Published : 21,Nov 2019 07:40 AM
இரட்டை வேடங்களில் ‘வலிமை’ அஜித் ? - வைரலாகும் புகைப்படம்

‘நேர்கொண்ட பார்வை’ பிறகு இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் திரைப்படம் ‘வலிமை’. இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியானது முதல் அவரது ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. பொதுவாக அஜித் படத்தின் தலைப்புகள் முதலிலேயே அறிவிக்கப்படுவதில்லை.
இறுதிக் கட்டம் வரை அந்தப் படத்தின் தலைப்பு குறித்து ஒரு ரகசியம் காப்பாற்றபட்டே வரும். ஆனால் இந்த முறை படத்தின் தலைப்பு தொடங்கத்திலேயே வழகத்திற்கு மாறாக அறிவிக்கப்பட்டது. ஆக, சில வருடங்களாக அஜித் படங்களில் பயன்படுத்தப்பட்டு வந்த யுக்தியை இயக்குநர் வினோத் முதன்முறையாக உடைத்துள்ளார்.
இப்படத்தினை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரித்து வருகிறார். மேலும் யுவன் சங்கர் ராஜா இதற்கு இசையமைத்து வருகிறார். ஒளிப்பதிவாளராக நிரவ் ஷா பணியாற்றி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பில் அஜித் போலீஸ் உடையுடன் கலந்து கொண்டதை பலரும் அறிவர். அதேபோல் க்ளீன் ஷேவ் செய்த முகத் தோற்றத்தில் அஜித் இடம் பெற்ற புகைப்படமும் சில நாள்கள் முன்பாக கசிந்தது.
இந்நிலையில் அஜித்தின் இன்னொரு தோற்றம் சம்பந்தமான புகைப்படம் ஒன்று வெளியே கசிந்துள்ளது. ஆகவே அதை வைத்து பார்க்கும்போது இப்படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடிப்பதாக தெரிய வந்துள்ளது. போலீஸ் கதாபாத்திரத்தில் ஒரு தோற்றம் உறுதியாகி உள்ள நிலையில், இளமை தோற்றத்தில் உள்ள அஜித்தின் இன்னொரு வேடமாக படத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரிய வருகிறது.
அந்த இளம் தோற்றம் வழக்கம்போல ப்ளாஷ்பேக் காட்சியில் வரும் அஜித்தாக இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளது என்றும் கூறப்படுகிறது. இந்தப் படம் இப்போது சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.