Published : 03,Jan 2019 06:09 AM
‘ரவுடிகளாக’ மாற முன்னாள் ரவுடியை கொன்ற கும்பல் : போலீஸ் வலைவீச்சு

சென்னையில் ரவுடி எனப் பெயர் வாங்குவதற்காக முன்னாள் ரவுடியை வெட்டிக் கொலை செய்தவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
சென்னை அண்ணாநகரில் உள்ள அன்னை சத்யாநகரைச் சேர்ந்தவர் சந்தானம். ரவுடியாக இருந்த இவர் திருந்தி வாழ்ந்து வந்ததாக தெரிகிறது. சுவருக்கு வண்ணம் பூசும் வேலை செய்து வந்த சந்தானம் பணி முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அன்னை சத்யாநகரைச் சேர்ந்த ராபர்ட், அவரது சகோதரர் ஜோசப் மற்றும் கூட்டாளிகள் ஆகியோர் சந்தானத்தை வழிமறித்துள்ளனர்.
அத்துடன் அவர் முகத்தில் மிளகாய்ப்பொடி தூவி வெட்டிக் கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ராபர்ட் மற்றும் ஜோசப் ஆகியோர் சிறு, சிறு தவறுகளை செய்து வந்ததாக தெரிகிறது. ரவுடித்தனத்தை விட்டுவிடும்படி அவர்களுக்கு சந்தானம் அறிவுரை கூறியதாக சொல்லப்படுகிறது. ஆனால் முன்னாள் ரவுடியான சந்தானத்தை கொலை செய்தால், தாங்கள் பெரிய ரவுடியாகலாம் என்ற எண்ணத்தில் ராபர்ட் உள்ளிட்டோர் அவரை கொலை செய்ததாக கூறப்படுகிறது. கொலை செய்த நபர்களை தற்போது காவல்துறையினர் தேடி வருகின்றனர்.