[X] Close

குறையும் மத்திய அரசு நிதி ? சிக்கலில் தமிழகம் ?

TamilNadu-in-trouble-for-Central-government-funding

தற்போது வெளியிடப்பட்டுள்ள  15-ஆவது நிதி ஆணைய ஆய்வு வரம்புகளின் படி, மத்திய அரசு வருவாயிலிருந்து மாநிலங்களுக்கு நிதிப் பங்கீடு  அளிப்பதற்கான வழிமுறைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இவை தமிழகம் போன்ற வளர்ச்சி அடைந்த மாநிலங்களுக்கு பயனளிக்கும் வகையில் இல்லை.


Advertisement

மாற்றி அமைக்கப்பட்ட மக்கள் தொகை

“மக்கள் தொகை அடிப்படையிலான நிதிப் பகிர்வில், 1971 ஆம் ஆண்டு மக்கள் தொகை கடைப்பிடிக்கப்படும்” என 1976 ஆம் ஆண்டுக்குப் பிறகு அமைக்கப்பட்ட அனைத்து மத்திய நிதி ஆணையத்திற்கும் , ஆய்வு வரம்பு தொடர்ந்து நிர்ணயிக்கப்பட்டு வந்தது. ஆனால் முதல் முறையாக மத்திய நிதி ஆணையத்தின் ஆய்வு வரம்பு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.


Advertisement

இதன்படி, 2011 மக்கள் தொகை அடிப்படையில் நிதி ஒதிக்கீடு செய்யப்படவேண்டும். இதனால், தமிழ்நாடு போன்ற முன்னேறிய மாநிலங்களுக்கு மத்திய வரி வருவாயிலிருந்து நிதி கிடைப்பது  ஒட்டு மொத்தமாக  குறைந்துவிடும்.  இதன் காரணமாக நமது அடுத்தகட்ட வளர்ச்சிப் பணிகள் பெருமளவு  தடைப்படும்.மாநிலத்திற்கு கிடைக்கும் நிதி  குறையும் என்பது ஒரு புறமிருக்க, மக்கள் தொகை கட்டுப்பாட்டை நீண்ட காலத்திற்கு முன்பே கட்டுக்குள் கொண்டு வந்து விட்டதால் ,ஆய்வு வரம்பு படி  நிதி ஒதுக்கீட்டில் வழங்கப்பட வேண்டிய ஊக்கத்தொகைக்கான பங்களிப்பையும் இழக்க நேரிடும்.  குறிப்பாக ,மக்கள் தொகை வளர்ச்சியைப் பொறுத்தவரை, 1971-2011 வரை   தமிழகத்தில் 75.1%, கேரளாவில் 56.4% . இந்தக் காலக்கட்டத்தில் ராஜஸ்தான் மாநிலத்தில் 166.33% மற்றும் ஹரியானா மாநிலத்தில் 156.6%. 

புதிய   ஆய்வு  வரம்புகளின் படி ,மக்கள் தொகை குறைவாக உள்ள மாநிலங்களான தமிழகம் மற்றும் கேரளாவை விட மக்கள்தொகை அதிகம் உள்ள ராஜஸ்தான் , ஹரியானா போன்ற  மாநிலங்களுக்கு மத்திய வரி வருவாயிலிருந்து நிதி கிடைப்பதில் சாதகமான சூழல் நிலவுகிறது .இந்த  மாற்றங்கள் முன்னேறிய மாநிலங்களுக்கு கிடைக்க வேண்டிய நிதியை பெருமளவு குறைந்து விடும் அபாயம் ஏற்பட்டிருப்பது மட்டுமின்றி, மக்கள் தொகை கட்டுப்பாட்டிற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமலிருக்கும் மாநிலங்களுக்கு மத்திய வரி வருவாயில் பெரும் பகுதி சென்றடைந்துவிடும்.


Advertisement

மத்திய அரசு திட்டங்களுக்கு ஊக்கத்தொகை !

பதினைந்தாவது நிதி ஆணையத்தின் மற்றொரு ஆய்வு வரம்பு “மத்திய அரசின் முக்கியத் திட்டங்களை நிறைவேற்றியுள்ள மாநிலங்கள்” என்ற அடிப்படையிலும் நிதி பகிர்வில் ஊக்கத்தொகை பரிந்துரைக்கலாம் என்று கூறுகிறது.முன்னேறிய மாநிலங்கள் தங்கள் மாநிலங்களுக்கு ஏற்ற வகையில் ஏற்கனவே தங்கள் மாநிலங்களில் முக்கியமான சமூக நலத்திட்டங்களை நிறைவேற்றி அதில் சாதனைகளை நிகழ்த்தியுள்ளன. தமிழ்நாடு போன்ற மாநிலங்கள், அனைவருக்கும் மின்சாரம், அனைத்து கிராமங்களுக்கும் சாலை வசதிகள், பொது சுகாதாரம் ,பொது விநியோக திட்டம் போன்றவற்றில் நாட்டிற்கே முன்னோடியாக திகழ்கின்றன .

மேலும் , சமையல் எரிவாயு போன்ற திட்டங்களை மத்திய அரசின் திட்டங்களுக்கு முன்பே தமிழ்நாடு வெற்றிகரமாக நிறைவேற்றிக் காட்டியிருக்கிறது.தங்கள் மாநிலங்களில் சிறப்பான திட்டங்களை நிறைவேற்றியிருக்கும் மாநிலங்களுக்கு நிதிப் பகிர்வை குறைப்பது என்பது சிறப்பாக செயல்படும் மாநிலங்களை தண்டிப்பது போன்ற செயலாகும். இது ஒரு பள்ளியில் நன்றாக படிக்கும் மாணவனுக்கு ஆசிரியரின் பயிற்சிகள் தேவையில்லை: அவன் தானாகவே  பயின்றுகொள்ள வேண்டும் என்பது போலாகும்.

கவர்ச்சி திட்டங்களா ,சமூக நலத்திட்டங்களா ?

மற்றொரு  ஆய்வு வரம்பில் “ஒரு வரையறைக்குள் கவர்ச்சித் திட்டங்களுக்கு செலவு செய்தது அல்லது அப்படி வரையறை ஏதுமின்றி கவர்ச்சித்திட்டங்களுக்கு செலவு செய்தது” என்ற அடிப்படையில் மத்திய நிதி ஆணையம் நிதி பகிர்வு குறித்து பரிந்துரை செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது.  மத்திய நிதி ஆணையத்திற்கு  மாநிலங்களில் நிறைவேற்றப்படும் திட்டங்களில் “கவர்ச்சித் திட்டம்” எது என்று நிர்ணயிக்கும் உரிமை கொடுக்கப்பட்டுள்ளது . அனால்  எது கவர்ச்சி திட்டம் என முடிவு எடுக்கும் உரிமை மாநில அரசிடமே இருக்கவேண்டும்.

 

வருவாய் பற்றாக்குறையை படிப்படியாக நீக்க வேண்டிய பொறுப்பு எப்போதும் மாநிலங்களிடமே இருக்க வேண்டும்.  மாநிலத்தில் நிறைவேற்றப்படும் திட்டங்களில் சிலவற்றை “கவர்ச்சித் திட்டங்கள்” என்று மத்திய நிதி ஆணையம் பிரித்து, அதற்கான செலவுகளை மாநிலத்தின் ஒட்டுமொத்த செலவிலிருந்து குறைத்து விட்டு மத்திய வரி வருவாயிலிருந்து நிதி பகிர்வை பரிந்துரைத்து விட்டால் மாநிலங்களின் நிதி நிலைமை மோசமாகிவிடும்.

நிதிச் சிக்கலில் தமிழகம் ! 

ஏற்கெனவே 13  வது நிதி ஆணையத்துடன் ஒப்பிடுகையில்  14 வது  நிதி ஆணையதின் பரிந்துரையின்படி  தமிழகம் சுமார் 19% அளவிற்க்கு நிதி பங்கீட்டில் குறைவு காணப்பட்டது . இது ஏறத்தாழ ரூ. 6000 கோடி அளவிற்கு இழப்பாகும் .
ஆகவே பாரபட்சமாக வகுக்கப்பட்டுள்ள மத்திய நிதி ஆணையத்தின் ஆய்வு வரம்புகளை மாநிலங்களுடன்  கலந்து ஆலோசித்து திருத்தியமைக்க வேண்டும்.குறைந்தபட்சம் 2026 ஆண்டு வரையாவது 1971 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படியே நிதி பகிர்வு செய்யப்படவேண்டும்.

கட்டுரையாளர்: Dr. T C தாமஸ் ,பேராசிரியர்.  மேலாண்மைத்துறை
 


Advertisement

Advertisement
[X] Close