[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மணல் கடத்தலையும், அதில் நேர்மையான அதிகாரிகள் கொல்லப்படுவதையும் பார்த்துக்கொண்டிருக்க முடியாது- சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை
  • BREAKING-NEWS சென்னையில் ரகசியமாக நடைபெறும் குட்கா விற்பனை- அதிரடி காட்டிய போலீஸ்!
  • BREAKING-NEWS சென்னையில் விடிய விடிய கனமழை
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்யும் குழுவின் முதல் கூட்டம் சென்னையில் செப்.24ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது
  • BREAKING-NEWS மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாள் விழா லோகோவை டெல்லியில் வெளியிட்டார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் நிபுணர் குழுவின் ஆய்வை ஒத்திவைக்க வேண்டும் என மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியத்திற்கு தமிழக மாசுக்கட்டுப்பாடு வாரியம் கடிதம்
  • BREAKING-NEWS பாஜக அரசால்தான் விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாகும் - அமித்ஷா

தீரன் அத்தியாயம் 2: குற்றப்பரம்பரை – உண்மையும் கற்பிதங்களும்…பகுதி – 1

thuggee-and-their-imagenaries

நடிகர் கார்த்தி நடித்து, இப்போது திரைக்கு வந்துள்ள திரைப்படம் ‘தீரன்: அதிகாரம் 1’. கமலஹாசனின் விருமாண்டி பட தலைப்பு சர்ச்சைக்குப் பிறகு, ‘குற்றப்பரம்பரை என்றால் யார்?’ – என்ற கேள்வியை இந்தப் படம் மீண்டும் எழுப்புகிறது. இந்தத் திரைப்படத்தின் கதைக்களம் ‘குற்றப் பழங்குடி’யைத் தொட்டுச் சென்றிருக்கிறது. ஆனாலும் இந்தப் படத்தில் ‘குற்றப் பழங்குடிகள் என்பது எல்லாம், இந்தியாவை ஏமாற்ற ஆங்கிலேயர்கள் உருவாக்கியது’, ‘குற்றப்பழங்குடிச் சட்டங்களால் அப்பாவி இந்தியர்கள் பலர் பாதிக்கப்பட்டார்கள்’ – என்றெல்லாம் வசனங்கள் மூலம் கூறி உள்ளது, படத்தின் இயக்குநர் கதைக் களத்தை கவனமாகக் கையாண்டு உள்ளதைக் காட்டுகிறது.

இப்போது பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன், அமீர்கான் நடிப்பில் உருவாகிக் கொண்டு இருக்கும் ‘தக்ஸ் ஆஃப் இந்துஸ்தான் (thugs of hindostan)’ படமும் குற்றப்பழங்குடிகள் சம்பந்தப்பட்டதுதான். இந்த திடீர் கவனத்துக்குப் பின்னாக சமீபத்திய ஆய்வுகள் உள்ளன. முன்னர் ’குற்றப்பழங்குடிகள்’ – என்ற வார்த்தையைக் கேட்டுப் பதறியவர்கள் பலர் இப்போது பாவப்படவும் ஆரம்பித்து இருக்கிறார்கள். இந்தியாவில் குற்றப்பழங்குடிகள் – என்ற சொல்லின் வரலாறு பல பொய்களும் மறுப்புகளும் நிறைந்தது. தமிழக வரலாற்றோடு நெருங்கிய தொடர்புடையது.

          

குற்றப் பரம்பரையின் மூலம் என்ன?:

குற்றப் பரம்பரை என்பது குற்றப் பழங்குடிகள் என்பதன் தொடர்ச்சிதான். ’குற்றம் செய்தவர்களின் பரம்பரை’ – என்ற அர்த்தம் இதில் தொனித்தாலும், இதன் உண்மை முகம் வேறு. இன்று தமிழகத்தில் சில குறிப்பிட்ட சாதியினர் இந்தப் பெயரினால் இன்றும் நினைவு கூறப்படுகின்றனர். ஆனால் இந்தப் பெயருக்கும் அந்த சாதிகளுக்கும் அடிப்படையில் எந்தத் தொடர்பும் இல்லை. தமிழக வரலாற்றின் கருப்புப் பக்கங்களில் ஒன்றில் பொறிக்கப்பட்ட குற்றப் பரம்பரை என்ற பெயரின் வரலாறானது உலக சரித்திரத்தோடும், ஆங்கில ஆதிக்கத்தோடும் தொடர்புடையது.

உலகையே வெல்லும் எண்ணத்தோடு உலகெங்கும் போர்களை நடத்திக் கொண்டிருந்த பிரிட்டன் பேரரசு, தனக்குப் போட்டியாக பிரான்ஸ் நாட்டின் மீது ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகப் பல போர்களைத் தொடுத்தது. இந்தப் போர்கள் பிரிட்டனுக்குக் கை கொடுக்காமல் படுதோல்விகளையே சந்தித்தது. இந்தப் போர்களில் பிரான்ஸ் நாட்டின் நகரங்களில் வாழும் பண்பட்ட மனிதர்களை விடவும், பிரான்ஸின் இராணுவத்தினரை விடவும் பிரிட்டனுக்கு அதிக நெருக்கடியைக் கொடுத்தவர்கள் பிரான்ஸில் வாழ்ந்த பழங்குடி மக்கள். உயிரைக் கொடுத்தாவது தங்கள் மண்னைக் காக்க உறுதிபூண்ட பிரான்ஸின் மண்ணின் மைந்தர்களைப் பார்த்து பிரிட்டன் ராணுவமே கலங்கியது. பழங்குடியினரின் சுய ஆட்சி முறைகளும், புவியியல் அறிவும் பிரிட்டன் ராணுவத்தை சில்லுசில்லாகச் சிதைத்தன. 

          

இதனால் தனது ஆட்சி எங்கெல்லாம் உள்ளதோ அங்கெல்லாம் உள்ள பழங்குடி மக்களைப் பார்த்து பிரிட்டன் அரசு பயப்படத் துவங்கியது. பழங்குடி மக்களின் மண் மீதான பற்றும், சமூக அமைப்பும், தனித்துவ நடைமுறைகளும் அந்நிய ஆட்சி எதிர்ப்பைத் தங்களுக்குள் ஒரு கனலாக் கொண்டிருந்தன. அந்தக் கனல் நெருப்பானால் என்ன ஆகும் என்பது ஏற்கனவே பிரான்ஸில் சூடுபட்டிருந்த பிரிட்டனுக்கு நன்றாகவே தெரிந்திருந்தது. பழங்குடிகளை வெறுக்கும் அரசாக பிரிட்டிஷ் அரசு மாறியது.

இந்த சமயத்தில் வட இந்தியாவில் நடந்த சில வழிப்பறிக் கொள்ளைகள், கொலைகளுக்குப் பின்பாக சில குறிப்பிட்ட பழங்குடியின மக்கள் உள்ளார்கள், அவர்கள் குற்றங்களில் ஈடுபடுவதையே தொழிலாகக் கொண்டிருக்கிறார்கள் –என்ற தகவல் ஆங்கிலேயர்களுக்குக் கிடைத்தது. இவ்வாறு குற்றங்களில் ஈடுபடுபவர்கள் ’தக்கீ’ (thuggee/thug) எனப்பட்ட தனி இன மக்களாக ஆங்கிலேயர்களால் குறிப்பிடப்பட்டனர். வட இந்தியாவில் நடந்த கணக்குத் தெரியாத கொலை கொள்ளைகளை எல்லாம் இவர்கள் செய்தவையாக ஆங்கில அரசு கணக்குக் காட்டியது. இன்றும் கின்னஸ் சாதனை புத்தகத்தில் அதிக கொலைகளை செய்தவர்கள் என்று தக்கீக்கள் பெயர் உள்ளது. தக்கீக்கள் கொன்றதாக கின்னஸ் புத்தகம் கருதும் மக்களின் எண்ணிக்கை 20 லட்சம் அல்லது அதற்கும் மேல். ஆனால் இதற்குச் சான்றுகள் ஏதும் வரலாற்றில் இல்லை!. 

          

தக்கீ ஒழிப்பும் ஸ்லீமனும்: 

‘தக்கீக்களை எவ்வாறு ஒழிப்பது என்பதை ஆய்வு செய்கிறோம்’ – என்று கூறி ஒரு அமைப்பை ஆங்கில அரசு உருவாக்கியது. இதில் கவனிக்க வேண்டிய முதல் செய்தி தக்கீக்களைப் பற்றி ஆராய அமைப்பு எதையும் தோற்றுவிக்காமல், அவர்களை அழிக்க மட்டும் ஒரு அமைப்பு நிறுவப்பட்டது என்பதுதான். வில்லியம் ஸ்லீமன் என்ற ஆங்கில அதிகாரி பின்னர் இந்த அமைப்பில் தலைமைப் பொறுப்புக்கு வந்தார். வில்லியம் ஸ்லீமனை இந்தியாவில் டைனோசர் படிமங்கள் இருப்பதைக் கண்டறிந்த ஆங்கில அதிகாரியாக உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். ஒரு இந்தியக் குழந்தை ஓநாய் கும்பலால் காட்டுக்குள் தூக்கிச் செல்லப்பட்டு வளர்க்கப்பட்டதை இவர் தற்செயலாகக் கேள்விப்பட்டு பதிவு செய்தார். இந்தப் பதிவு ஆங்கிலேயர்கள் மத்தியில் இவருக்கு ’ஆய்வாளர்’ என்ற பிம்பம் ஏற்பட உதவியது. இந்தப் பதிவை அடிப்படையாகக் கொண்டு பின்னர் ஜங்கிள் புக் என்ற பெயரில் கதை ஒன்றும் எழுதப்பட்டது. 

                    

இத்தகைய ஸ்லீமன் தலைமையில் இயங்கத் துவங்கிய ’தக்கீ அண்டு டிகாய்டி டிபார்ட்மெண்ட் (thuggee and decoity department)’ அமைப்பு  தக்கீ இனத்தவர் என்று தாங்கள் கருதிய ஆயிரக்கானவர்களை தூக்கில் போட்டும், நாடு கடத்தியும், ஆயுள் சிறைகளில் அடைத்தும் மிகச் சிலரை முழு நேரக் கண்காணிப்பில் வைத்தும் கொடுமைப்படுத்தியது. இதன் மூலம் கொலை, கொள்ளைகளைக் கட்டுப்படுத்துவதாக வெளியில் கூறிக் கொண்டது. ’தக்கீக்களை ஒடுக்குகிறோம்’ – என்ற பெயரில் ஆங்கிலேயர்கள் இப்படி மேற் கொண்ட நடவடிக்கைகள்தான், பின்னர் ‘குற்றப்பரம்பரைச் சட்டம்’ – உள்ளிட்ட உரிமை மீறல்களை அவர்கள் எளிதாக நடத்தும் தைரியத்தையும், வழிகாட்டுதலையும் அவர்களுக்குக் கொடுத்தது. ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு ‘ஒரு நாயை சுட்டுக் கொல்ல வேண்டுமானால், அதற்கு பைத்தியம் என்று முதலில் நிறுவு’ என்று, அதை ஆங்கிலேயர்கள் இந்தியாவில் திறம்படச் செய்தார்கள்.

உலக வரலாற்றில் தக்கீக்கள்:

உலக வரலாறு கடந்த இரண்டாயிரமாவது ஆண்டு வரையில் “தக்கீக்கள்’ என்பவர்கள் ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்த உண்மையான  குற்றவாளிகள் என்றுதான் குறிப்பிட்டது. குற்றங்களில் ஈடுபடும் வன்முறையாளர்களைக் குறிக்கும் ‘தக்(thug)’ என்ற ஆங்கிலச் சொல்லே ‘தக்கீ” என்ற மூலத்தில் இருந்து எடுக்கப்பட்டது எனும் போது தக்கீக்கள் மீதான ஆங்கிலேயரின் பார்வை என்ன என்று நீங்களே எளிதில் யூகிக்கலாம். இந்த நிலையில், ஸ்லீமனின் ஆதாரங்களை சமீபத்தில் ஆராய்ந்த சிலர் எழுதிய நூல்கள் மூலம், தக்கீக்கள் ஆங்கிலேயர்களின் கற்பனையில் விஸ்வரூபம் எடுத்த பாமர மக்களே என்ற உண்மை புலனாகி உள்ளது. மைக் டேஷ் (MIKE DASH) எழுதிய ’தக்: தி ட்ரூ ஸ்டோரி ஆஃப் இந்தியாஸ் மர்டர்ஸ் கல்ட் (THUG: THE TRUE STORY OF INDIA’S MURDEROUS CULT)’ என்ற நூலும் பரமா ராய் (PARAMA ROY) எழுதிய ’இந்தியன் டிராஃபிக் (INDIAN TRAFFIC)’ என்ற நூலும் இவற்றில் குறிப்பிடத்தக்கவை. 2005 ஆம் ஆண்டில் ஐரோப்பாவில் வெளியான மைக் டேஷின் புத்தகம் விற்பனையிலும் சாதனை படைத்தது இங்கே குறிப்பிடத்தக்க ஒன்று!. 

சரி உண்மையில் தக்கீக்கள் என்பவர்கள் இருந்தார்களா? அது அடுத்த அத்யாயத்தில்….

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close