Published : 12,Jan 2019 03:32 PM

“ஒருநாள் போட்டியில் டெஸ்ட் விளையாடலாமா?”- கூல் தோனியால் டென்ஷன் ஆன ரசிகர்கள்

1st-ODI--Dhoni-Creates--Unwanted-Record---Twitter-Slams-Ageing-Stalwart

இந்திய அணியின் தோல்விக்கு தோனி மந்தமாக விளையாடியதுதான் காரணம் என்று சில ரசிகர்களும், சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தவர்களை விடுத்து தோனியை மட்டும் ஏன் விமர்சிக்கிறீர்கள் என்று சிலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்திய அணியின் கேப்டன்களில் மிக முக்கியமான சாதனைகளை படைத்தவர் தோனி. பல்வேறு கோப்பைகளை அவரது தலைமையிலான அணி வென்றுள்ளது. அதோடு, பேட்டிங்கிலும் ஒரு காலத்தில் இந்திய அணியில் மிடில் ஆர்டர் தூணாக இருந்தவர். தோல்வியின் விளிம்பில் இருந்த போட்டியை கூட தனது மேஜிக் பேட்டிங்கால் வெற்றி பெற செய்வார். விக்கெட் கீப்பில் கூட அவர் உலக அளவில் சிறந்த வீரராக உள்ளார். 

            

டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற தோனி, தற்போது ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறார். சமீப காலமாக தனது மோசமான பேட்டிங் ஃபார்ம் காரணமாக அவர் மீது விமர்சனங்கள் எழுந்தன. முக்கியமான தருணங்களில் அவர் பேட்டிங் முன்புபோல சிறப்பாக இல்லை. அதனால் அவர் அணியில் இடம்பெற வேண்டுமா? வேண்டாமா? என்ற கேள்விகள் பலராலும் முன் வைக்கப்பட்டது. அதனால், வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடரில் இருந்து அவர் அதிரடியாக நீக்கப்பட்டார்.

          

இந்நிலையில்தான், நீண்ட இடைவெளிக்கு பின் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இன்று விளையாடினார். 289 என்ற இலக்கை விரட்டிய இந்திய அணி, 4 ரன்னில் 3 விக்கெட் இழந்து தடுமாறியது. அப்போது, ரோகித் சர்மா உடன் இணைந்து விளையாடிய தோனி அணியை மீட்க நிதான ஆட்டத்தை விளையாடினார். சிங்கிள் எடுப்பதை காட்டிலும் டாட் பந்துகளாக அவர் மாற்றினார். 100 ரன்களை இந்திய அணி கடந்த பிறகும் அவர் தொடர்ந்து நிதானமாக விளையாடியது ரசிகர்களை டென்ஷனாக்கிவிட்டது. இறுதியில் 93 பந்துகளில் தான் அரைசதம் அடித்தார். இதில் மிகவும் சந்தோஷமான விஷயம் என்னவென்றால், தோனி நீண்ட காத்திருப்புக்கு பின் 10 ஆயிரம் ரன் என்ற மைல்கல்லை எட்டியுள்ளார்.

              

பழைய தோனியாக இருந்திருந்தால் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து வெற்றி பெற வைத்திருப்பார். இல்லையென்றால், வெற்றியை உறுதி செய்துவிட்டாவது ஆட்டமிழந்திருப்பார். 51 ரன்னில் திடீரென அவர் ஆட்டமிழந்தது அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்திவிட்டது. அடிக்க வேண்டிய ஸ்கோர் அதிகமாக இருந்ததால் ரோகித் சர்மாவுக்கும் நெருக்கடி ஏற்பட்டுவிட்டது. இறுதியில் இந்திய அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 254 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது. 

                  

தோனியின் மோசமான அரைசதங்களில் இது இரண்டாவது ஆகும். இதற்கு முன்பு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 108 பந்துகளை எதிர்கொண்டு அரைசதம் அடித்து இருந்தார். அந்தப் போட்டியிலும் அடுத்தடுத்து 3 விக்கெட்டுகள் வீழ்ந்த நேரத்தில் தான் தோனி களமிறங்கி இருந்தார். ரோகித் சர்மாவுக்கு பதில் அன்று ரகானே இருந்தார். ஒவ்வொருவராக விக்கெட்டுகளை பறிகொடுத்த நிலையில், கடைசி வரை போராடினார். ஆனால், பந்துகளை அதிக வீணடித்தது தோல்விக்கு காரணமாகிவிட்டது. ஏனெனில், அன்று இலக்கு வெறும் 190 ரன் தான்.  

                        

இந்நிலைதான், இந்திய அணியின் தோல்விக்கு காரணம் தோனிதான் என்று ட்விட்டரில் சிலர் விமர்சித்து தள்ளிவிட்டனர். டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றபின்னர், ஒருநாள் போட்டியை டெஸ்ட் களமாக தோனி மாற்றிவிட்டார் என்று ரசிகர்கள் கலாய்த்துள்ளனர். 

                

சிக்ஸர் அடிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை சிங்கிளாவது அடித்து விளையாடி இருக்கலாம் என்றும் சில ரசிகர்கள் கூறியுள்ளனர். இவரால், ரோகித் சர்மா அடித்து விளையாட நெருக்கடி ஏற்பட்டதாக குமுறுகின்றனர். 

                  

இதுஒருபுறம் இருக்க, 4 ரன்னில் 3 விக்கெட் சரிந்த நிலையில் இந்திய அணியை தோனி மீட்டெடுத்தார் என்று அவரது ரசிகர்கள் பதிலுக்கு கத்தியை சுழற்றினார்கள். அதோடு நடுவரின் தவறான முடிவாலேயே தோனி எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழக்க நேர்ந்தது என்றும் சிலர் பதிவிட்டனர்.

                

தோனியை ஏன் 4வது இடத்தில் இறக்கக் கூடாது? என்று சிலர் வலியுறுத்தினர். தவான் 0, கோலி 3, ராயுடு 0, தினேஷ் 12, ஜடேஜா 8 என சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தைவர்களை எல்லாம் விட்டுவிட்டு தோனியை மட்டும் ஏன் விமர்சிக்கிறார்கள் என்றும் தோனி ரசிகர்கள் பொங்கிவிட்டனர். 

             

எப்படி இருந்தாலும், இந்த ஆண்டிற்கான தொடக்கத்தை தன்னுடைய 68வது அரைசதத்துடன் தோனி தொடங்கியுள்ளார். தோனி விளையாடும் விதம் சரிதான். டாட் பந்துகளை மட்டும் குறைத்துக் கொண்டால் போதும்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்