Published : 25,Oct 2019 03:55 AM
மூன்றாவது தங்கம் வென்றார் தமிழக வீரர் ஆனந்தன் குணசேகரன்

உலக ராணுவ விளையாட்டு போட்டியில் மாற்றுத்திறனாளிகள் ஓட்டப் பந்தயத்தில் தமிழக வீரர் ஆனந்தன் குணசேகரன் மூன்றாவது தங்கம் வென்றார்.
சர்வதேச ராணுவத்திற்கான விளையாட்டு போட்டிகள் சீனாவின் வூஹான் நகரில் நடைபெற்று வருகின்றன. 140 நாடுகளில் இருந்து 9,308 ராணுவத்தினர் இந்தப் போட்டிகளில் கலந்து கொள்கின்றனர். அதில் மாற்றுத்திறனாளி வீரர்களுக்கான பாரா தடகளப் போட்டியில் இந்தியாவின் தமிழக வீரர் ஆனந்தன் குணசேகரன் கலந்து கொண்டார்.
200 மீட்டர் ஓட்டப்பந்தய தூரத்தை 24.31 விநாடிகளில் கடந்து தங்கப்பதக்கத்தை வென்றார். இவர் வெல்லும் 3 வது தங்கப்பதக்கம் இதுவாகும். கொலம்பியாவின் பஜார்டோ பார்டோ தியோடிசெலோ 26.11 விநாடிகளில் வெள்ளிப்பதக்கமும் பெரு நாட்டின் காஸா ஜோஸ் 27.33 விநாடிகளில் கடந்து வெண்கலப்பதக்கமும் வென்றனர்.
தற்போது நடக்கும் ராணுவ விளையாட்டு போட்டியில் 100மீ, மற்றும் 400 மீட்டர் ஓட்டத்தில் ஆனந்தன் குணசேகரன் தங்கம் வென்றிருந்தார்.
ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் வாரணாசியை சேர்ந்த ஷிவ்பால், 83.33 மீட்டர் தூரம் எறிந்து தங்கம் வென்றார். போலந்தின் க்ருகோவ்ஸ்கி மார்சின் வெள்ளிப்பதக்கமும், இலங்கையின் ரணசிங்க வெங்கலப்பதக்கமும் பெற்றனர். துப்பாக்கிச்சுடுதலில் 25 மீட்டர் செண்டிரல் பயர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் குர்பிரீத் சிங், 585 புள்ளிகள் பெற்று வெண்கலம் வென்றார்.
குண்டு எறிதலில் இந்திய வீரர்கள் அனீஷ் குமார், விரேந்தர் இருவரும் வெவ்வேறு பிரிவுகளில் தங்கம் கைப்பற்றினர். இதுவரை நடந்த போட்டிகளில் இந்தியா மொத்தம் 7 பதக்கங்களை வென்றுள்ளது. அதில் 6 தங்கமும் 1 வெங்கலமும் அடங்கும்.