[X] Close

முகுல் ராயின் திரிணாமூல் 'ரிட்டர்ன்' - பரபரக்கும் மேற்கு வங்க அரசியல் களம்!

இந்தியா,சிறப்புக் களம்

Bharatiya-Janata-Party-leader-Mukul-Roy-arrives-at-Trinamool-Bhawan

மேற்கு வங்கத்தில் சட்டமன்றத் தேர்தலையொட்டி பாஜகவில் தஞ்சம் புகுந்த திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்கள் பலரும், தற்போது மீண்டும் தாய்க் கழகத்திற்கு திரும்பத் தொடங்கி உள்ள நிலையில், பாஜக முக்கியத் தலைவரான முகுல் ராய் திரிணாமூல் காங்கிரஸில் மீண்டும் இணைந்தார்.


Advertisement

பாஜகவின் தேசிய துணைத் தலைவர் முகுல் ராய் தனது தாய்க் கழகமான திரிணாமூல் காங்கிரஸுக்கு திரும்புவாரா அல்லது பாஜகவிலேயே நீடிப்பாரா என்பது மேற்கு வங்க அரசியலில் மிகப்பெரிய கேள்வியாக மாறியது. இந்தக் கேள்விக்கு விதைபோட்டது, சில தினங்களுக்கு முன்பு கொல்கத்தாவில் மாநில பாஜக தலைவர் திலீப் கோஷ் தலைமையில் நடைபெற்ற கூட்டம்தான்.

இந்த நிகழ்வில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார் முகுல் ராய். இதன்பின் அரங்கேறிய சம்பவங்கள் சந்தேகத்தை வலுப்படுத்தின. ஆனால், "முகுல் ராய் தனது உடல் நலம் சரியில்லாத மனைவியை பார்த்துக் கொள்வதில் கவனம் செலுத்தி வருவதால்தான் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை" என்று பாஜக தரப்பு விளக்கம் கொடுத்தது.


Advertisement

image

ஆனால் இங்கேயும் ஒரு ட்விஸ்ட். மம்தா பானர்ஜியின் மருமகனும், தற்போது திரிணாமூல் கட்சியின் தேசிய பொதுச் செயலராகவும் நியமிக்கப்பட்டுள்ள அபிஷேக் பானர்ஜி, முகுல் ராய் மனைவி அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்து வந்தார். அப்போது முகுல் ராய் உடன் நீண்ட நேரம் பேசியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து முகுல் ராய் திரிணாமூல் திரும்ப போகிறார் என்ற பேச்சுக்கள் மேலும் வலுவானது.

இந்தப் பேச்சுக்கள் வட்டமடித்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடியே நேரடியாக முகுல் ராயை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். இந்த உரையாடல் ராயின் மனைவிக்கு விரைவாக குணமடைய வேண்டும் என்பதற்காக நடத்தப்பட்டது என்று பாஜக தரப்பு சொன்னது.


Advertisement

இதுபோன்ற சம்பவங்களால் முகுல் ராய் தனது தாய்க் கழகமான திரிணாமூல் காங்கிரஸுக்கு திரும்புவாரா என்பது மேற்கு வங்க அரசியலில் மிகப்பெரிய கேள்வியாக மாறியது. பாஜக மற்றும் திரிணாமூல் காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளும் இந்தப் பிரச்னையில் மவுனம் காத்து வந்த நிலையில், திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி சவுகதா ராய் இந்த விவகாரத்தில் 'க்ளு' ஒன்றை கொடுத்துள்ளார்.

சவுகதா ராய் அளித்த பேட்டியில், "அபிஷேக் பானர்ஜி தொடர்பில் பலர் உள்ளனர். அவர்கள் மீண்டும் திரிணாமூல் கட்சிக்கே திரும்பி வர விரும்புகிறார்கள். ஆனால் இதுபோன்றவர்கள் கட்சிக்கு துரோகம் இழைத்ததாக நான் உணர்கிறேன். கட்சிக்கு ஒரு தேவை வரும்போது அவர்கள் அணி மாறினார்கள். ஆனால், இந்த விவகாரத்தில் மம்தா தீதி தான் இறுதி முடிவெடுப்பார். ஆனால், இவர்களை இரண்டு பகுதிகளாக பிரித்து கையாள வேண்டும் என்று நான் நினைக்கிறேன். ஒன்று மென்மையானவர்கள்; மற்றொன்று கடினவாதிகள்.

இவர்களில் மென்மையானவர்கள், கட்சியை விட்டு வெளியேறிய பின் முதல்வர் மம்தா பானர்ஜியை ஒருபோதும் அவமதிக்காதவர்கள். கடினவாதிகள், அவரை பொதுவெளியில் பகிரங்கமாக விமர்சித்தவர்கள். இதற்கு எடுத்துக்காட்டு சுவேந்து ஆதிகாரி. அவர் கட்சியை விட்டு வெளியேறிய பின் மம்தாவை பற்றி மோசமாக பேசினார். ஆனால், முகுல் ராய் மம்தாவை வெளிப்படையாக எந்த விமர்சனமும், துஷ்பிரயோகம் செய்யவில்லை" என்று கூறியிருந்தார். இவரின் இந்த ஆதரவு பேச்சு மீண்டும் அவரை கட்சிக்குள் சேர்த்துக்கொள்ளும் வகையாகவே பார்க்கப்பட்டது.

அதற்கேற்ப தற்போது, முகுல் ராய் கொல்கத்தாவில் உள்ள திரிணாமூல் கட்சி அலுவலகமான திரிணாமூல் பவனுக்கு வருகை தந்தார். அங்கு மம்தாவை சந்தித்து மீண்டும் திரிணாமூல் கட்சியில் மீண்டும் இணைந்தார். முன்னதாக, இன்று நடந்த கட்சிக் கூட்டத்தில் முகுல் ராய் சேர்வது தொடர்பான ஆலோசனை நடத்தப்பட்டது. இதையடுத்து தற்போது அவர் கட்சியில் இணைந்துள்ளார்.

image

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் என இரண்டு கட்சிகளையும் எதிர்க்கும் கட்சியாக திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை மம்தா ஆரம்பித்தபோது, அவருடன் இருந்து கட்சி தொடங்க காரணமாக இருந்தவர்கள் அஜித் பான்ஜா, சுதிப் பந்யோப்பதாய், முகுல் ராய் ஆகியோர் மட்டுமே. இதற்கு பிந்தைய ஆண்டுகளில் மேற்கு வங்கத்தில் மம்தா ஆட்சியை கைப்பற்றியபின் திரிணாமூல் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக மாறினார் முகுல் ராய். நாடாளுமன்ற மேலவை உறுப்பினராகவும் பதவி வகித்துவந்தவர், ரயில்வேத் துறை அமைச்சராகவும் பதவி வகித்தார்.

மம்தா பானர்ஜிக்கு அடுத்தபடியாக திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராகவும் பதவி வகித்தார். அக்கட்சியின் நம்பர் 2 தலைவராக, மம்தாவின் வலதுகரமாக மதிக்கப்பட்டு வந்த இவர்தான் மம்தாவின் மருமகன் அபிஷேக்கை கட்சிக்குள் கொண்டுவந்தார். கட்சிக்குள் வளர்ந்து வரும் பவர் சென்டர்களை உடைக்க முகுல் ராய் கொடுத்த அட்வைஸின் பேரில் கட்சிக்குள் நுழைக்கப்பட்டார் அபிஷேக். ஆனால், இதே முகுல் ராய் பின்னாளில் அபிஷேக் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கட்சியில் இருந்து ஒதுங்க ஆரம்பித்தார். என்றாலும், அவர் மீது பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டது. ஆனால், அமைதியாக கட்சி மாறி பாஜகவில் இணைந்துகொண்டார். பின்னர், மீண்டும் இப்போது அவர் தனது தாய்க் கழகத்திற்கே திரும்பியிருக்கிறார்.

பாஜக தற்போது மேற்கு வங்கத்தில் வலுவாக காலூன்றியுள்ளது என்றால், அது முகுல் ராய் போட்டுக்கொடுத்த அடித்தளம்தான். அவர் வந்தபிறகு தான் மேற்கு வங்கத்தில் தங்களது இருப்பை பாஜக உறுதிப்படுத்திகொண்டது. அடுத்த ஆண்டுகளில், திரிணாமூல் எம்.எல்.ஏக்கள் மற்றும் தலைவர்களை பாஜக பக்கம் மடைமாற்றியதிலும் இவருக்கு பெரும்பங்கு உண்டு என்பதும் கவனிக்கத்தகக்து.

- மலையரசு


Advertisement

Advertisement
[X] Close