Published : 11,Mar 2019 07:37 AM

மதுரையில் ஏப்ரல் 18-ஆம் தேதி வாக்குப்பதிவு நேரத்தை அதிகரிக்க தயாராக உள்ளோம் - ஆட்சியர்

Ready-to-extend-Polling-time-in-Madurai--Collector

மதுரையில் ஏப்ரல் 18-ஆம் தேதி வாக்குப்பதிவு நேரத்தை அதிகரிக்க தயார் என மாவட்ட ஆட்சியர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறுகிறது. இதேபோல காலியாக உள்ள 21 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறுகிறது.

இதனிடையே மதுரையின் புகழ்பெற்ற சித்திரைத் திருவிழா, இந்தாண்டு ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறுகிறது. ஏப்ரல் 7-ஆம் தேதி மதுரை சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கும் நிலையில், முக்கிய வைபவமான தேரோட்டம் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மதுரை சித்திரை திருவிழா தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். ஆனால் தேர்தல் நாளன்று இந்தாண்டு சித்திரை திருவிழா வருவதால், மக்களால் எப்படி வாக்களிக்க முடியும் என பலரும் கேள்வி எழுப்பினர். இதனைத்தொடர்ந்து சித்திரை திருவிழா தொடர்பான விவரங்களை இன்றைக்குள் தாக்கல் செய்ய மதுரை மாவட்ட ஆட்சியருக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இந்நிலையில் மதுரையில் ஏப்ரல் 18-ஆம் தேதி வாக்குப்பதிவு நேரத்தை அதிகரிக்க தயார் என மாவட்ட ஆட்சியர் நடராஜன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் நடராஜன், “ தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து மதுரையில் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. நடத்தை விதிமீறல்கள், முறைகேடுகள் தொடர்பாக 1950 என்ற எண்ணிற்கு பொதுமக்கள் புகார்களை தெரிவிக்கலாம். வாக்குச்சாவடி மையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு வீல்சேர்கள் வழங்கப்படும். விதிமுறைகளை முறையாக பின்பற்றுமாறு அனைத்துக்கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மதுரையில் மக்களவைத் தேர்தலை ஒத்திவைக்குமாறு அனைத்துக்கட்சிகள் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. சித்திரை விழா நடக்கும்சூழலில் ஏப்ரல் 18-ல் மதுரையில் தேர்தல் நடத்த வேண்டாம் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதனால் மதுரையில் ஏப்ரல் 18-ஆம் தேதி வாக்குப்பதிவு நேரத்தை அதிகரிக்க தயாராக உள்ளோம். தேரோட்டம் மதியம் 12 மணிக்கு முடிந்துவிடும் என்பதால் வாக்குப்பதிவு நேரத்தை அதிகரிக்க தயார். சித்திரை திருவிழா தொடர்பான உள்ளூர் விடுமுறை குறித்து மட்டுமே கேள்வி கேட்கப்பட்டதால் ஏப்ரல் 19 பற்றி தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்கப்பட்டது” என கூறினார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்