Published : 20,Nov 2017 06:26 AM

தீபிகா படுகோனே, பன்சாலி தலைகளுக்கு ரூ.10 கோடி: பாஜக தலைவர் பகிரங்க மிரட்டல்

Rs-10-Crore-For-Heads-Of-Deepika-Padukone-Padmavati-Director-BJP-Official

நடிகை தீபிகா படுகோனே, இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியின் தலைகளை வெட்டி கொண்டு வந்தால் ரூ.10 கோடி அளிக்கப்படும் என்று ஹரியானா மாநில பாஜக தலைவர் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார்.

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பத்மாவதி’ படத்தில் ராஜஸ்தானின் சித்தூரை ஆண்ட ராஜபுத்திர வம்ச ராணி பத்மினி வேடத்தில் நடிகை தீபிகா படுகோனே நடித்துள்ளார். படத்தில் ராணி பத்மினியின் வரலாறு தவறாக சித்தரிக்கப்பட்டிருப்பதாக கூறி கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என்று ராஜஸ்தான் மாநில முதல்வர், பீகார் துணை முதல்வர் ஆகியோர் பகிரங்கமாக கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், பல்வேறு அமைப்புகளும் பத்மாவதி படத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், நடிகை தீபிகா படுகோனே, இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியின் தலைகளை வெட்டி கொண்டு வந்தால் ரூ.10 கோடி அளிக்கப்படும் என்று ஹரியானா மாநில ஊடக பிரிவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சுரஜ்பால் அமு பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தீபிகா மற்றும் பன்சாலி தலைகளுக்கு ரூ.5 கோடி அறிவித்த மீரட் இளைஞரை பாராட்டுகிறேன். நாங்கள் அவர்களின் தலைகளை கொண்டு வந்தால் ரூ.10 கோடி அளிப்போம். வெட்டி கொண்டு வருபவர்களின் குடும்பங்களின் தேவைகளை பூர்த்தி செய்வோம்” என்று கூறினார்.

மேலும், படத்துக்கு ஆதரவான கருத்தினை ரன்வீர் சிங் திரும்ப பெறாவிட்டால் அவரது கால்களை வெட்டி அவரின் கைகளில் கொடுத்துவிடுவோம் என்று கடுமையாக எச்சரித்தார். தொடர் மிரட்டல்களாலும், இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாலும் பத்மாவதி படத்தை தேதி குறிப்பிடாமல் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி ஒத்திவைத்தார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்