[X] Close

மேகதாது திட்டத்தை நிராகரிப்பீர்: மத்திய அரசுக்கு தமிழக அரசு மீண்டும் வலியுறுத்தல்

தமிழ்நாடு

You-will-reject-the-Megha-Datu-project-The-Government-of-Tamil-Nadu-reiterates-its-demand-to-the-Central-Government

"மேகதாது திட்டத்தை நிராகரிக்க வேண்டுமென்று மத்திய அரசை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம்" என்று தமிழக ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement

சட்டப்பேரவைத் தேர்தல் இந்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், இன்று சட்டப்பேரவை கூடியது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக சென்னை - கலைவாணர் அரங்கில் அவை கூடியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றி கூட்டத்தைத் தொடங்கிவைத்தார்.

அவர் தனது உரையில், "மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர்ப் பிரச்னைகளில் தமிழ்நாட்டின் உரிமைகளை, இந்த அரசு தொடர்ந்து தீவிரமாகப் பாதுகாக்கும். காவிரி நதிநீர் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பும், மாண்புமிகு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையும் செயல்படுத்த வேண்டும் என்ற இந்த அரசு எடுத்த முழுமுயற்சியின் காரணமாக, மத்திய அரசு, 'காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையம்' மற்றும் 'காவிரி நதி நீர் முறைப்படுத்தும் குழு' ஆகியவற்றை உள்ளடக்கி 'காவிரி நதி நீர் மேலாண்மைத் திட்டம் 2018 –ஐ' மத்திய அரசிதழில் 1-6-2018 அன்று வெளியிட்டது.


Advertisement

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினை மீறியும், தமிழ்நாடு அரசின் அனுமதியின்றியும், காவிரி மற்றும் அதன் கிளை நதிகளின் குறுக்கே யாதொரு நீர்த்தேக்கத்தையோ அல்லது திசை திருப்பும் அமைப்புகளையோ கர்நாடக அரசு கட்டுவதை அனுமதிக்கக்கூடாது என்று மத்திய அரசிடம் நாங்கள் மீண்டும் வலியுறுத்தியுள்ளோம். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மீறி, கர்நாடக அரசால் முன்மொழியப்பட்ட மேகதாது திட்டத்தை நிராகரிக்க வேண்டுமென்று மத்திய அரசை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம்.

image

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மீறி, பெரியாறு ஆற்றின் குறுக்கே எந்தவொரு புதிய அணையையும் கட்டுவதற்கு, கேரள மாநிலத்திற்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று நாங்கள் மத்திய அரசை வலியுறுத்துகிறோம். முல்லைப் பெரியாறு அணையினை வலுப்படுத்தும் எஞ்சியுள்ள பணிகளை
மேற்கொள்ளத் தேவையான அனுமதிகளை விரைந்து வழங்குமாறு மத்திய அரசையும், கேரள அரசையும் இந்த அரசு கேட்டுக்கொள்கிறது.


Advertisement

முதல்வர் அவர்களின் முயற்சியால், பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம் மற்றும் ஏனைய நதிநீர்ப் பிரச்சினைகளில் இணக்கமான உடன்பாட்டை எட்டுவதற்கான பேச்சுவார்த்தைகள், அலுவலர்கள் மட்டத்தில் முன்னேற்றத்தில் உள்ளது. தமிழ்நாடு அரசால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவின்படி, பெண்ணையாறு நதிநீர்ப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக, 1956 ஆம் ஆண்டு மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர்ப் பிரச்னைகள் சட்டத்திலுள்ள விதிமுறைகளின் கீழ், தீர்ப்பாயம் ஒன்றை அமைக்குமாறு மத்திய அரசிடம் நாங்கள் கோரியுள்ளோம்.

image

தமிழ்நாட்டின் அருகியுள்ள நீர்வளங்களைப் பாதுகாப்பதிலும், திறம்படப் பயன்படுத்துவதிலும், முதல்வர் தலைமையிலான அரசு உரிய கவனம் செலுத்துகின்றது. ஜல் சக்தி அமைச்சகத்தால், சிறப்பாகச் செயல்படும் மாநிலமாக ,2019 ஆம் ஆண்டிற்கான ‘தேசிய நீர் விருது’ தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு நீர்வளப் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு இயக்கத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட, பெரும் புகழ்வாய்ந்த குடிமராமத்து திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு, இந்த விருது ஒரு சிறப்பான அங்கீகாரமாகும். 2017-18 ஆம் ஆண்டு முதல், குடிமராமத்து திட்டத்தின் கீழ், 1,418 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 6,211 பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டிலுள்ள நீர்ப்பாசன அமைப்புகளை நவீனப்படுத்துவதற்கான இந்த அரசின் முயற்சிகளின் ஒரு பகுதியாக, ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் நிதியுதவியுடன், 2,639 கோடி ரூபாய் மதிப்பீட்டில், கல்லணைக் கால்வாய் பாசன அமைப்பை நீட்டித்தல், புனரமைத்தல் மற்றும் நவீனப்படுத்துதல் திட்டத்திற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

கீழ் பவானி பாசன அமைப்பை நீட்டித்தல், புனரமைத்தல் மற்றும் நவீனப்படுத்துதல் திட்டத்தை 933 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்த, அரசு அனுமதி வழங்கியது. இந்தத்திட்டத்தின் மூலம், 2.47 லட்சம் ஏக்கர் நிலம் நீர்ப்பாசனம் பெறும்.

காவிரி ஆற்றின் குறுக்கே, 406 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நஞ்சை-புகலூர் தடுப்பணைத் திட்டத்தின் அடிக்கல் நாட்டப்பட்டதன் மூலம், ‘நடந்தாய் வாழி காவிரி திட்டம்’ தொடங்கப்பட்டுள்ளது.

காவிரி - குண்டாறு திட்டத்தின்முதல் கட்டமாக, காவிரி - தெற்கு வெள்ளாறு இணைப்பின் பணிகள் விரைவில் தொடங்கப்படும். நீண்ட காலமாக நிலுவையிலிருந்த அத்திக்கடவு-அவிநாசி நீரேற்றுப் பாசனத் திட்டத்திற்கு 1,652 கோடி ரூபாயை, அரசு ஒப்பளிப்பு செய்துள்ளது. இந்தப்பணிகள் விரைவாக
நடைபெற்று வருகின்றன.

2021 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு முன்னர் முதற்கட்டப் பணிகள் நிறைவேற்றப்படும். இதே போன்று, மேட்டூர் அணையின் உபரி நீரைக் கொண்டு, 100 வறண்ட ஏரிகளை நிரப்புவதற்காக, சரபங்கா நீரேற்றுப் பாசனத் திட்டப் பணிகள் 565 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு, 2021 ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதிக்குள் இந்தப்பணிகள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.” என்றார்.


Advertisement

Advertisement
[X] Close