Published : 24,Aug 2022 01:51 PM
ஆந்திர மாநில அரசு பேருந்தில் கடத்திவரப்பட்ட 21 கிலோ கஞ்சா பறிமுதல்: பெண் உட்பட 4 பேர் கைது

ஆந்திராவில் இருந்து அரசு பேருந்தில் கடத்தி வரப்பட்ட கஞ்சர் பண்டல் பண்டலாக பறிமுதல். சென்னையைச் சேர்ந்த பெண் உட்பட 4 பேரை கைது செய்த போலீசார், 21 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.
தமிழக - ஆந்திர எல்லையான எளாவூர் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி வந்த ஆந்திர மாநில அரசு பேருந்தை நிறுத்தி சோதனையிட்டனர்.
அப்போது பயணிகள் இருக்கையின் கீழ் பண்டல்கள் இருப்பதைக் கண்ட காவல் துறையினர், அவற்றை பிரித்து பார்த்த போது, அதில் 21 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்து கஞ்சாவை கடத்தி வந்த சென்னையைச் சேர்ந்த பாக்கிய கிருஷ்ணன், தினேஷ், முரளி மற்றும் ஜோதி என்ற இளம் பெண் உள்ளிட்ட 4 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், ஆந்திராவில் இருந்து கஞ்சாவை மொத்தமாக வாங்கி வந்து சிறு சிறு பொட்டலங்களாக மடித்து சென்னை புறநகர் பகுதிகளில் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து 4 பேர் மீதும் ஆரம்பாக்கம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.