[X] Close

இன்னோவா கார் அல்ல. ஏரோப்ளேன் கொடுத்தாலும் தமிழகத்தில் தாமரை மலராது- நாஞ்சில் சம்பத் பேட்டி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

அரசியல்வாதி, மேடைப் பேச்சாளர், நடிகர்  என சுற்றி சுழன்று கொண்டிருந்த நாஞ்சில் சம்பத், கோரோனா சூழலில்  அமைதிகாத்து வருகிறார். வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க வேட்பாளர்களை வெற்றிபெற வைக்கும் மாவட்டச் செயலாளர்களுக்கு ‘இன்னோவா’ கார் பரிசளிக்கப்படும் என்று அக்கட்சியின், மாநிலத் தலைவர் எல். முருகன் அறிவித்திருப்பது நாஞ்சில் சம்பத்தை நினைவுக்கு கொண்டு  வந்திருக்கிறது. ஏற்கனவே, அ.தி.மு.கவில் நாஞ்சில் சம்பத் இணைந்தபோது முதல்வராக இருந்த ஜெயலலிதா, அவருக்கு இன்னோவா காரை பரிசளித்தார். அவர், அந்தக் காரை திருப்பி கொடுத்துவிட்டாலும் இன்னோவா என்றாலே,  தமிழக மக்களுக்கு நாஞ்சில் சம்பத் நினைவுக்கு வருவது தவிர்க்க முடியாததாகிவிட்டது. இந்நிலையில், நாஞ்சில் சம்பத்திடம் பேசினோம்,


Advertisement

பா.ஜ.க தலைவர் எல். முருகன் வேட்பாளரை வெற்றிபெற வைக்கும் மாவட்டச் செயலாளருக்கு இன்னோவா கார் என்றிருக்கிறாரே? எப்படி பார்க்கிறீர்கள்?

பா.ஜ.க அதிகாரத்தின் மூலம் மிகப்பெரிய துஷ்பிரயோகத்தைச் செய்யப்போகிறது. அதிகார அத்துமீறலுக்கு தயாராகி எந்த விலைகொடுத்தாவது வெற்றிபெற வேண்டும் என்கின்ற தரங்கெட்ட அரசியலை தமிழகத்தில் அறிமுகப்படுத்தப் போகிறது. ஏற்கனவே, பல மாநிலங்களின் ஸ்திரத்தன்மையை சின்னாபின்னப்படுத்தி ஆட்சிக்கும் அதிகாரத்துக்கும் வந்த, இந்தக் காவிக்கும்பல் பெரியாரின் பூமியில், அண்ணாவின் நந்தவனத்தில், கலைஞரின் பூந்தோட்டத்தில் கால்வைக்க எத்தனிக்கிறது. வெற்றிபெற வைக்கும் மாவட்டத் தலைவர்களுக்கு இன்னோவா கார் என்றால், இனி என்ன பாவம் செய்யப்போகிறார்கள் என்று கணக்கிட்டுப் பார்த்திட வேண்டும். இந்த அறிவிப்பு தேர்தல் காலத்தில் பா.ஜ.க பல்லாயிரக் கணக்கான கோடிகளை செலவழிக்க தயாரவிட்டது என்பதையேக் காட்டுகிறது. அதாவது, பாசிசம் பயின்றிடாத பைந்தமிழ் நாட்டில் தங்களை நிலைநிறுத்த முடியுமா? என்று யோசிக்கிறார்கள். அவர்களுக்கு நான் எச்சரிக்கையாக சொல்கிறேன். இன்னோவா கார் அல்ல. ஏரோப்ளேன் வாங்கிக்கொடுத்தாலும் தமிழ்நாட்டில் தாமரை மலரவே மலராது. அவர்கள் பிழைக்கவும் முடியாது.


Advertisement

image

உங்களுக்கு ஜெயலலிதா இன்னோவா கொடுத்ததையே காப்பியடித்திருக்கிறார்களா?

அப்படியே, அம்மாவை காப்பியடிக்கிறார்கள்தான். எனக்காவது, அம்மா காரை கட்சியின் பெயரில்தான் பதிவு செய்துக்கொடுத்தார். எனது பெயரில் சொந்தமாக ஒன்றும் கொடுக்கவில்லை. எப்போது அந்தக் காரை திருப்பிக்கொடுத்தேனோ, அதிலிருந்தே கார் வைத்துக்கொள்ளவில்லை. எங்கு சென்றாலும் ரயிலில்தான் செல்வேன். 


Advertisement

image

 

சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கும் சூழலில், நீங்கள் எந்தக் கட்சியிலும் ஏன் இன்னும் சேரவில்லை? என்ன திட்டம் வைத்துள்ளீர்கள்?

நான் இல்லாமலா? கண்டிப்பாக, தி.மு.க சார்பாக அரசியல் பிரச்சாரம் செய்வேன். திமுகவில் இணையலாம் என்று முடிவெடுத்துள்ளேன். கொரோனாவுக்குப் பிறகுதான் இணையவேண்டும். எங்கள் குடும்பமே தி.மு.க குடும்பம். என் பெயர் சம்பத், என் அண்ணன் பெயர் கருணாநிதி, என் தம்பி பெயர் ஜீவா, இன்னொரு தம்பி  ஸ்டாலின். திராவிட இயக்கப் பெயர்களையே, அப்பா எங்களுக்குச் சூட்டினார். மேலும், சுயமரியாதைக் கொள்கைகளை ஊரில் தூக்கிப்பிடித்தது அப்பாதான். நான் மாணவனாக இருந்தபோதே தி.மு.கவில் இருந்தே இயங்கிக்கொண்டிருக்கிறேன்.

கலைஞர்1989 ஆட்சிக்கு வருன்கின்ற காலக்கட்டத்தில் கற்றக் கல்வி, பெற்ற அறிவு ஆகியவை திமுகவில்தான் என்று சொல்லி  வேலைக்குச் செல்லாமல் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு, ஒரே கூட்டத்தில் ஒன்பதரை மணிநேரம் பேசினேன். கலைஞர் தலைமையில்தான் 1989 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17 ஆம் தேதி, இதே நாளில் என் திருமணம் நடந்தது. நான் தி.மு.ககாரன்.  ஆனால், தி.மு.கவில் வைகோவுக்கு அநீதி இழைக்கப்பட்டது என்று வைகோவுக்காக கலகம் செய்து கட்சியிலிருந்து வெளியேறினேன். தி.மு.க என்னை வெளியேற்றவில்லை. அந்த, நன்றிகெட்ட வைகோவுக்காக வெளியேறினேன். ஆனால், என்னுடைய அரசியல் பயணம் ஆஃப் ஆகிவிட்டது. அதற்குப் பிறகு அதிமுகவில் கொஞ்சநாள் இருந்தாலும் அதிமுக மேடைகளிலேயே பெரியார், அண்ணாக் கொள்கைகளைத்தான் பேசினேன். ஜெயலலிதாவை போற்றிப்பாடும் பஜனை எல்லாம் நான் செய்ததில்லை. என் சிறு வயதிலேயே கொள்கைச் சார்ந்த வாழ்க்கைக்கு அர்ப்பணித்து விட்டேன். இனிமேலும் அர்ப்பணிப்பேன்.

image

னால், திமுக கூட்டணியில் வைகோ இருக்கிறாரே? அவரை  நேரடியாக சந்திக்கவேண்டிய சூழல் உருவாகுமே?

நான் வைகோவை சந்திக்கவே போறதில்லை. அவர் இருக்கும் மேடைக்குப் போகப்போறதில்லை. அவர் முகத்தையும் பார்க்கப்போறதில்லை.

திமுகவில் இணையப்போகிறேன்  என்பதை, அதன் தலைமையிடம் தகவல் தெரிவித்துவிட்டீர்களா?

இன்னும்  இல்லை. கொரோனாவால் கடந்த ஐந்து மாதமாக எனது சொந்த ஊரான நாகர்கோயிலில் வசித்து வருகிறேன். இப்போது, பயணமே செய்யமுடியாத சூழல் நிலவுகிறது. தி.மு.க தலைவரை கொரோனா முடிந்ததும் சந்திப்பேன்.

image

அ.தி.மு.கவில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற சர்ச்சை கிளம்பியிருக்கிறதே?

அ.தி.மு.க இந்தத் தேர்தலோடு முடிந்துவிடும். தலைமை இல்லாமல் ஒரு கட்சி இயங்க முடியாது. அப்படியொரு தலைமை அக்கட்சியில் கிடையாது. எடப்பாடி பழனிச்சாமியை எடப்பாடியிலேயே எல்லோருக்கும் தெரியாது. ஓ.பன்னீர் செல்வத்தை தேனியைத்தாண்டி யாருக்கும் தெரியாது. கொரோனா சரியாக நவம்பர் ஆகிவிடும். தமிழக அரசு கொரோனாவால் இறந்தவர்களின் கணக்கைக்கூட  மறைக்கிறது. கொரோனா தொற்று தமிழகத்தில் துவங்கியவுடனேயே, அதனை கட்டுப்படுத்த எல்லாத்துறையும் முழுவீச்சில் இயங்கி இருக்கவேண்டும். அப்படி, அர்ப்பணித்தால் இவ்வளவு பெரிதாக வந்திருக்காது. ஆனால், மத்திய அரசு உதவாத நிலையில் இன்றும் தமிழக மக்கள் வரிப்பணத்தை எடுத்து சாலை போடுறேன், பாலம் கட்டுறேன் என்று ஒதுக்கிக்கொண்டே இருக்கிறார்கள்.

கொரோனாவுக்கு முடிவு கட்டாமல் முதல்வர் வேட்பாளர் சர்ச்சையை கிளப்புகிறார்கள். கொரோனாவை பயன்படுத்தி கொள்ளைதான் அடிக்கிறார்கள். கொரோனா வெல்லக்கூடிய நோய்தான். மக்களுக்காக விழிப்புணர்வை செய்திருக்கவேண்டும். மக்கள் சத்தான உணவு சாப்பிட தி.மு.க தலைவர் 5000 ரூபாய் கொடுங்கள் என்றார். எடப்பாடி பழனிச்சாமி கேட்கவில்லை. எதிர்கட்சித் தலைவர்கள் கூட்டம் போட சொன்னதையும் கண்டுகொள்ளவில்லை. தான் தோன்றித்தனமாக செயல்பட்டு வருகிறார்கள். விரைவில் தமிழக மக்கள், இவர்களைக் கைவிடுவார்கள். வேண்டுமென்றால், இருவரும் கட்சியை இயக்கலாமே தவிர தலைவராகவோ முதல்வர் வேட்பாளராகவோ இருக்க தகுதி இல்லை. தேர்தலில் 234 தொகுதிகளிலும் திமுக வெற்றிபெறும். அதி.தி.மு.க அஸ்தமனம் ஆகும்.

image

எங்களுக்கும் தி.மு.கவுக்கும்தான் போட்டி  என்று பா.ஜ.க கூறியுள்ளதே?

பாஜகவை திமுகவுக்கு போட்டியாகவே கருதவில்லை. திமுக கோபுரம்: பாஜக குட்டிச்சுவர். கோபுரத்திற்கு குட்டிச்சுவர் ஈடாகாது.

திடீர் திரையுலகப் பிரவேசம் செய்தீர்களே? இப்போது என்ன ஆனது?

 நான் திரையுலகுக்கு வருவேன் என்று கனவில்கூட நினைத்ததில்லை. அப்படி ஒரு ஆசையும் இருந்ததில்லை. கட்சி அரசியலில் இருந்து முழுமையாக விலகிவிட்டப் பிறகு, நடிகர் ஆர்.ஜே பாலாஜி இந்த எளியவனின் குடிசைக்கு வந்திருந்தார். “நீங்கள் கட்சி அரசியலில் இருந்து விலகிவிட்டதாக கேள்விப்பட்டேன். மிக்க மகிழ்ச்சி . நான் இயக்கி, நடிக்கவிருக்கும் படத்தில் எனது தந்தையாக நடிக்க முடியுமா? உங்கள் கதாபாத்திரம் மிக முக்கியமானது. மறுப்பு சொல்லாமல் வாருங்கள் ஐயா” என்று அன்போடு அழைத்தார். ‘நாஞ்சில் சம்பத் காணாமல் போய்விடவில்லை இருக்கிறேன்’ என்று காட்டிக் கொள்வதற்காக, இந்த வாய்ப்பை  பயன்படுத்திக்கொண்டு நடிகனாகிவிட்டேன். அடுத்தடுத்து பல படங்களும் நடித்துவிட்டேன். இப்போது, ’சம்பவம்’ என்ற படத்தில் போலீஸ் கமிஷனர் வேடத்திற்கு ஒத்துக்கொண்டேன். ஊரடங்கால் எல்லாம் நின்றுபோனது. சென்னை வந்தால்தான் தெரியும்.

image

நடிப்பு அனுபவம் எப்படி இருந்தது?

நான் அதிகம் சினிமா பார்த்ததில்லை. இதுவரை படப்பிடிப்புக்குகூட சென்றதில்லை. டப்பிங் என்றால் என்னவென்றே தெரியாது. நடிப்பதற்கான திரை மொழியையும் அறிந்திருக்கவில்லை. ஆனாலும், நம்பிக்கையோடு நடிக்கச்சென்றபோது, ஒரு புதிய உலகத்திற்குள் பிரவேசித்த உணர்வு ஏற்பட்டது. எனது நடிப்பு உப்பாக இருக்குமோ சர்க்கரையாக இருக்குமோ என்ற கவலையிலேயே இருந்தேன். இப்போது அது சர்க்கரையாக வந்துள்ளதில் மகிழ்ச்சி.

மேடைகளில் நான் இயல்பாக பேசுகிறவன். அழகான தமிழில், அலங்காரமான தமிழில், ஆர்ப்பரிக்கும் தமிழில், வசீகரிக்கும் தமிழில் பேசி வார்த்தைகளுடன் விளையாடுபவன் நான். ஆனால், திரைப்படத்தில் அதற்கு வாய்ப்பில்லை. அவர்கள் எழுதி வைத்திருக்கும் வசனத்தை மனப்பாடமாக உள்வாங்கிக் கொண்டு, ‘ஒன்ஸ் மோர்… ஒன்ஸ் மோர்’ என்று கேட்டு, திருப்பி திருப்பி சொல்லவேண்டும். எனக்கு இதெல்லாம் மிகவும் புதுமையாக இருந்தது.

அரசியல்வாதி, மேடைப் பேச்சாளர், நடிகர் இந்த மூன்று அடையாளங்களில் உங்களுக்கு பிடித்தது?

எனக்கு பிடித்தது இலக்கியவாதிதான். அதுதான் எனது அடையாளம். படப்பிடிப்புகளுக்கும் புத்தகங்களை கையோடு எடுத்துச் சென்று விடுவேன்.

- வினி சர்பனா

 

 

 

 

loading...

Advertisement

Advertisement

Advertisement