Published : 08,Feb 2023 09:41 AM

சாலை பணியாளரிடம் லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக சிக்கிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள்!

Two-arrested-for-taking-bribe-from-road-worker

பாலக்கோடு சாலை பணியாளரிடம் லஞ்சம் வாங்கிய நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் இருவரை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு நெடுஞ்சாலை உதவி கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் சாலை பணியாளராக குப்புசாமி என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், குப்புசாமி தனது வைப்பு நிதியிலிருந்து முன்தொகை பெற பாலக்கோடு நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றும் சந்திரசேகர் மற்றும் இளநிலை உதவியாளர் தனபாலை அணுகியுள்ளார்.

அப்பொழுது தனபால் தங்களுக்கு லஞ்சம் வழங்கினால் தொகையை விடுவிப்பதாக தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதனை அடுத்து சாலை பணியாளர் குப்புசாமி, தருமபுரி லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளர். இதையடுத்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் ரசாயனம் தடவிய 500 ரூபாய் நோட்டுக்களை குப்புசாமியிடம் வழங்கியுள்ளனர்.

image

இதைத் தொடர்ந்து நேற்று இளநிலை உதவியாளர் தனபாலிடம் அந்த ரூபாயை குப்புசாமி கொடுத்துள்ளார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் தனபாலை கையும் களவுமாக பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், கண்காணிப்பாளர் சந்திரசேகர் சொல்லியதன் பேரில் பணத்தை வாங்கியதாக கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து கண்காணிப்பாளர் சந்திரசேகர் மற்றும் தனபால் ஆகிய இருவரையும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்தனர்.

மக்களுக்காக சேவையாற்ற வேண்டிய அதிகாரிகள், லஞ்சம் பெறுவது தொடர்கதையாகி வருவது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்