Published : 10,Dec 2018 06:56 AM

ஆஸி.யில் சாதனை வெற்றி: இந்திய கிரிக்கெட் அணிக்கு குவிகிறது பாராட்டு!

Sachin--Sehwag-Laud-Team-India-s-Historical-win-in-Adelaide

ஆஸ்திரேலியாவில் சாதனை வெற்றி பெற்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு முன்னாள் வீரர்கள் உட்பட பலர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின் றனர்.

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, அடிலெய்டில் நடந்து வந்தது. முதலில் பேட் செய்த இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 250 ரன்கள் எடுத்தது. புஜாரா 123 ரன்கள் எடுத்தார். பின்னர் தனது முதல் இன்னிங்சை துவங்கிய ஆஸ்தி ரேலிய அணி 235 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. அஸ்வின், பும்ரா தலா 3 விக்கெட்டை வீழ்த்தினர்.

அடுத்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 307 ரன் எடுத்தது. புஜாரா 71 ரன்களும் ரஹானே 70 ரன்களும் எடுத்தனர். ஆஸ்திரேலிய தரப்பில் நாதன் லியான் 6 விக்கெட் வீழ்த்தினார். இந்திய அணி 323 ரன் முன்னிலை பெற்றிருந்த நிலையில், ஆஸ்திரேலிய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. 

நான்காம் நாளான நேற்று அந்த அணி 4 விக்கெட் இழப்புக்கு 104 ரன்கள் எடுத்திருந்தது. மார்ஷ் 31 ரன்னுடனும் டிராவிஸ் ஹெட் 11 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இந்திய தரப்பில் அஸ்வின், ஷமி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தனர். கடைசி நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. 323 ரன் என்ற வெற்றி இலக்கை நோக்கி ஆடிய அந்த அணியால் 291 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதையடுத்து 31 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி சாதனை வெற்றி பெற்றது. இந்திய தரப்பில் அஸ்வின், பும்ரா, ஷமி தலா 3 விக்கெட்டும் இஷாந்த் சர்மா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

இந்திய அணி 12 வது முறையாக ஆஸ்திரேலியாவில் இப்போது சுற்றுப்பயணம் செய்து வருகிறது. இதற்கு முன் வந்த 11 முறையும், முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதில்லை. இப்போது அந்த வரலாற்றை மாற்றி வெற்றியுடன் இந்த தொடரைத் தொடங்கியுள்ளது இந்திய அணி. ஆட்ட நாயகன் விருது புஜாராவுக்கு வழங்கப்பட்டது.

வரலாற்று சிறப்புமிக்க வெற்றி பெற்ற இந்திய அணிக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்துவருகிறது. முன்னாள் வீரர்கள் பலரும் அணிக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ரசிகர்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

சச்சின் டெண்டுல்கர் , ‘’தொடரை சிறப்பாக தொடங்கியிருக்கிறது இந்திய அணி. அழுத்தத்தை ஒருபோதும் விட்டுவிடக் கூடாது. புஜாராவும் ரஹானேவும் இரண்டு இன்னிங்ஸிலும் சிறப்பாக பேட்டிங் செய்தனர். 4 பந்துவீச்சாளர்களும் தங்கள் பங்களிப்பை அர்ப்பணிப்புடன் செய்துள்ளனர். இதைப் பார்க்கும்போது, 2003-ம் ஆண்டு நடந்த போட்டி நினைவுக்கு வந்தது’’ என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

வீரேந்திர சேவாக், ‘’டெஸ்ட் கிரிக்கெட்தான் பெஸ்ட் கிரிக்கெட். கடைசி கட்டத்தில் ஆஸ்திரேலியாவும் கடுமையாகப் போராடியது. முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட் இழப்புக்கு 41 ரன்கள் என்ற நிலையில் இருந்த இந்திய அணி, வென்றிருப்பது சிறப்பாகும். புஜாராவும் பந்துவீச் சாளர்களும் நன்றாக செயல்பட்டார்கள். இது சிறந்த தொடராக இருக்கும் என்பது உறுதி’’ என்று தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் விமர்சகரும் வர்ணனையாளருமான ஹர்ஷா போக்ளே, ‘’ ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வெற்றிபெறுவது அரிதானது. இந்த போட்டி கிரிக்கெட்டின் அற்புதம். இது, நீண்டநாள் நினைவில் இருக்கும். கடினமான போட்டிகள் எப்போதும் மறக்க முடியாததாக இருக்கும்’’ என்று தெரிவித்துள்ளார். 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்