Published : 07,Jul 2019 02:06 AM
நிலத்தடி நீர் அபாயகரமான பகுதி பட்டியலில் திருவண்ணாமலைக்கு முதலிடம்

தமிழ்நாட்டில் நிலத்தடி நீர் அபாயகரமான நிலையிலுள்ள பகுதிகளில் திருவண்ணாமலை முதலிடத்தில் உள்ளது.
தமிழ்நாட்டில் கடுமையான தண்ணீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது. சென்னை மக்களும் தண்ணீருக்காக சாலையெங்கும் குடங்களுடன் அலைகின்றனர். இதனால் பல்வேறு இடங்களில் அவ்வபோது போராட்டங்களும் நடைபெறுகிறது. சென்னையில் தண்ணீர் இல்லாததால் ஓட்டல்கள் இழுத்து மூடும் நிலை உருவாகியுள்ளது. பல்வேறு ஐ.டி கம்பெனிகளில் வீட்டில் இருந்தே வேலை செய்ய பணியாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இந்தத் தண்ணீர் பஞ்சத்திற்கு நிலத்தடி நீர் குறைந்தே முக்கிய காரணமாக கருதப்படுகிறது.
சென்னை, டெல்லி, பெங்களூரு, ஹைதராபாத் உள்பட நாட்டின் 21 நகரங்களில் நிலத்தடி நீர் முற்றிலும் வறண்டுவிடும் என்றும், அதன் காரணமாக 10 கோடி மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் ‘நிதி ஆயோக்’ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி சென்னை நகரில் 3 ஆறுகள், 4 நீர்நிலைகள், 5 சதுப்பு நிலங்கள், மற்றும் 6 காடுகள் முற்றிலும் வறண்டுவிட்டதாக ‘நிதி ஆயோக்’ தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் நிலத்தடி நீர் அபாயகரமான நிலையில் உள்ள பகுதிகளின் புள்ளி விவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதில், திருவண்ணாமலை மாவட்டம் முதல் இடத்திலும், தஞ்சாவூர் இரண்டாவது இடத்திலும், சென்னை 14ஆவது இடத்திலும் உள்ளது. நாட்டிலுள்ள 255 மாவட்டங்கள் தண்ணீர் பற்றாக்குறை மற்றும் வறட்சியான மாவட்டங்கள் எனக் கண்டறியப்பட்டுள்ளன.
இதற்கிடையில் நீர்ப்பாதுகாப்பு மற்றும் சேகரிப்பு திட்டங்களை ஊக்குவிக்க ‘ஜல்சக்தி அபியான்’ என்னும் திட்டத்தை, மத்திய அரசு கடந்த ஜூன் மாதம் அறிவித்தது. இத்திட்டம் ஜூலை 1 முதல் செப்டம்பர் 15 வரை ஒரு கட்டமாகவும், அக்டோபர் 1 முதல் நவம்பர் 30 வரை ஒரு கட்டமாகவும் செயல்படுத்தப்படவுள்ளது