Published : 04,Apr 2021 04:16 PM
முதல்வர் கலந்து கொண்ட பரப்புரை கூட்டத்தில் ஒலித்த இந்தி பாடல்: அதிமுக, பாமகவினர் அதிர்ச்சி

ஓமலூரில் நடைபெற்ற அதிமுக பரப்புரை கூட்டத்தில் இந்தி பாடலுக்கு குத்தாட்டம் ஆடப்பட்டது. முதல்வர் கலந்துகொண்ட கூட்டத்தில் இந்தி பாடல் போட்டதால் அதிமுக மற்றும் பாமக தொண்டர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
சேலம் மாவட்டம் ஓமலூரில் அதிமுக தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு ஓமலூர் தொகுதி அதிமுக வேட்பாளர் மணியை ஆதரித்து பரப்புரை செய்தார். முதல்வர் வருவதற்கு முன்னதாக கூட்டத்தை கூட்ட அதிமுக சார்பில் பரப்புரை மேடையில் ஆடலும் பாடலும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
இதில், தமிழ் திரைப்பட பாடல்களையும், குத்து பாடல்களையும் ஒலிக்கவிட்டு பெண்கள் இளைஞர்கள் நடனமாடினர். அதிலும் குறிப்பாக இந்தி பாடல்களை அதிகமாக ஒலிக்கவிட்டு நடனமாடியது, அதிமுக மூத்த நிர்வாகிகள் மற்றும் பாமகவினரிடையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியது.
தேர்தல் ஆணையம் ஏற்கனவே பரப்புரை மேடைகளில் ஆபாச நடனத்திற்கு அனுமதி கிடையாது என்று கூறிய நிலையிலும் பல்வேறு குத்து பாடல்களை ஒலிக்கவிட்டு ஆபாச சைகைகளுடன் நடனமாடியது கூட்டத்தில் கலந்துகொண்ட பெண்களை முகம் சுளிக்க வைத்தது.