Published : 28,Nov 2018 05:38 AM
ஜெர்மனியில் தொழில்நுட்பம் கற்கும் அஜித்.. இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்..!

ஜெர்மனியில் நடிகர் அஜித் எடுத்துக் கொண்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
நடிகர் அஜித் பெரும்பாலான நேரங்களில் அமைதியாகத் தான் இருப்பார். ஆனால் அவரின் செயல்களே எப்போதும் அவரின் ரசிகர்களை பேச வைக்கிறது. அவரின் படங்கள் தொடர்பான பேச்சும், புகைப்படமும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்துவது போலவே அவரின் சில செயல்களும் ரசிகர்களால் அடிக்கடி கொண்டாடப்படுகிறது.
சமீபத்தில் யாருக்கும் தெரியாமல் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூபாய் 15 லட்சம் நிதியை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கியிருந்தார் அஜித். அத்துடன் தன்னிடம் செல்ஃபி எடுக்க வருபவர்களிடம் கோபம் காட்டாமல் பக்குவமாக எடுத்துச் சொல்வது உள்ளிட்ட பல விஷயங்களில் அஜித் பெருந்தன்மையுடன் நடந்து கொள்வதாக அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
கலையுலகை அஜித் எவ்வாறு நேசிக்கிறாரோ, அதேபோல பைக் ரேஸ், கார் ரேஸ் மீதும் அஜித்திற்கு தீராத ப்ரியம் உண்டு. ஆனால் சமீப காலங்களாக அவரின் ஆர்வம் குட்டி விமானங்களை இயக்குவது மீது திரும்பியுள்ளது. அண்மையில் அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் குட்டி விமானம் உருவாக்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்கு அஜித் ஆலோசகராக இருந்தார். அவரின் வழிகாட்டுதல்படி உருவாக்கப்பட்ட குட்டி விமானம் பலரின் பாராட்டுகளையும் பெற்றது.
இதுஒரு புறம் இருக்க அவரின் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘விஸ்வாசம்’ திரைப்படம் பொங்கலுக்கு வெளிவர உள்ளது. இப்படத்தின் மோசன் போஸ்டரும் சமீபத்தில் வெளியானது. இதற்கு ரசிர்கள் நல்ல முறையில் வரவேற்பு கொடுத்திருந்தனர். விஸ்வாசம் படப்பிடிப்பிற்கு பின்னர் அஜித் ஒருவாரம் தனது குடும்பத்தினருடன் செலவிட்டுள்ளார். அதன்பின் அஜித் வெளிநாடு சென்றார். ஆனால் எந்த நாடு என்பது சற்று கேள்விக்குறிய விஷயமாக இருந்தது. இந்நிலையில் அஜித் ஜெர்மனி சென்றுள்ளது தெரியவந்துள்ளது.
அங்கு சிறிய குட்டி விமானம் தொடர்பான பல தொழில்நுட்பங்களை அஜித் கற்று வருவதாக தெரிகிறது. இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த புகைப்படங்களை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அத்துடன் எந்தவொரு விஷயத்தையும் கற்பதற்கு வயது ஒரு தடையில்லை என தெரிவிக்கும் அஜித் ரசிகர்கள் தங்களுக்கு அஜித் ஒரு முன்உதாரணம் எனவும் கூறியுள்ளனர்.