Published : 03,Mar 2023 06:05 PM
அர்ஜுன் ரெட்டி இயக்குநருடன் இணைந்த அல்லு அர்ஜுன் - வெளியான அறிவிப்பு!

தெலுங்கு திரையுலகின் ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜுன், விஜய தேவரகொண்டாவின் அர்ஜுன் ரெட்டி படத்தை இயக்கிய இயக்குநர் சந்தீப் ரெட்டி வாங்கா உடன் இணையவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தெலுங்கு ரசிகர்களால் bunny என்று அழைக்கப்படும் அல்லு அர்ஜுன் ‘அலா வைகுந்தபுரம்லோ’ மற்றும் ‘புஷ்பா 1’ திரைப்படங்களால், தென்னிந்தியாவையும் தாண்டி வட இந்தியாவிலும் பிரபலமாகினார். குறிப்பாக ‘புஷ்பா 1’ திரைப்படம் பாலிவுட்டில் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்புப் பெற்றது. இதனைத் தொடர்ந்து ‘புஷ்பா 2’ படத்தின் படப்பிடிப்பு அண்மையில் துவங்கி விசாகப்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வருகிறது.
இந்தப் படம் அடுத்தாண்டு கோடை விடுமுறையை முன்னிட்டு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தை அடுத்து ‘அலா வைகுந்தபுரம்லோ’ படத்தை இயக்கிய இயக்குநர் த்ரிவிக்ரம், மகேஷ் பாபுவின் ‘எஸ்.எஸ்.எம்.பி.’ படத்தை படமாக்கி வரும் நிலையில் அடுத்ததாக அல்லு அர்ஜுன் படத்தை இயக்க உள்ளதாக கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், விஜய தேவரகொண்டாவின் நடிப்பில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான ‘அர்ஜூன் ரெட்டி’ படத்தின் இயக்குநரான சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கவுள்ள படத்தில் அல்லு அர்ஜுன் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. டி -சீரிஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறது.
Brace yourselves for this massive collaboration between three powerhouses of India - Producer Bhushan Kumar, Director Sandeep Reddy Vanga and superstar Allu Arjun.@alluarjun@imvangasandeep#BhushanKumar#KrishanKumar@VangaPranay@VangaPictures#ShivChanana@NeerajKalyan_24pic.twitter.com/xis8mWSGhl
— T-Series (@TSeries) March 3, 2023
இயக்குநர் சந்தீப் ரெட்டி வாங்கா தற்போது பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, அனில் கபூர் ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் ‘அனிமல்’ படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தை அடுத்து பிரபாஸின் நடிப்பில் ‘ஸ்பிரிட்’ படத்தையும், அதற்கு அடுத்தே அல்லு அர்ஜுனின் 22-வது படத்தை இயக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.