Published : 07,Jan 2019 12:28 PM
அரசு அலுவலகங்களை அடித்து நொறுக்கிய போராட்டக்காரர்கள் - பற்றி எரியும் பாரீஸ்

பிரான்சின் மஞ்சள் அங்கி போராட்டம் மீண்டும் வலுப்பெற்றதால் பல இடங்களில் வன்முறை வெடித்தது.
சுற்றுச்சூழலை காரணம் காட்டி பெட்ரோல், டீசலுக்கான வரியை பிரான்ஸ் அரசு உயர்த்தியதை அடுத்து அந்நாட்டில் போராட்டம் வெடித்தது. முதலில் இந்தப் போராட்டத்தை கார் ஓட்டுநர்கள்தான் ஆரம்பித்தனர். பின்னர், அது மக்கள் போராட்டமாக மாறியது. கார் ஓட்டுநர்கள் தொடங்கியதால், அவர்களின் மஞ்சள் அங்கியை போராட்டக்காரர்களும் அணிந்து கொண்டனர். இதனால், அது மஞ்சள் அங்கி போராட்டம் என்று அழைக்கப்பட்டது. மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பின் தங்கிய நிலைக்கு சென்றதே போராட்டத்திற்கு காரணம் என்று கூறப்பட்டது.
சுமார் ஒரு மாத காலம் நீடித்த மஞ்சள் அங்கி போராட்டம் பிரான்ஸ் தலைநகர் பாரீஸையே ஸ்தம்பிக்க வைத்தது. போராட்டங்கள் பல இடங்களில் வன்முறையில் முடிந்தது. நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். சிலர் போராட்டத்தின் போது உயிரிழந்தனர். தொடர் போராட்டம் காரணமாக பிரான்ஸ் அரசு பணிந்தது. வரி உயர்வை ரத்து செய்வதாக அறிவித்தது. இதனால், போராட்டங்கள் சற்று ஓய்ந்தன.
இருப்பினும் அதிபர் மக்ரோன் பதவி விலக வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வார இறுதி நாட்களில் ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் குதிப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர். இந்நிலையில், 8 ஆவது வாரமாக ஞாயிற்றுக்கிழமையான நேற்று மீண்டும் பெண்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் போராட்டம் நடத்தியதால் பாரிஸ் நகரமே ஸ்தம்பித்தது. சுமார் 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
கடந்த வாரம் டிசம்பர் 29ம் தேதி 29 ஆயிரம் கலந்து கொண்ட நிலையில், இந்த வாரம் இருமடங்கு அதிகரித்துள்ளது. போராட்டக்காரர்கள் அரசு அமைச்சகம் உள்ள சாலைகளை முற்றுகையிட்டனர். இந்தப் போராட்டம் வன்முறையில் முடிந்தது. போராட்டக்காரர்கள் அமைச்சக வளாகத்தின் கதவுகளையும் அடித்து நொறுக்கினர். சில இடங்களில் நதி நீர் வழியாக பணக்காரர்கள் இருக்கும் இடங்களுக்குச் சென்று, அவர்களின் வாகனங்களுக்கு தீ வைத்தனர். அவர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி களைக்க முயன்றனர்.