[X] Close

அன்று; நடந்தாய் வாழி காவேரி.. இன்று; வறண்ட காவேரியான கதை  

The-story-of-the-Cauvery

கர்நாடக மாநிலம் குடகு மலையில் தலைக்காவிரியாக பிறந்து தமிழகத்தின் பூம்புகாரில் வங்கக்கடலில் கலக்கிறது காவிரி. சுமார் 800கி.மீ பறந்து விரிந்து தான் பாயும் பகுதிகளில் எல்லாம் வளத்தை அள்ளித்தெளிக்கிறது காவிரி. தமிழகத்தின் நிலத்தடி நீர் ஆதாரத்திற்கு காவிரி முக்கிய பங்கு வகிக்கிறது. தமிழ்நாட்டில் தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம் மாவட்டங்களின் வழியே தனது பயணத்தை காவிரி மேற்கொள்கிறது. தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை மாவட்டத்தின் உயிர்நாடியே காவிரிதான். சங்க இலக்கியங்களே இதற்கு சான்று.

காவிரி சிறப்பு பற்றி பட்டினப்பாலையில் வரும் பாடல் இது:

“வசையில்புகழ் வயங்குவெண்மீன்
திசைதிரிந்து தெற்கேகினும்
தற்பாடிய தளியுணவிற்
புட்டேம்பப் புயன்மாறி 
வான்பொய்ப்பினும் தான்பொய்யா    
மலைத்தலைய கடற்காவிரி 
புனல்பரந்து பொன்கொழிக்கும்”
என்ன அழகான வரிகள். அதாவது வான் பொய்த்தாலு கூட தான் பொழிக்கமாட்டாளாம். அந்தளவுக்கு வற்றாத அன்னை அவள் என்கிறார் கடியலூர் உருத்திரங்கண்ணனார். மழை இல்லாவிட்டாலும் காவிரியில் நீர் வரும். வந்து வயலில் பொன்போல் விளைச்சல் கொழிக்குமாம். சூரியன் திசை மாறி சென்றாலும் வானம் மழைத்தரத் தவறினாலும். காவிரியில் புனல் பாய்ந்து விளைச்சல் வீடு வந்து குவியும் என்கிறது இப்பாடல். 


Advertisement

அதேபோல் சிலப்பதிகார காதை கருக் கொண்ட கடல் காவிரிப்பூம்பட்டினம். நாட்டின் வளம், மக்களின் பண்பாடு என பலவும் பேசப்படும் காப்பியம். அதில் வரும் பாடல் இது: 

“பூவார் சோலை மயில் ஆடப் புரிந்து
குயில்கள் இசைபாடக்
காமர் மாலை அருகு அசைய நடந்தாய்
வாழி காவேரி” 

அதாவது பூக்கள் மலிந்த சோலையில் மயில்கள் ஆடும்; குயில்கள் விரும்பி இனிதாக இசை பாடும்: விருப்பம் விளைவிக்கும் மாலைகள் அருகிலே அசையும்; இவற்றினூடே காவிரியும் நடந்ததாகவும், காவிரி நெடுநாள் வாழ வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. 


Advertisement

இப்படி இலக்கியமும், புராணமும் புகழ்ந்த காவிரி இன்று தனது இயல்பை இழந்து காணப்படுகிறது. இருகரைகள் நெடுகிலும் தண்ணீர் பாய்ந்த காவிரியில் தற்போது மணல்களை மட்டுமே காணமுடிகிறது. நடந்தாய் வாழி காவிரி இன்று வறண்டாய் காவிரியாகி நிற்கிறது. இருந்த மணல்களும் அள்ளப்பட்டு அழிவை எட்டி வருவதும் வேதனைக்குரிய விஷயமாகும். 

ஒகேனக்கல் வழியாக தமிழகம் வரும் காவிரி, மேட்டூர் அணையில் தேக்கி வைக்கப்படுகிறது. அங்கிருந்து வெளிவரும் காவிரியுடன் பவானி ஆறு கலக்கிறது. ஈரோடு நகரை கடந்து கொடுமுடியில் பாயும்போது அதனுடன் நொய்யல் ஆறும் கலக்கிறது. கரூரில் பாயும் அமராவதி ஆறு கட்டளை எனுமிடத்தில் காவிரியுடன் கலக்கிறது. கரூரில் இருந்து திருச்சி நோக்கி பாய்ந்து வரும் காவிரி அதன் தோற்றத்தின் காரணமாக அகண்ட காவிரி என அழைக்கப்படுகிறது. திருச்சி முக்கொம்பு எனுமிடத்தில் அமைந்துள்ள மேலணை காவிரியை தடுக்கிறது. இங்கிருந்து காவிரி ஆறு இரண்டு கிளைகளாக பிரிகிறது. காவிரியில் இருந்து பிரியும் கிளை ஆறுக்கு கொள்ளிடம் என்று பெயர். 

மழைக்காலங்களில் ஆறுகளில் ஏற்படும் வெள்ளப்பெருக்கை தடுக்கவே இரண்டு கிளைகளாக காவிரி பிரிக்கப்பட்டுள்ளது.பொதுவாக வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில் மட்டுமே கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படும்.மற்ற காலங்களில் கொள்ளிடம் வறட்சியுடனே காணப்படும். காவிரியில் திருச்சி அருகே குடமுருட்டி ஆறும் கலக்கிறது.

திருச்சியில் தீவை உருவாக்கும் காவிரி
 

காவிரி மட்டும் கொள்ளிடம் ஆறுகள் திருச்சி மாநகரில் பாயும் போது இதற்கு நடுவே ஸ்ரீரங்கம் (திருவரங்கம்) தீவை உண்டாக்குகிறது. மழைக்காலங்களில் திருச்சி உச்சிபிள்ளையார் கோயிலில் இருந்து இருபுறங்களிலும் நீரால் சூழப்பட்டிருக்கும் ஸ்ரீரங்கத்தை பார்க்கும் போது ரம்மியமாக இருக்கும். ஸ்ரீரங்கத்தில் உயர்ந்து நிற்கும் ஸ்ரீரங்கநாதர் கோயில் கோபுரங்கள் மேலும் அழகை சேர்க்கிறது.

இங்கிருந்து பாயும் காவிரி ஆறு கல்லணையை அடைகிறது. இந்த அணை கரிகாலன் என்ற சோழ மன்னனால் 2ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. தற்போதுள்ள அணைகளில் கல்லணை மிகப் பழமையானது. இது உலகின் மிகப்பழமையான நீர்ப்பாசனத் திட்டம் என்றும் கூறப்படுகிறது.இங்கிருந்து பாயும் காவிரிதான் தஞ்சைக்கு வளம் சேர்க்கிறது. இந்த அணைதான் காவிரி, வெண்ணாறு,புதுஆறு, கொள்ளிடம் என நான்காக பிரிக்கிறது. டெல்டா மாவட்டங்களின் முக்கிய நீர் ஆதரமாக இந்த ஆறுகள் விளங்குகின்றன. பாசன காலங்களில் காவிரி,வெண்ணாறு, புதுஆறு ஆகியவற்றில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. 

திருச்சியில் அகண்ட காவிரியாக காணப்படும் இந்த ஆறு தஞ்சையை தாண்டியதும் பல்வேறு கிளை ஆறுகளாக பிரிகிறது.இதனால் காவிரியின் அகன்ற தோற்றம் குறைகிறது. இதன்காரணமாக இப்பகுதியில் பாயும் காவிரியை ஆடுதாண்டும் காவிரி என அழைக்கிறார்கள்.இறுதியாக காவிரி ஆறு பூம்புகார் அருகே வங்கக்கடலில் கலக்கிறது. இதுதான் காவிரியின் நீண்ட வரலாறு.

இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்தக் காவிரி ஆற்றில் நீரில்லாத காரணத்தினால் டெல்டா விவசாயிகள் கவலையில் உள்ளனர். விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.அவர்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகியுள்ளது. சேற்றில் கால் வைத்து நாட்டுக்கே சோறு போட்ட விவசாயி ஒருவேளை சோற்றுக்கு வழியில்லாமல் நிற்கிறான்.பருவமழை பொய்ந்து போயிருக்கும் இந்தக்காலகட்டத்தில் காவிரியில் நீர் வந்தால்தான் நிலத்தடி நீர் வளம் பெருகும்.தென்னாப்பிரிக்காவின் கேப்டவுண் நகரின் தண்ணீர் பற்றாக்குறையையும் தண்ணீர் இல்லா நாளையும் படித்துக்கொண்டிருக்கும் நமக்கு அந்தநிலை வர இன்னும் எத்தனை நாட்கள் எடுக்கும் என தெரியாது.அதற்குள் மத்திய அரசு இந்த விவகாரத்தில் உரிய தீர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதே தமிழக மக்களின் ஒட்டுமொத்த கோரிக்கையாக இருக்கிறது.
 


Advertisement

Advertisement
[X] Close