Published : 03,Jan 2023 06:07 PM

57 வருட மோசமான சாதனையை தவிர்ப்பாரா பாபர்?.. ஆடுகளத்தில் நடந்த கலாட்டா! வைரலாகும் வீடியோ

most-runouts-in-a-less-test-innings--Babar-Assam-s-worst-record-

2022ஆம் ஆண்டு ஒரு காலண்டர் இயரில் அதிக ரன்கள் குவித்த முதல் பாகிஸ்தான் வீரர் என்ற சாதனையை படைத்திருந்தாலும், தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறார் பாபர் அசாம்.

2022 காலண்டர் இயரில் 44 போட்டிகளில் விளையாடி இருந்த பாபர் அசாம், 2477 ரன்களை குவித்து, அதிக ரன்களை குவித்த முதல் பாகிஸ்தான் வீரர் என்ற சாதனையை படைத்திருந்தார், 16 வருடங்களாக ஒரு காலண்டர் இயரில் அதிக ரன்களை குவித்த வீரர் என்ற பெருமையை தக்கவைத்திருந்த மொகமது யூசஃப் அடித்திருந்த 2435 ரன்களை பின்னுக்கு தள்ளி, 2477 ரன்களை குவித்து அந்த சாதனையை நிகழ்த்திருந்தார் பாகிஸ்தான் அணியின் தற்போதைய கேப்டன் பாபர் அசாம்.

image

மேலும் ஒரு காலண்டர் வருடத்தில் அடிக்கப்பட்ட அரைசதம் மற்றும் சதங்களை சேர்த்து அதிக 50+ ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார் பாபர். 2022ல் 8 சதங்களை விளாசியிருக்கும் பாபர் 17 அரைசதங்களை விளாசி உள்ளார். மொத்தமாக பாபர் அசாம் (25) இருபத்தைந்து 50+ ஸ்கோர் அடித்துள்ளார், 2005ல் ரிக்கி பாண்டிங்கால் 24 முறை அடிக்கப்பட்ட சாதனையை முறியடித்து அவர் இந்த மைல்கல்லை எட்டியிருந்தார்.

இந்த ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அணியின் வித்தியாசமான அதிர்ஷ்டம் இருந்தபோதிலும், கேப்டன் ஒன்பது போட்டிகளில் 1000 ரன்களுக்கு மேல் பிரகாசித்துள்ளார். இந்த காலண்டர் ஆண்டில், மற்ற மூன்று பேட்டர்கள் மட்டுமே டெஸ்டில் நான்கு இலக்கங்களை எட்ட முடிந்தது.

டெஸ்ட் போட்டிகளில் படைக்கவிருக்கும் மோசமான சாதனை!

image

இப்படி டெஸ்ட் போட்டிகளில் பிரகாசமாக ஜொலித்து வரும் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம், குறைவான டெஸ்ட் இன்னிங்ஸ்களில் அதிக முறை ரன்-அவுட் ஆன முதல் வீரர் என்ற மோசமான சாதனையை எட்டும் நிலையில் உள்ளார். 44 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 84 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் பங்குபெற்று விளையாடிவரும் பாபர் அசாம், 6 முறை டெஸ்ட் கிரிக்கெட்டில் ரன்-அவுட் முறையில் அவுட்டாகி வெளியேறி உள்ளார்.

image

தென்னாப்பிரிக்க வீரரான ஜேஹ்ச்பி வெயிட் என்ற வீரர் 1951-1965 காலகட்டங்களில் குறைவான இன்னிங்ஸ்களில் அதிகமுறை ரன் அவுட் ஆனதே இதுவரை மோசமான சாதனையாக இருந்து வருகிறது. 86 இன்னிங்ஸ்களில் 7 முறை அவுட்டாகி இருக்கும் அவர், குறைவான போட்டிகளில் அதிகமுறை ரன் அவுட்டான வீரர்களில் முதல் இடத்தில் உள்ளார். 84 இன்னிங்ஸ்களில் 6 முறை ரன் அவுட்டாகி இருக்கும் பாபர் அசாம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு மோசமான சாதனையை நோக்கி நகர்ந்து கொண்டுள்ளார். கடைசியாக நடந்த மூன்று டெஸ்ட் போட்டிகளில் 2 முறை ரன் அவுட்டில் வெளியேறியுள்ளார் பாபர் அசாம்.

இந்நிலையில் இன்று நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 10ஆவது விக்கெட்டுக்கு கைக்கோர்த்த நியூசிலாந்தின் மாட் ஹென்றி மற்றும் அஜாஸ் பட்டேல் 104 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட, நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 449 ரன்களை குவித்துள்ளது. அதனைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸை தொடங்கி ஆடிவருகிறது பாகிஸ்தான் அணி. முதல் இன்னிங்ஸ் தொடக்கத்திலேயே 57க்கு 2 விக்கெட்டுகளை இழந்தநிலையில், பின்னர் கைக்கோர்த்த பாபர் அசாம் மற்றும் இமாம் உல்ஹக் இருவரும் சீரான பேட்டிங்கை வெளிப்படுத்தி அணியை ஸ்கோரை உயர்த்தினர்.

ஒரே கிரீஸில் வந்து நின்ற பாபர்-இமாம் உல் ஹக்!

image

அனைத்தும் சீராகவே சென்று கொண்டிருந்த இடத்தில், 25ஆவது ஓவரில் 2ஆவது பந்தை வீசினார் நியூசிலாந்தின் ப்ரேஸ்வெல், அவர் வீசிய பந்தை லெக்சைடு திசையில் பவுண்டரி பக்கத்திற்கு விரட்டினார் இமாம். இரண்டு ரன்களை கச்சிதமாக சென்றிருந்த நிலையில், பந்து பவுண்டரி லைனுக்கு நெருங்கவே மூன்றாவது ரன்னிற்கு பாபரை அழைப்பார் இமாம்.

இந்நிலையில் முழுமையாக அடுத்த ரன்னிற்கு சென்று விடுவார் பாபர், ஆனால் நிக்கோலஸ் சிறப்பான துரோவை பார்த்த இமாம் வேண்டாமென கத்தி அவருடைய கிரீஸிலேயே நின்றுவிடுவார், அதற்குள் பாபர் அசாம் இமாம் இருக்கும் பக்கத்திற்கே சென்றுவிடுவார். அந்த ஓட்டத்தை இமாம் அழைக்கும் போதே வந்திருந்தால் நிச்சயம் அது முழுமையான இன்னொரு ரன்னாக மாறியிருக்கும்.

இதை சற்றும் எதிர்பாராத பாபர் அசாம், விரக்தியில் மண்டையை ஆட்டியபடியே பெவிலியன் நோக்கி செல்வார். பாபர் அசாம் டெஸ்ட் போட்டிகளில் ஒரு மோசமான ரன் அவுட் ரெக்கார்டை நோக்கி நகர்ந்து கொண்டுள்ளார். மாடர்ன் டே கிரிக்கெட்டில், அதுவும் டெஸ்ட் போட்டிகளில் எந்தஒரு வீரரும் ரன் அவுட் ஆவதை விரும்ப மாட்டார்கள். இந்த ரன் அவுட்டோடு அவர் டெஸ்ட் போட்டிகளில் 6ஆவது முறையாக அவுட்டாகி உள்ளார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்