Published : 18,Sep 2022 08:20 PM

25 ஆண்டுக்கு பின் சிக்கிய தலைமறைவாக இருந்த கொலை வழக்கு குற்றவாளி! - பிடிபட்டது எப்படி?

How-Delhi-Cops-Posing-As-Insurance-Agents-Cracked-25-Year-Old-Murder-Case

கொலை வழக்கில் 25 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த நபர் போலீஸாரின் கடும் தேடலுக்குப் பின் டெல்லியில் சிக்கினார்.

கடந்த 1997ஆம் ஆண்டு டெல்லியின் துக்ளகாபாத் பகுதியில் வசித்து வந்த கூலித்தொழிலாளியான கிஷன் லால் என்பவர் இரவில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். அச்சமயத்தில் அவரது மனைவி சுனிதா கர்ப்பிணியாக இருந்தார். கிஷன் லாலின் உடலில் கத்திக்குத்து காயங்கள் இருந்ததால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகித்து விசாரணை நடத்தினர். கிஷன் லால் வசித்துவந்த அதே பகுதியைச் சேர்ந்த ராமு என்பவரை சந்தேகத்தின் பேரில் விசாரிப்பதற்காக அவரை தேடினர். ஆனால் ராமுவை போலீசாரால் கண்டுபிடிக்கவில்லை. கொலையை நேரில் கண்ட சாட்சியம், குற்றம் சாட்டப்பட்டவரின் புகைப்படம், அடையாளம், இருக்குமிடம் என எதுவும் இல்லாததால் போலீசார் இந்த வழக்கை துப்புத் துலக்க முடியாமல் கைவிட்டனர்.

image

இந்நிலையில், பழைய வழக்குகளை தூசி தட்டி எடுத்து விசாரித்துவரும் டெல்லி காவல்துறையின் ஒரு சிறப்புப் பிரிவு, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கிஷன் லால் கொலை வழக்கையும் கையிலெடுத்தது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி என்று சந்தேகிக்கப்படும் நபரான ராமு இப்போது எங்கே இருக்கிறார் என போலீசார் தேடுதல் வேட்டையை தொடங்கினர். அதன் பயனாக டெல்லியில் ஜான்கிபுரம் என்ற பகுதியில் ராமு இ-ரிக்‌ஷா ஓட்டுனராக இருப்பதாக முக்கிய துப்பு ஒன்று போலீசாருக்கு கிடைத்தது. ராமு ஒரு உஷாரான நபர் என்பதை தெரிந்துகொண்ட போலீசார், தன்னை போலீஸ் நெருங்குவதை அறிந்தால் தப்பியோடி விடுவார் என்பதால் இன்சூரன்ஸ் ஏஜென்ட் போல் நடித்து ஜான்கிபுரம் பகுதியில் ராமுவை தேடினர்.

இ-ரிக்‌ஷா ஓட்டுனர்களுக்கு மத்திய அரசு மானியம் வழங்குவதாக கூறி ஜான்கிபுரம் பகுதியில் உள்ள இ-ரிக்‌ஷா ஓட்டுனர்களை மாறுவேடத்தில் இருந்த போலீசார் வரவழைத்துள்ளனர். இதனை நம்பி சக இ-ரிக்‌ஷா ஓட்டுனர்களுடன் வந்த ராமு போலீசார் விரித்த வலையில் சிக்கினார். அவரை கைது செய்த போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இதையடுத்து கிஷன் லாலின் மனைவி சுனிதாவை வரவழைத்து, பிடிபட்டவர்தான் கொலையாளி ராமு என்பதை  போலீசார் உறுதி செய்தனர். விசாரணையில் பணத்திற்காக கிஷன் லாலை கொலை செய்ததை ராமு ஒப்புக்கொண்டார்.

image

இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், போலீசாரின் தேடுதல் வேட்டையில் சிக்காமல் இருப்பதற்காக தனது பெயரை அசோக் யாதவ் என மாற்றியுள்ளார் ராமு. மேலும் அசோக் யாதவ் என்ற பெயரிலேயே ஆதார் உள்ளிட்ட அடையாள அட்டைகளையும் வாங்கியுள்ளதாக கூறினர்.

இதையடுத்து ராமுவை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார். சுமார் 25 ஆண்டுகள் தலைமறைவு குற்றவாளியை கைது செய்த தனிப்படை  போலீசாரை டெல்லி துணை போலீஸ் கமிஷனர் சாகர் சிங் கல்சி பாராட்டினார்.

இதையும் படிக்க: தூத்துக்குடி: காவல் ஆய்வாளர் மற்றும் அவரது ஓட்டுநரை தாக்கிய பாஜக நிர்வாகிகள் கைது.!

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்