[X] Close

”ஆய்வகம்கூட இன்றி எப்படி எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி நடத்துவது?”- பழனிவேல் தியாகராஜன் கேள்வி

தமிழ்நாடு

How-to-run-a-medical-college-without-even-a-basic-laboratory--Minister-PTR-questions

மதுரையில் எய்ம்ஸ் அமைக்க ஒரு கல் கூட வைக்காமல் இருக்கும்போது, அங்கு எங்கு வைத்து எப்படி மாணவர் சேர்க்கையை நடத்துவது என தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.


Advertisement

மதுரை சிம்மக்கல் பகுதியில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை துவக்கி வைத்த தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “மக்களை தேடி மருத்துவம் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மருத்துவமனையை தேடி வர முடியாத மக்களுக்கு இத்திட்டம் வழியாக வீட்டிலேயே வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மருத்துவத்துறை அடுத்தடுத்து முன்னேற்றம் அடைய, இன்னும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

image


Advertisement

இதைத்தொடர்ந்து மதுரையில் எய்ம்ஸ் மாணவர்கள் சேர்க்கை விவகாரம் குறித்த கேள்விக்கு அவர் பதில் அளித்தார். அப்போது, “நாடு முழுதுவம் பல இடங்களில் மதுரை எய்ம்ஸ் போல, எய்ம்ஸ் மருத்துவமனை அறிவிக்கப்பட்டு பின் செயல்படுத்தப்படாமல் இருக்கிறது. மதுரையிலும் அதே நிலைதான். மதுரை எய்ம்ஸூக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் இன்னும் ஒரு கல் கூட நடவில்லை. அப்படி ஒரு கல் கூட வைக்காமல், சொல்லப்போனால் அதற்கான நிலத்தைக்கூட தோண்டாமல் மாணவர் சேர்க்கையை எப்படி நடத்துவது? வகுப்புகளை எங்கு வைத்து நடத்துவது? கல்லூரி நிர்வாகத்துக்கென நிதியும் ஒதுக்கீடு செய்யப்படாமல் இருக்கிறது. பின் எப்படி மாணவர் சேர்க்கை நடத்துவது? முதலில், கட்டிடமே இல்லாமல் எப்படி மருத்துவ கல்லூரி நடத்துவது? மருத்துவ கல்வி என்பது சற்றே கஷ்டமான கல்வி. அப்படியிருக்கும்போது, ஒரு ஆய்வக கட்டிடம்கூட இல்லாமல் எப்படி மருத்துவ கல்லூரியை நடத்துவது?” என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார் அவர்.

தொடர்புடைய செய்தி: “கட்டாந்தரையில் பாடமெடுக்க முடியாது”- எய்ம்ஸ் சேர்க்கை நிராகரித்தமைக்கு அமைச்சர் விளக்கம்

மேலும் பேசுகையில், “அதிமுக ஆட்சியில் தெளிவு இல்லாமல் கொரோனா முழு அடைப்பு செய்யப்பட்டது. அந்த பொது முடக்கத்தால் பொருளாதாரம் மிகவும் பின்தங்கிய நிலைக்கு சென்றுள்ளது. கொரோனோ முழு அடைப்பின் போது 25.04 சதவீதம் பொருளாதார வீழ்ச்சி அடைந்திருக்கிறது. தற்போது 20 சதவிகிதம் பொருளாதாரம் உயர்ந்து உள்ளது. பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் பணியை செய்து வருகிறோம்” என்றார் அவர்.


Advertisement

தொடர்ந்து, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் கோரிக்கையான ‘ஒரே கட்டமாக உள்ளாட்சி தேர்தலை நடத்தவேண்டும்’ என்பது குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில், “இந்திய தேர்தல் ஆணையமே 8 கட்டங்களாக தேர்தல் நடத்தி வருகிறது. அப்படியிருக்கும்போது அவர் எந்த அடிப்படையில் இப்படியொரு கருத்தை வலியுறுத்தி உள்ளார் என்பது தெரியவில்லை. அதை அறிந்துகொண்டு அதற்கான விளக்கத்தை அளிக்கிறோம்” என்றார்.

image

பின் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து பேசுகையில், “தடுப்பு பணிகளை, தமிழக அரசு ஒரு அளவிற்கு தான் செய்ய முடியும். மக்களும் மிக பாதுகாப்பாக இருக்க வேண்டும். அதுவும் முக்கியம். 3 வது அலையை கட்டுப்படுத்த அரசு சார்பில் மருத்துவ கட்டமைப்புகள் தயாராக உள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் எதிர் கட்சியை சேர்ந்தவர்களுக்கு பேச வாய்ப்புகள் வழங்கப்படாத நிலை மாறி தற்பொழுது ஜனநாயக முறைப்படி எதிர்க்கட்சியினருக்கும் பேச வாய்ப்பு வழங்கப்பட்டு ஜனநாயகம் நிலை நாட்டப்பட்டுள்ளது” என்றார் அவர்.


Advertisement

Advertisement
[X] Close