[X] Close

"என் பாட்டியின் பிஎஸ்பிபி பள்ளிப் பெயர் கெட்டுப்போக விடமாட்டேன்!" - மதுவந்தி பேட்டி

Subscribe
Madhuvanthi-Interview-on-PSBB-school-and-Child-sexual-harassment-issue

தமிழகத்தையே அதிரவைத்துள்ளது சென்னை கே.கே.நகரில் உள்ள பிரபல பத்ம சேஷாத்திரி பள்ளி ஆசிரியர் மீதான பாலியல் புகார். மாணவிக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியது, மாணவிகளை தவறான நோக்கத்தில் அணுகியது உள்ளிட்ட பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான அந்தப் பள்ளியின் ஆசிரியர் ராஜகோபாலனிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விவகாரத்தில், சமூக ஊடகங்களில் ஒய்.ஜி.மகேந்திரனும், அவரது மகள் மதுவந்தியும் கடுமையாக விமர்சிக்கப்படுகின்றனர். இந்த சர்ச்சை குறித்து மதுவந்தியிடம் பேசினோம்.


Advertisement

பத்ம சேஷாத்திரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்துள்ள புகார் பெரும் சர்ச்சை ஆகியிருக்கிறதே... உங்கள் விளக்கம் என்ன?

    “ராஜகோபால் பள்ளியில் பணிபுரியும் ஓர் ஆசிரியர்.  ஒரு தனிப்பட்ட நபர் செய்த விஷயம் என்றுதான் புகார் வந்துள்ளது. ஆனால், ஒட்டுமொத்தமாக சமூக வலைதளங்களில் பள்ளியையே தவறாக எழுதுகிறார்கள். என் பாட்டி திருமதி ஒய்ஜிபி ரத்தம் சிந்தி, வியர்வை சிந்தி உழைத்து வளர்த்துவிட்ட மிகப்பெரிய கல்விக்கூடம் இது. அவருடைய பெயரும் பள்ளியின் பெயரும் கெடக்கூடாது. இதனை, நானும் எங்க அப்பாவும்  அனுமதிக்கவே மாட்டோம். என் பாட்டியின் இந்தக் கல்வி பாரம்பரியம்…  கஷ்டப்பட்டு வளர்த்தப் பெயர் ஒரு நொடியில் கெட்டுப்போக விடமாட்டேன். அதற்கான எல்லா நடவடிக்கைகளையும் எடுப்போம். செய்யவேண்டியவற்றை செய்வோம். ஆசிரியர் குறித்த சர்ச்சை கிளம்பியவுடனே, இதற்குண்டான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று நேற்றிரவு 12 மணிக்கே என் அப்பா பள்ளி நிர்வாகத்திற்கு மெயில் அனுப்பினார். அதன் அடிப்படையிலும் அந்த ஆசிரியரை சஸ்பெண்ட் செய்துவிட்டார்கள். உடனடியாக நடவடிக்கை எடுத்தது ரொம்ப நல்ல விஷயம். அப்போதுதான், பிஎஸ்பிபியில் படிக்கும் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் நம்பிக்கை வரும்.


Advertisement

    அந்த ஆசிரியர் மீதான விசாரணையில் தவறு நிரூபிக்கப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுத்தே ஆகவேண்டும். நாங்களும் வலியுறுத்திக்கொண்டே இருப்போம். குடும்பத்தோடு எங்கள் பக்க விசாரணைக்கு எல்லா ஒத்துழைப்பும் கொடுப்போம். ஆனால், இதில் சிலர் எங்கள் சாதியை இழுக்கிறார்கள். என்னை பொறுத்தவரை தவறு செய்தவர் தனிப்பட்ட நபர். அவர்மீது, சுமத்தப்பட்டக் குற்றச்சாட்டு இன்னும் நிரூபணம் ஆகவில்லை. இதில் பிராமணர்கள், பிராமணர் அல்லாதோர் என சாதி, மதத்தை கொண்டுவந்து அரசியல் பண்ணக் கூடாது. இதனை எக்காரணம் கொண்டும் நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். யார் தவறு பண்ணாலும் கேள்வி கேட்கும் குணத்தை என் பாட்டி எனக்கு கொடுத்துள்ளார். அதனை இன்றுவரை ஃபாலோ செய்கிறேன். சாதி, மதத்தை உள்ளே கொண்டு வந்து அரசியல் பேசும் கோமாளிகளை கேள்வி கேட்கத்தான் செய்வேன். இந்தக் கோமாளிகள் அடக்கிக்கொள்ளவேண்டும்.”  

image

இந்தப் பள்ளியோடு உங்களை தொடர்புபடுத்தி விமர்சிக்கப்படுகிறதே?


Advertisement

”பிஎஸ்பிபி பள்ளியை நான் நடத்தவில்லை. ஆனால், இது எங்கள் பள்ளி என்று எங்களை விமர்சிப்பவர்களுக்கு…  ’ஆமாம், என் பள்ளிதான். முழுக்க முழுக்க பள்ளிப்படிப்பை 12 ஆம் வகுப்புவரை பிஎஸ்பிபியில்தான் படித்தேன்.  என் வாழ்க்கையில் கற்றுக்கொண்ட எல்லா பாடங்களும் இந்தப் பள்ளியில் இருந்துதான்’ என்று அழுத்தமாகவே சொல்கிறேன். ஆனால், நான் பள்ளியை நடத்தவில்லை. போய் செக் பண்ணிப் பாருங்க. நானும் தனியாக ஒரு பள்ளி நடத்தி வந்தேன். இப்போது நடத்தவில்லை. பாஜகவில் முழுக்க அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றேன். எங்களை விமர்சிப்பவர்களுக்கு வேறு வேலை இல்லை. இந்த அறிவுஜீவிகள் இதனை புரிந்துகொண்டால் போதும்.”

ஆனால், உங்கள் தந்தை ட்ரஸ்ட்டியாக இருக்கிறாரே?

”பள்ளியின் தினசரி நடவடிக்கைகளை பார்ப்பது பள்ளி நிர்வாகமும் முதல்வரும்தான். எங்க அப்பா பள்ளியில் ஒரு ட்ரஸ்ட்டி. அவ்வளவுதான்.  மற்றபடி அந்தப் பள்ளியை இயக்கவுமில்லை. அவருக்கு எந்த தொடர்பும் இல்லை. அதிகாரமும் இல்லை.  ட்ரஸ்ட்டி என்ற உரிமை மட்டும் இருப்பதால்தான், என் அப்பா மெயில் அனுப்பி கேள்வி கேட்டிருக்கிறார். வீட்டுக் குழாயில் நீர் வரவில்லை என்றால் மோடிதான் காரணம் என்று சொல்ல முடியுமா? இதெல்லாம், எங்கள் மீதும், எங்கள் சாதியின் மீதும் காழ்ப்புணர்ச்சி இருப்பவர்கள் வேண்டுமென்றே செய்யக்கூடிய அசிங்கமான சிறுபிள்ளைத்தனமான செயல். அவர்களின் எண்ணம் ஈடேறாது. பள்ளியின் பெயரையும் எனது பாட்டியின் பெயரையும் கெடுக்க விடமாட்டேன். அதற்கு, உண்டான குரலை கொடுத்துக்கொண்டே இருப்போம்.”

ராஜகோபால் மீது ஏற்கனவே புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கத்தினர் கூறுகிறார்களே?

    “எல்லாமே இப்போதுதான் விசாரணை நடந்து வருகிறது. நாங்களும் கேள்விகளை கேட்டுள்ளோம். அதேசமயம், பெற்றோர்களுக்கு பள்ளி நிர்வாகத்தினர் விளக்கம் அளித்து மெயில் அனுப்பி உள்ளார்கள். எது சரியோ அதனை செய்துதான் ஆகவேண்டும். அதற்காக, ஒரு சாதியையே இழிவுபடுத்துவது ஏற்க முடியாது. நல்லதில்லை.”

image

ஒரு கல்வியாளராக நீங்கள் பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியரால் நேர்ந்ததை எப்படி பார்க்கிறீர்கள்?

”இது தவறான செயல். நிஜமாவே அவர்மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால், இதைவிட அசிங்கம் வேற ஒன்றும் கிடையாது. அவர்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும். அதில் மாற்றுக்கருத்தே இல்லை.  விசாரணை நடப்பதால் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். அரசியலை உள்ளே கொண்டு வரவேண்டும் என்பதால் எங்களை விமர்சிக்கிறார்கள். நான், இப்பள்ளியை நடத்தவில்லை என்று தெரிந்தும் விமர்சிப்பது உள்நோக்கமாகவே தெரிகிறது. சாதியைவிட்டுவிட்டு செய்த தவறை மட்டும் பேசவும்.”

- வினி சர்பனா

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close