[X] Close

அதிசயமான ’பிளாட்டிபஸ்’: ஒரு விஷமுள்ள பாலூட்டி

platypus-is-poisonous-miraculous--mammal-race-in-earth

’பிளாட்டிபஸ்’ உலக அளவில் ஆய்வாளர்களையே வியப்பில் ஆழ்த்தும் அதிசயமான உயிரினம்.

வாத்தைப் போல தட்டையான அலகும், சவ்வினால் இணைந்த கால்விரல்களும், தட்டையான வாலும், உடலில் தோலும் ரோமமும், பாம்பைப்போல விஷமும் கொண்ட கலவையான உடலமைக் கொண்டுள்ள அபூர்வ விலங்கினம் பிளாட்டிபஸ்.  எலிகளைப் போல மண்ணுக்குள் வளை பறித்து வாழும், மீன்களைப் போல் தண்ணீரில் மணிக்கணக்காக நீந்தி உணவுதேடும், பாம்பின் முட்டையைப் போல் மெல்லிய தோல் கொண்ட முட்டை இட்டு, பறவைகளைப் போல் அடைகாத்து, குட்டிகளுக்கு பாலூட்டும் பாலூட்டி வகையைச் சேர்ந்தது.

1798- இல் தான் முதன்முதலாக இப்படியொரு உயிரினம் இருப்பது உலகுக்குத் தெரியவந்தது. ஆஸ்திரேலியாவில் கிடைத்துள்ள பிளாட்டிபஸ் எலும்புக்கூடு படிமம் ஒன்று, ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முந்தையது என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. பாலூட்டிகளில் மோனோட்ரீம்ஸ் என்னும் வகையைச் சார்ந்த ஐந்து இனங்களில் இன்று உயிருடன் இருப்பவை மூன்று இனங்கள்தாம். அவற்றில் இரண்டு எக்கிட்னா வகையைச் சார்ந்தவை. மூன்றாவது பிளாட்டிபஸ். இவை இரண்டு உயிரினங்களும் ஆஸ்திரேலியாவில் மட்டுமே வாழுகின்றன. பிளாட்டிபஸ் ஆஸ்திரேலியாவின் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளிலும் தாஸ்மேனியாவிலும் பரவலாகக் காணப்படுகின்றன. நன்னீர் ஏரி மற்றும் ஆற்றுப்படுகைகளில் வளை தோண்டி வசிக்கும் இவை இரவு விலங்குகள். இரவுநேரம் முழுவதையும் நீரில் நீந்தியபடி உணவு உண்ணுவதிலேயே கழிக்கின்றன. நீருக்கடியில் வாழும் இறால்வகைகள், லார்வாக்கள், புழுக்கள், கிளிஞ்சல் பூச்சிகள் போன்றவையே இவற்றின் உணவுகள். பிளாட்டிபஸ்ஸின் தோல் இரண்டு அடுக்குகளாலானது. உடலை ஒட்டிய முதல் அடுக்கு காற்றை உள்ளுக்குள்ளேயே தக்கவைத்து வெப்பத்தைப் பேணுகிறது. இரண்டாவது அடுக்கு வெளியிலிருந்து குளிர் தாக்காமல் ஒரு காப்புறை போல செயல்படுகிறது. இதன் ரோமம் போலார் கரடியின் ரோமத்தை விடவும் மிகவும் அடர்த்தியானது. 


Advertisement

பிளாட்டிபஸ்ஸின் ஆயுட்காலம் பன்னிரண்டு ஆண்டுகள் என்று ஆய்வு சொல்கிறது. பெண் விலங்கு, முட்டையிடும் பருவத்தில் வளையை சில சிறப்பம்சங்களுடன் அமைக்கிறது. வெள்ள அபாயத்தை மனத்தில் கொண்டும், நீர்ப்படுகையினின்று பல மீட்டர் உயரத்தில் அமைக்கப்படுகின்றன. பின்னர் முட்டையிட்டு, அடைகாத்து, குட்டிகளுக்கு பாலூட்டி வளர்கிறது. பிளாட்டிபஸ் வித்தியாசமாக குட்டிகளுக்கு பால் கொடுக்கின்றன. இவற்றுக்கு பாலூட்டும் மார்பக காம்புகள் கிடையாது. தாயின் மார்பிலிருக்கும் சுரப்பியிலிருந்து தோல்துவாரங்கள் வழியே கசிந்து வெளியேறும் பாலை குட்டிகள் நக்கியும் உறிஞ்சியும் குடிக்கும்.

ஆண் பிளாட்டிபஸ்ஸின் பின்னங்கால்கள் ஒவ்வொன்றிலும் ஒன்றரை செ.மீ. நீளத்துக்கு ஒரு விஷமுள் உள்ளது. இதன் விஷம் ஒரு நாயைக் கொல்லும் அளவுக்கு வீரியமுள்ளது. இதனால் மனிதர்கள் இறப்பதில்லை என்றாலும் தாங்கமுடியாத அளவுக்கு கடுமையான வலி இருக்குமாம். பிளாட்டிபஸ்ஸின் விஷத்தால் தாக்கப்பட்டால் உடனடியாக பாம்புக்கடிக்கு செய்வதுபோலவே முதலுதவி செய்யவேண்டியது அவசியம். இனப்பெருக்க காலத்தில் பிற ஆண் பிளாட்டிபஸ்களை எதிர்கொள்ளவும், எதிரியைக் கொல்லவும் இவை இந்த நச்சுமுள்ளைப் பயன்படுத்துகின்றன. இந்த நச்சு முள்கள் பல ஆயிரம் ஆண்டுகள் பரிணாம வளர்ச்சியால் பிளாடிபஸ்-க்கு கிடைத்துள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றன.

இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தோலுக்காவும் ரோமத்துக்காகவும் இவை பெருமளவில் வேட்டையாடப்பட்டுவந்தனவாம். ஆனால் இப்போது கடுமையான சட்டங்கள் மூலம் பாதுகாக்கப்பட்டுவருகின்றன. ஆஸ்திரேலியாவின் குறிப்பிட்ட சில உயிரியல் பூங்காக்களில் காட்சிக்காகவும், சில பல்கலைக் கழகங்களில் ஆராய்ச்சிக்காகவும் வனத்துறையின் அனுமதியுடன் பேணப்படுகின்றன. ஆஸ்திரேலிய சட்டம் எந்தக் காரணத்தை முன்னிட்டும் பிளாட்டிபஸ்ஸை பிறநாடுகளுக்கு எடுத்துச்செல்ல அனுமதி மறுக்கிறது. ஆஸ்திரேலியப் பூர்வகுடி மக்களுடைய பாரம்பரியக் கதைகளிலும் பிளாட்டிபஸ் இடம்பெற்றுள்ளது. அவர்களைப் பொறுத்தவரை நீரெலிக்கும் வாத்துக்கும் பிறந்த பிள்ளைதான் பிளாட்டிபஸ்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close