Published : 30,Oct 2018 02:14 PM

கதை திருட்டில் தமிழ் சினிமா: கடந்து வந்த பாதை

story-theft-issue-in-tamil-cinema--special-article

கடந்த சில வாரங்களாக தமிழ் சினிமாவில் நடைபெற்று வந்த சடுகுடு சண்டை சமாதானத்திற்கு வந்திருக்கிறது. கடைசியில் ‘சர்கார்’ படத்தில் வருண் ராஜேந்திரனுக்கு நன்றி கூறப்படும் என்று வீடியோ வெளியீட்டுள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ். முதன்முறையாக ஒரு உதவி இயக்குநருக்கு தமிழ் சினிமாவில் நியாயம் கிடைத்திருக்கிறது என சமூக வலைத்தளங்களில் கருத்து பகிர்ந்து வருகின்றனர் பல திரை ரசிகர்கள்.

கதை யாருடையது? உண்மையில் திருடப்பட்டதா? என்ற எந்தக் கேள்விக்கும் உரிய பதில் நீதிமன்றதின் மூலம் தெளிவுபடுத்தப்பட வாய்ப்பில்லாமலே போய் விட்டது. அதாவது நீதிமன்றத்திற்கு வெளியேவே நடந்த சமரச முயற்சி மூலம் ஒரு முடிவு கிடைத்திருக்கிறது அவ்வளவுதான். ஆனால் யார் மீதும் வைக்கப்பட்ட குற்றச்சாட்டு முழுவதுமாக துடைக்கப்படவில்லை என்பதாகவே பலரும் இந்த விஷயத்தை அணுக முன்வந்திருக்கிறார்கள்.

உச்ச நடிகர் விஜய்யின் படம் வெளியாவதற்கு முன்னால் ‘கதைத் திருட்டு’ குற்றச்சாட்டு வலுவாக முன்வைக்கப்பட்டு வருகிறது. சினிமா வட்டாரத்தில் தனக்கு தோன்றும் கதையை வாய்ப்பு தேடி அலையும் ஒரு உதவி இயக்குநர் சகட்டு மேனியாக பலரிடம் பகிர்ந்து கொள்வது வாடிக்கையானதுதான். முதலில் ஒன்லைன் போல விளக்கும் பலர் பேச்சு சுவாரஸ்யத்தில் முழுக் கதையையும் போட்டு உடைத்துவிடுவது சகஜம். அது அங்கு சுற்றி இங்கு சுற்றி யாரோ ஒருவரின் கைக்கு போய் பிறகு திரைப்படமாகவே வெளியாகிவிடுவது மிக சகஜம். 

சில ஆண்டுகள் முன்பாக வெளியான ‘கன்னா லட்டு தின்ன ஆசையா’ படத்தின் கதை அப்பட்டமாக தன்னுடைய ‘இன்று போய் நாளை வா’ திரைக்கதையின் திருட்டு என குற்றம்சாட்டி இருந்தார் இயக்குநர் பாக்யராஜ். அதனை முதலில் மறுத்த படக்குழு பல கட்ட போராட்டத்திற்குப் பிறகு டைட்டிலில் கதைக்கு நன்றி போட்டு பிரச்னையை முடிவுக்கு கொண்டு வந்தார்கள்.

அன்று பாக்யராஜ் பாதிக்கப்பட்டார். இன்று அவரது உதவி இயக்குநர் வருண் ராஜேந்திரன் பாதிக்கப்பட்டிருக்கிறார். தன்னுடைய ‘செங்கோல்’ கதையும் ‘சர்கார்’ கதையும் ஒன்றேதான் என நீதிமன்றம் போய் நின்றார். அவருக்கு பக்கபலமாக நின்று பாக்யராஜ் குரல் கொடுக்க சிறிய அளவில் ஒரு நீதி தனக்கு கிடைத்திருப்பதாக வருண் வாய் திறந்துள்ளார். 

இதற்கு முன்பே முருகதாஸின் ‘கத்தி’ கதை திருட்டு குற்றச்சாட்டில் சிக்கியது. மீஞ்சூர் கோபி அந்தக் குற்றச்சாட்டை முன் வைத்த போது பலரும் பரபரப்பானார்கள். கோபி இப்போது ‘அறம்’ மூலம் புது வாழ்க்கையை எட்டிவிட்டார். ஆனாலும் இந்த ‘சர்கார்’ பிரச்னையில் பலரும் ‘கத்தி’ சர்ச்சையை கையில் எடுத்து கருத்து கூறி வருகிறார்கள். சமூக வலைத்தளத்தில் இந்த இரண்டு மூன்று நாட்களாக அதிகம் விவாதிக்கப்படுபரவர்கள் இருவர். ஒருவர், முருகதாஸ். இரண்டாவது, அட்லீ. இந்தச் சர்ச்சையில் அவரை மீம்ஸ் போட்டு பலரும் விமர்சித்து வருகிறார்கள். தமிழ் சினிமா கதையையே அப்படியே உல்டாவாக மாற்றிக் கொடுத்துவிடுகிறார் அட்லி என பலரும் ஆதங்கப்படுவதை பார்க்க முடிகிறது.

சில மாதங்கள் முன்பு  ‘போகன்’ கதை களவு போய்விட்டதாக  ஆண்டனி என்பவர் காவல்துறைவரை போனார். அவர் ‘வீடியோ பைரசி செல்’ இலாக்காவில் புகார் கொடுத்த பிறகு தனக்கு கொலை மிரட்டல் வருவதாக செய்தியாளர்களை சந்தித்து கதறினார். அந்தக் கதை எப்படி வெளியே போனது. தான் கதை சொன்ன தயாரிப்பாளரின் உதவியாளர் மூலமாகவே இறுதியில் இந்தத் திருட்டு நடந்திருப்பதாக அவர் அம்பலப்படுத்தினார். ஆனால் இவரது பிரச்னை என்ன ஆனது என்றே பலருக்கும் தெரியாமல் போனது. 

இந்தப் பிரச்னையின் அடுத்த கட்டமாக ‘96’ படத்தின் கதை என்னுடையது என புகாரை எழுப்பி இருக்குறார் பாரதிராஜாவின் உதவி இயக்குநர் சுரேஷ். அவரது கதையை பாரதிராஜாவே ‘பால்பாண்டி பாரதி’ என்ற தலைப்பில் எடுப்பதற்கான முயற்சிகள் நடந்ததாகவும் அது கைகூடாத போது வேறு ஒரு நண்பரான மருதுபாண்டியன் மூலம் ‘96’ இயக்குநர் பிரேம்குமாருக்கு சென்றதாகவும் அவர் குற்றம்சுமத்தியுள்ளார். அதை முற்றிலும் மறுத்துள்ளார் பிரேம்குமார். தேவை என்றால் நீதிமன்றம் போக அவர் வலியுறுத்தியுள்ளார். அங்கு வந்து தன் தரப்பை அவர் விளக்க தயாராக உள்ளதாக பேசியுள்ளார்.

இதே போல ரஜினியின் ‘லிங்கா’ படத்தின் கதை தன்னுடையது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையை அணுகினார் கே.வி.ரவிரத்தினம். அவரது மனுவிற்கு பதில் மனு தாக்கல் செய்த ரஜினி, “தனது புகழுக்கு களங்கம் விளைவிக்கும் செயல் இது” என்று கூறி மனுவை மறுத்திருந்தார். அதாவது மொத்தம் 13 காட்சிகள் அடுத்தடுத்து தன் கதையில் வருவதைபோலவே ஒன்றுபோல் உள்ளது என்றார் ரவி. ஒரு உச்ச நடிகர் படத்தின் கதையே தழுவல் என ஒருவர் குற்றம்சாட்டி நீதிமன்றம் போய் இருக்கிறார். 

இந்த மாதிரி ஒரு பிரச்னை ரஜினியின் ‘எந்திரன்’ கதைக்கும் வந்தது. உயர்நீதிமன்றம் இந்தப் பிரச்னையில் இயக்குநர் ஷங்கரை ஆஜராக சொல்லி கேட்டது. அதற்கு பதிலாக அவரது உதவி இயக்குநர் ஆஜரானபோது அதை கண்டித்தது. 2010ல் ஆரம்பித்த இந்தப் பிரச்னை கடந்த 7 ஆண்டுகளையும் தாண்டி நீண்டுக் கொண்டுள்ளது. இதன் பிறகு ஒன்றன் பின் ஒன்றாக பல கதைத் திருட்டு புகார்களை தமிழ் சினிமா கண்டுவிட்டது. ‘கத்தி’யில் ஆரம்பித்து ‘சர்கார்’வரை அது தன் வரலாற்றை அழுத்தமாக பதிய வைத்திருக்கிறது.

ஆனால் இந்தக் கதைத் திருட்டுக்கு ஒருமுறையான சட்ட விதிமுறைகள் தெளிவாக இல்லை. காபிரைட்ஸ் ஆக்ட் படி பல சட்டவிதிகள் இருந்தாலும் அதை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை மிகமிகக் குறைவாகதான் உள்ளது. கதைத் திருட்டுக்காக பலர் நீதிமன்ற படிக்கட்டுகளை மிதித்துக் கொண்டிருந்தபோதுதான் ‘இசை திருட்டுக்காக’ இளையராஜா நீதினம்றம் போனார். ஆக, எதோ ஒருவகையில் யாரோ ஒருவரை ஒருவர் சுரண்டிக் கொண்டுதான் இருக்கிறார்கள் என கவலை அடைகிறார் ஒரு மூத்த தயாரிப்பாளர். 

ஆனால் தமிழ் சினிமாவின் வியாபாரம் அவ்வளவு நியாயமாக இல்லை என்று திரை ரசிகர்கள் கருத்து கூறுகிறார்கள். தங்களின் கதைத் திருட்டுக்காக நீதி கேட்டு போராடும் இவர்கள்தான் ஹாலிவுட் படங்களை அப்பட்டமாக காப்பி அடிக்கிறார்கள் என அவர்கள் குற்றம் சுமத்துகிறார்கள். அதற்கு அவர்கள் தரும் விளக்கம் மிக சுவாரஸ்யமானது. தமிழ் சினிமாவில் பெரும் பெயரை சம்பாதித்த பல படங்கள் அச்சு அசல் காப்பி. அதாவது சினிமா பாஷையில் சொன்னால் copycat movie. அது கமல்ஹாசன் நடித்த ‘அவ்வை சண்முகி’யில் ஆரம்பித்து ‘தெகிடி’ வரை ஒரு நீண்ட பட்டியல் உள்ளது. ‘MRS.DOUBTFIRE' படத்தை அப்படியே தமிழில் copycat செய்திருந்தது ‘அவ்வை சண்முகி’. 

இன்று ‘சர்கார்’ புகாரில் சிக்கி இருக்கும் ஏ.ஆர்.முருகதாஸ் எடுத்த ‘கஜினி’ அப்படியே ‘மெமெண்டோ’ படத்தின் தழுவல்தான். தமிழ் சினிமாவின் திசையை திருப்பியதாக கூறப்பட்ட ‘ஜிகர்தண்டா’ படம் ‘தி டிர்டி கார்னிவல்’ படத்தின் copycat தான். ‘பிக்’ படத்தை தழுவி எஸ்.ஜே.சூர்யா ‘நியூ’ எடுத்தார். ‘ஐ யாம் சாம்’ படத்தை தழுவி ஏ.எல்.விஜய் ‘தெய்வதிருமகள்’ எடுத்தார். ‘கேட்ச் மீ ஈஃப் யு கேன்’ படத்தை பார்த்தவர்கள் சூர்யாவின் ‘அயன்’ படத்தை பார்த்துவிட்டு அரண்டு போய் உட்கார்ந்திருந்தார்கள். அந்தக் கதையும் இந்தக் கதையும் அப்படியே ஒன்று என்பது அவர்களை வாயடைக்க செய்திருந்தது. ‘பேட்ச் ஆடம்ஸ்’ படத்தை தமிழில் அப்படியே ‘வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்’ ஆக எடுத்த போது எந்த ஹாலிவுட் நிறுவனமும் கதை திருட்டுக்காக காவல்துறைக்கு போகவில்லை. நீதிமன்றத்தை நாடவில்லை. ஆனால் இந்தக் கதைகள் எதுவும் தங்களின் சொந்தக் கதை என மற்றவர்கள் கூற முடியாதபடி தழுவி இருந்தார்கள் அத்தனை இயக்குநர்களும். 

இப்படி  ‘கிகுகிரோ’அப்படியே ‘நந்ததாலா’வாக மாறியது. தமிழ் சினிமா இயகுநர்கள் மசாலா படத்தை கூட தங்களின் உழைப்பில் எடுப்பதில்லை என்கிறார் ஒருவர். ‘ஜட்ஜ்மெண்ட் நைட்’படத்தை அப்படியே ‘சரோஜா’ ஆனது. ‘ஸ்டேட் ஆஃப் பிளே’ அப்படியே ‘கோ’ ஆனது. காமெடி கதை என கூறப்பட்ட ‘கலகலப்பு’கூட ‘சோல் கிட்சன்’ படத்தின் copycat என்பது பலருக்கும் தெரியாது. இப்படி சினிமா புராணத்தை புரட்டிக் கொண்டே போகலாம்.

இந்தத் தகவல்களை ஒட்டுக்க படிக்கும் போது தமிழ் சினிமாவின் நிலைமை எப்படி போய்க் கொண்டிருக்கிறது என்பதை புரிந்துக் கொள்ளலாம். ஆனால், ‘உத்தமவில்லன்’ படத்தின் வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன் ‘ஒரு நல்ல விஷயம் வேறு ஊரில் இருந்தால் அதை தமிழிக்கு கொண்டு வரலாம்’ எனக் கூறியிருந்தார். எடுத்து வரலாம். ஆனால் அதனை முறையாக சினிமாக்காரர்கள் செய்கிறார்களா என கொதிக்கிறார் ஒரு திரை விமர்சகர். அதற்கான பதிலை சினிமா துறைதான் கொடுக்க முடியும். 

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்