Published : 02,Aug 2017 04:32 PM
சென்னையில் 3 மாதங்களில் 300 சவரன் வழிப்பறி

சென்னையில் கடந்த 3 மாதங்களில் 300 சவரன் நகைகள் வழிப்பறி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் கடந்த 3 மாதங்களாக மயிலாப்பூர், கீழ்ப்பாக்கம், புரசைவாக்கம், பட்டினப்பாக்கம், அண்ணாநகர், மந்தைவெளி, திருமங்கலம் உள்பட பல்வேறு பகுதிகளில் 300 சவரனுக்கும் அதிகமான தங்கச்சங்கிலிகள் பறிக்கப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன. இதற்காக பெருநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் உத்தவின்பேரில் பத்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வந்தது. மயிலாப்பூரில் ஆசிரியை ஒருவரிடம் நகை பறிக்கப்பட்ட காட்சி பதிவான சிசிடிவி பதிவுகள் அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளன. இந்நிலையில், சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையம் அருகில் சந்தேகத்திற்கு இடமான வகையில் பைக்கில் சென்ற 2 பேரை பெரிய மேடு போலீசார் பிடித்து விசாரணை செய்தனர்.
விசாரணையில், டெல்லியைச் சேர்ந்த சந்தீப், சஞ்சய் என்ற இவர்கள் சென்னையின் பல்வேறு பகுதிகளில் நகைப்பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. நகைபறிப்பில் ஈடுபடும் போது 2 பேருடைய காலில் அணிந்திருந்த ஷூவை வைத்து அடையாளம் கண்டறிந்து போலீசார் பிடித்துள்ளனர். இவர்கள் 2 பேரும் டெல்லியில் இருந்து ரயில் மூலமாக சென்னை வந்து பெரியமேட்டில் உள்ள லாட்ஜில் தங்கியிருந்து தொடர் நகைபறிப்பு சம்பவத்தில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டிருந்ததை விசாரணையில் கண்டுபிடித்துள்ளனர்.
நகையை பறித்துவிட்டு டெல்லிக்கு தப்பிவிடுவதை இவர்கள் வழக்கமாக கொண்டிருந்ததும் தெரியவந்தது. இவர்களுடன் தொடர்புடைய மேலும் இருவர் தப்பிச்சென்றதால் அவர்களை பிடிக்கும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.