[X] Close

தீயில் கருகும் மண்ணின் மகள்கள் - என்னவானது பாரதியின் கனவு?

Tamil-Poet-bharathiyar-s-view-on-Feminism

2020ம் ஆண்டில் கால்பதிக்க இன்னும் இருபது நாட்கள் மட்டுமே உள்ளன. இன்றும் பெண் சிசுக்கொலை, இன்றும் விதவைகள் மீதான சமூக பார்வை. இன்றும் இளம் வயது திருமணம். இன்றும் ஆணாதிக்க நிலை. இன்றும் இந்தியாவின் ஏதோ ஒரு மூலையில் பெண்கள் தீயில் எரிந்துகொண்டிருக்கிறார்கள். இன்றும் பெண்கள் போகப் பொருளாக பாவிக்கப்படுகிறார்கள். இன்றும் பெண்கள் இரண்டாம் நிலையில் இருக்கிறார்கள். இன்றும்.. இன்றும்... என்று பெண்கள் இன்னமும் இந்த உலகத்தில் சம உரிமைக்காகவும், தங்களை நிலைநிறுத்திக் கொள்வதற்காகவும் போராடிக்கொண்டு இருக்கிறார்கள் என்பதே உண்மை. 


Advertisement

இன்றைய நிலையே இப்படி என்றால், 19ம் நூற்றாண்டில் பெண்களின் நிலையை யோசித்துக்கொள்ளுங்கள். உடன்கட்டை ஏறுதல், விதவைகளின் மீதான இழிநிலை, கல்வி மறுப்பு, குழந்தை திருமணம் என இன்னல்களால் கோர்க்கப்பட்ட வலையில் பெண்கள் சிக்கித்தவித்த காலம் அது. பெண்கள் என்பவர்கள் மனிதர்களில் இரண்டாம் நிலை என்று தீர்க்கமாய் நம்பிய காலம். அன்று ஒரு புலவன் பெண்களுக்காக குரல் கொடுத்தான். பெண்களுக்காக பாட்டிசைத்தான். பெண்களுக்காக புரட்சி செய்தான். அவன்தான் பாரதி.


Advertisement

பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் - புவி
     பேணி வளர்த்திடும் ஈசன்;
மண்ணுக்குள்ளே சிலமூடர் - நல்ல
     மாதர் அறிவைக் கெடுத்தார்.

கண்கள் இரண்டினில் ஒன்றைக் - குத்தி
     காட்சி கெடுத்திட லாமோ?
பெண்கள் அறிவை வளர்த்தால் - வையம்
     பேதமை யற்றிடும் காணீர்

ஆணாதிக்க உலகில் நசுங்கிச்சாகும் பெண்களை கண்டு மனம் நொந்த பாரதி, தன் வீரிய எழுத்தாலும், சுடும் பாட்டாலும் பெண் விடுதலை குறித்து பாட்டிசைத்தான். எழுத்தில் அனல் கக்கி பெண்ணியம் படைத்தான். தான் கொண்ட சமூக சீர்திருத்த கருத்தில் பெண் விடுதலையை முதலாவதாக கொண்டிருந்தான் பாரதி.


Advertisement

’மண்ணுக்குள் எவ்வுயிரும் தெய்வ மென்றால், மனையாளும் தெய்வ மன்றோ?’ என்று பெண்ணை கடவுளுக்கு இணையாக பாடினான் பாரதி. கற்பு என்னும் ஒற்றைவார்த்தை இன்றும் பயன்பாட்டில் இருக்க அன்றே கற்பு என்று கூறாமல் கற்பு நிலை என்று பாட்டு எழுதிய புரட்சியாளன் தான் பாரதி. கற்பு நிலை என்று வைத்தால் அது பெண்ணை மட்டுமே சார்ந்தது இல்லை என்ற பாரதி, ’’கற்பு நிலை என்று சொல்ல வந்தார் இரு கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்’’ என்று ஆண் இனத்துக்கு அறிவூட்டினான். பெண்ணின் ஒழுக்கம் பேசும் ஆண் இனமும் தவறாமல் ஒழுக்கம் கடைபிடிக்க வேண்டும் என சாட்டை வீசினான் பாரதி.

பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
     பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்
எட்டும் அறிவினில் ஆணுக்கு இங்கேபெண்
     இளைப்பில்லை காண்

தன்னுடைய பத்திரிகைகளில் பெண் விடுதலையை பதித்தான் பாரதி. தான் கண்ட உலக பெண்கள் எப்படி முன்னேறி இருக்கிறார்கள் என எடுத்துக்கூறினான். அவனின் எழுத்து இந்தியாவில் மாற்றங்களை விதைக்க தொடங்கியது. பிற மொழி பெண் விடுதலை பாடல்களை தமிழில் மொழி பெயர்த்து கொடுத்தான். பெண் விடுதலை தொடர்பாக பாரதி விதைத்த தீவிர தொடக்கம் ஏற்படுத்திய விழிப்புணர்வு தமிழ் நாட்டில் ‘பெண் விடுதலைக் கட்சி’ தொடங்கவும் வழிவகை செய்தது. 

பெண்கள் முன்னேற்றத்திற்குரிய கடமைகளைச் செய்யத் தவறுபவர்கள் தேச விரோதிகள் என்றான் பாரதி. சமுதாயத்தில் பெண்கள் முன்னேற வேண்டுமென்றால் அவர்களுக்கு மூன்று வழிகள் உள்ளன. அவை 'கல்வி கல்வி கல்வி' என கல்வியின் தேவையை அழுந்தச்சொன்னான் பாரதி. பெண்ணுக்கு உரிமை வழங்காத சமுதாயம் முன்னேறாது என்று கூறிய பாரதி,  "பெண்கள் அறிவை வளர்த்தால் - வையம் பேதமையற்றிடும் காணீர்" என்று பாடினான்.

பெண்களுக்கு கல்வி கொடுக்க வேண்டும், ஆண்களுக்கு இணையாக பெண்கள் இருக்க வேண்டும், பணிக்கு செல்ல வேண்டும், அரசியலில் ஆளுமை செய்ய வேண்டும், வீரத்தில் சிறந்து விளங்க வேண்டும், சொத்தில் சம உரிமை கொடுக்க வேண்டும், திருமணத்தில் அவர்களுக்கு சுதந்திரம் வேண்டும், மறுமணம் செய்ய உரிமை வேண்டும் என பாரதி வகுத்த பெண் விடுதலை கோரிக்கைகள் இன்றும் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன என்பது மறுக்கமுடியாத, வருத்தமான உண்மை.

மாதர் தம்மை இழிவு செய்யும்
மடமை யைக்கொ ளுத்துவோம்
வைய வாழ்வு தன்னில் எந்த
வகையி னும்ந மக்குள்ளே
தாதர் என்ற நிலைமை மாறி
ஆண்க ளோடு பெண்களும்
சரிநி கர்ச மான மாக
வாழ்வம் இந்த நாட்டிலே

 

பெண் உயர்வு இல்லை என்றால் ஆண் உயர்வு இல்லை என்பதே பாரதியின் கூற்று. பெண்ணும் ஆணும் சமம் என்றால் தான் இவ்வுலகம் அறிவினில் தழைத்து முன்னேறும் என்று உலக முன்னேற்றத்தின் கருப்பொருளை பெண்களின் உரிமையில் தொடங்கிய பாரதியின் கனவு நினைவாக இன்னும் எத்தனை காலம் பிடிக்கும் என்பதே கேள்விக்குறி. பெண்களுக்கு இதையெல்லாம் கொடுங்கள் என்று பாரதி சொல்லிச்சென்ற எதுவும் இன்னும் முழுவதுமாக அவர்களிடம் சென்றுசேரவில்லை என்பது மறுப்பதற்கில்லை.  

இனியேனும் இங்கொரு பெண், ஆணாதிக்க உலகில் நசுங்கிச் சாக வேண்டாம். இனியேனும் ஏதோ ஒரு பெண் ஆண் வைக்கும் தீயில் கருகிச் சாய வேண்டாம். இனியேனும் ஒரு பெண் பாரதி பிறந்த இம்மண்ணில் கூனிக்குறுக வேண்டாம். இனி வரும் காலங்களில் இந்த உலகம் தழைக்க வேண்டுமென்றால் பாரதியின் கூற்றை நினைவில் வைப்போம். அது, 

ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
அறிவி லோங்கி இவ் வையம் தழைக்குமாம்.


Advertisement

Advertisement
[X] Close