[X] Close

ஓடும் ரயிலில் பாஜக தலைவர் சுட்டுக் கொலை: குஜராத் திக்திக்..

Gujarat-BJP-Leader--53--Shot-Dead-On-Moving-Train

குஜராத்தில் ஓடும் ரயிலில் பாஜக தலைவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக தலைவர்களில் ஒருவர் ஜெயந்திலால் பானுஷாலி .இவர் அகமதாபாத்தில் இருந்து பூஜ் செல்வதற்காக ரயிலில் சென்று கொண்டிருந்தாக தெரிகிறது. அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் முரட்டுத்தனமாக பானுஷாலி சென்ற ரயில் பெட்டியில் ஏறியுள்ளனர். அத்துடன் கண்ணிமைக்கும் நேரத்தில் அவரின் கண்கள் மற்றும் நெஞ்சுப் பகுதியில் சரமாரியாக சுட்டுள்ளனர். இதில் பானுஷாலி பரிதாபமாக உயிரிழந்தார்.


Advertisement

53 வயதாகும் இவர் கடந்த 2007-ஆம் ஆண்டு முதல் 2012-ஆம் ஆண்டு வரை குஜராத் சட்டப்பேரவையில் எம்எல்ஏவாக பதவி வகித்தவர். அப்தாஷா தொகுதியில் இருந்துதான் அவர் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டிருந்தார்.

இதனிடையே தடவியல் துறை மற்றும் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தடயங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது உயிரிழந்த பானுஷாலியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பேசிய ரயில்வே போலீசார், “ பயன்படுத்தப்படாத ஒருசில குண்டுகளையும் ரயில்வே பெட்டியில் இருந்து கைப்பற்றியுள்ளோம். அது தடயவியல் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள் யார் என்பதை கண்டறிய தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறோம்” என்றார்.

பெண் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கடந்த ஆண்டு ஜெயந்திலால் பானுஷாலி மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் குஜராத் மாநில பாஜக துணைத் தலைவர் பதவியிலிருந்து விலகினார். இருப்பினும் அவர் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்திருந்தார். இதனிடையே பெண் தான் கொடுத்த பாலியல் வன்கொடுமை புகாரை திரும்பப் பெற்றதால் கடந்த 2018-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவர் மீதான வழக்கை குஜராத் உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close