Published : 03,Feb 2018 12:24 PM
கிடப்பில் கிடந்த போபர்ஸ் வழக்கு : மீண்டும் தூசி தட்டிய சிபிஐ

நாட்டையே உலுக்கிய போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் வழக்கில் , குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் விடுவித்து டெல்லி உயர்நீதிமன்றம் 2005-ல் தீர்ப்பளித்தது. இதற்கு எதிராக தற்போது சிபிஐ உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபாலின் அறிவுரையையும் மீறி சிபிஐ இந்த மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளது.
ஏன் இந்த திடீர் ஆர்வம்?
ராஜீவ்காந்தி பிரதமராக இருந்தபோது இந்திய இராணுவத்துக்கு பீரங்கி வாங்க, சுவீடன் நாட்டுடன் ஒப்பந்தம் போடப்பட்டத்து. ஆனால், இந்த ஒப்பந்தத்தை பெற, இந்தியாவின் உயர்மட்ட அரசியல்வாதிகள், அதாவது அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி உள்ளிட்டோருக்கு பணம் கொடுக்கப்பட்டது என சுவீடன் ரேடியோவில் அறிவிக்கப்பட்டது. போபர்ஸ் நிறுவனம் இந்தியாவோடு ஆயுத ஒப்பந்தம் செய்ய முடியாதவாறு, இந்தியா தகுதி நீக்கம் செய்யப்பட்டது.
இந்த விவகாரத்தில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து வழக்கு நடத்தியது. ஆனால் குற்றச்சாட்டுகள் நிரூபணமாகவில்லை என கூறி, அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். சிபிஐ தலைகுனிந்தது. ஆனால், இப்போது மீண்டும் இந்த வழக்கை தூசி தட்டி, குற்றச்சாட்டுகள் உண்மையே என நிரூபிக்க மீண்டும் களம் இறங்கியிருக்கிறது சிபிஐ. ஆங்கில தொலைகாட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த Fairfax நிறுவன தலைமை செயல் அதிகாரி மைக்கேல் ஹர்ஷ்மேன், போபர்ஸ் விவகாரத்தில் , இந்திய விசாரணை அதிகாரிகள் கேட்டுக் கொண்டால் உதவத் தயார் என்றும், சில ஆவணங்கள் தன்னிடம் இருப்பதாகவும் தெரிவித்தார்.
விழித்துக் கொண்டது சிபிஐ. உடனடியாக வழக்கில் மேல்முறையீடு செய்ய முடிவெடுத்தது. தலைமை வழக்கறிஞரின் ஆலோசனையை கேட்டது. ஆனால், அவரோ இத்தனை ஆண்டுகள் கழித்து, ஒரு தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யும் போது கால தாமதத்தை காட்டி அதனை தள்ளுபடி செய்து விடுவார்கள். எனவே இது தொடர்பாக பாஜகவை சேர்ந்த அஜய் அகர்வால் வழக்கில் வேண்டுமானால் மற்றொரு மனுதாரராக சேர்த்து கொள்ளலாம் என்றார். ஆனால் சிபிஐ விடவில்லை. விடாப்பிடியாக தற்போது மேல்முறையீடு செய்துள்ளது. விரைவில் இதனை விசாரிக்கவுள்ளது உச்சநீதிமன்றம்.