஞ்ச் ராஜ் கொஞ்சம் மன நிலை சரியில்லாதவன். அதனால் அவனுடைய சின்ன சின்ன வேலைகளை செய்வதற்கு கூட பிற நபர்களின் உதவித் தேவை.
அதனால் அவனுக்கு திருமணம் செய்து வைத்து ஒரு பெண்ணின் வாழ்வை நான் உருக்குலைக்க விரும்பவில்லை. ஆனால் அதேசமயம் எனது குடும்பத்தில் இவன் மட்டும் திருமணமாகதவனாக இருப்பதையும் நான் விரும்பவில்லை. அதனால் பூசாரிகளின் அறிவுரைப்படி அவனுக்கு ஒரு சிலையுடன் திருமணம் நடத்தி வைப்பதற்கு நாங்கள் முடிவு செய்தோம்.
எனது குழந்தைகளுக்கு எப்படி திருமணம் நடந்ததோ, அதே போல பஞ்ச் ராஜ்ஜுக்கும் திருமண ஏற்பாடுகளைச் செய்தோம். மண்டபத்தை அலங்கரித்தோம். எங்களது மதச் சடங்குகளின் படி பஞ்ச் ராஜ்ஜை வீட்டிலிருந்து அழைத்து, மணடபத்திற்கு கொண்டு சென்றோம். திருமணத்தில் இசைக்கப்பட்ட பாடல்களுக்கு நடனமும் ஆடினான். இந்து முறைப்படி மந்திரங்கள் ஓதப்பட்டு ராஜ்ஜுக்கும் சிலைக்கும் திருமணம் நடைபெற்றது” என்றார். இது குறித்து அவரின் குடும்பத்தினர் கூறும் போது “முதலில் திருமணத்திற்கு ஒத்துக்கொள்ளாத ராஜ் பின்னர் தந்தையின் மகிழ்ச்சிக்காக ஒப்புக்கொண்டுள்ளார்” என்றனர்.