Published : 21,Sep 2018 12:10 PM

ஜீரோ மார்க் வாங்கின கோலிக்கு விருதா? - கொதிக்கும் மல்யுத்த வீரர் பஜ்ரங் 

Virat-Kohli-scores--zero--but-gets-Khel-Ratna--Bajrang-Punia-with-80-points-rejected

விளையாட்டிற்கான தேசிய விருது கிரிக்கெட் வீரர் ஒருவருக்கு அளிக்கப்படும் ஒவ்வொரு முறையும் சர்ச்சை வெடிக்கிறது. இந்த முறை விராட் கோலிக்கு கேல் ரத்னா விருது அளிக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உலக சாம்பியன்ஷிப் பளுதூக்குதல் போட்டியில் தங்கம் வென்ற மீரா பாய் சானுவுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளதும் கேள்வியை எழுப்பியுள்ளது.

அதாவது விளையாட்டு வீரர்களுக்கு அவர்கள் எந்தெந்த போட்டியில் என்ன பதக்கம் வெல்கிறார்கள் என்பதன் அடிப்படையில் புள்ளிகள் வழங்கப்படும். ஒலிம்பிக்/பாரா ஒலிம்பிக், உலக சாம்பியன்ஷிப், ஆசிய போட்டிகள், காமன்வெல்த் போட்டிகள் அடிப்படையில் புள்ளிகள் கணக்கிடப்படுகிறது. இதில், ஒலிம்பிக் போட்டியில் வெல்லும் பதக்கங்களுக்குதான் அதிக புள்ளிகள். ஒலிம்பிக்கில் தங்கம் வென்றால் 80 புள்ளிகள், உலகக் கோப்பை சாம்பியன் ஷிப் 40, ஆசிய போட்டிகள் 30, காமன்வெல்த் 25 புள்ளிகள் கிடைக்கும். இந்தப் பட்டியலில் கிரிக்கெட்டிற்கு இடம் இல்லை. இருப்பினும், உலகக் கோப்பை, ஆசியக் கோப்பை போட்டிகள் அடிப்படையில் விருது வழங்கப்படும் எனத் தெரிகிறது.

         

கேல் ரத்னா விருதுகளுக்கான இறுதி பட்டியலில் மொத்தம் 17 வீரர்கள் இடம்பெற்றிருந்தனர். புள்ளிகள் கணக்கீட்டின் படி பட்டியலில் கிரிக்கெட் இல்லாததால் விராட் கோலிக்கு புள்ளிகள் கிடையாது. அவருக்கு அடுத்து, கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ள மீரா பாய் சானுக்கு 44 புள்ளிகள் வழங்கப்பட்டன. பளுதூக்கும் வீரர்கள் பஜ்ரங் புனியா மற்றும் வினேஷ் போகட் ஆகியோருக்கு தலா 80 புள்ளிகள் கிடைத்தன. மேலும், பாரா தடகள வீரர் தீபா மாலிக் 78.4, டென்னீஸ் வீரர் மணிகா பட்ரா 65, குத்துச் சண்டை வீரர் 52, வில்வித்தை வீரர் அபிஷேக் வர்மா 55.3 ஆகியோர் மீரா சாயை விட அதிக புள்ளிகள் பெற்றுள்ளனர். ஆனால், அவர்கள் யாருக்கும் விருது கிடைக்கவில்லை.

          

இந்நிலையில், புள்ளிகள் இல்லாத விராட் கோலிக்கும், குறைவான புள்ளிகள் பெற்ற மீரா பாய் சானுக்கு தேசிய விளையாட்டு விருதுகள் அறிவிக்கப்பட்டது தொடர்பாக சர்ச்சைகள் வெடித்துள்ளன. நாட்டின் மிகப்பெரிய விருதினை இறுதி செய்வதில் கைகளை உயர்த்தும் முறை கைபிடிக்கப்படுவது குறித்து பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். புள்ளி பிரச்னை குறித்து தேர்வுக்குழு உறுப்பினர் ஒருவர் கூறுகையில், “விருதுக்கான தேர்வில் கிரிக்கெட்டிற்கு தனிப்பிரிவு இல்லை. அதனால், கைகளை உயர்த்தி தேர்வு செய்யப்பட்டது. அதில், மொத்தமுள்ள 11 உறுப்பினர்களில் 8 பேர் விராட் கோலிக்கு ஆதரவு அளித்தனர்” என்றார். 

 
இந்த விவகாரத்தை பளுதூக்கும் வீரர் பஜ்ரங் புனியா கையிலெடுத்துள்ளார். எல்லாவித திறமையையும் வெளிப்படுத்திய பின்னர் தனக்கு ஏன் விருது அளிக்கப்படவில்லை என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து பஜ்ரங் புனியா கூறுகையில், “என்னுடைய திறமைக்கு நான் தேர்வு செய்யப்படாதது வருத்தம் அளிக்கிறது. எந்த அடிப்படையில் விருதினை அளிக்கிறார்கள் எனத் தெரியவில்லை. நான் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளேன். விருது அறிவிப்பு அதிர்ச்சியாக இருக்கிறது. நான் ஏன் நிராகரிக்கப்பட்டேன் என்பதற்கு எனக்கு காரணம் தெரியவேண்டும்.  

                  

எனக்கு தகுதி இருக்கிறதா இல்லையா எனத் தெரிய வேண்டும். அப்படி நான் தகுதியானவன் என்றால் விருதினை அளிக்க வேண்டும். இந்த விவகாரத்தை விளையாட்டு ஆணையத்திடம் கொண்டு செல்லவில்லை. ஏனெனில் அவர்கள் எனது பெயரை பரிந்துரை செய்துள்ளார். அதனால், அவர்கள் என் பக்கம்தான் இருக்கிறார். தனிப்பட்ட முறையில் இந்தப் போராட்டத்தை கையில் எடுத்துள்ளேன். இந்த விருதுக்காக நான் கெஞ்சவில்லை. தேசிய விருதுகள்தான் ஒரு வீரருக்கான அங்கீகாரம்” என ஆதங்கப்பட்டார்.

         

பஜ்ரங் புனியா ஆசிய போட்டிகள், காமன்வெல்த் போட்டிகளில் தங்கம் வென்றுள்ளார். அதேபோல், உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்றுள்ளார். இதனிடையே, விளையாட்டுத் துறை அமைச்சர் ராஜ்வர்தன் சிங் ரத்தோரை பஜ்ரங் நேற்று சந்தித்தார். சந்திப்புக்கு பின்னர் பேசுகையில், “அமைச்சர் ராஜ்வர்த்தனை இன்று சந்திப்பதாக இருந்தேன். ஆனால், அவரே என்னை அழைத்து பேசினார். அவரிடம் தனக்கு கேல் ரத்னா விருது வழங்கப்படாதது குறித்து கேட்டேன். இந்த விவகாரம் குறித்து ஆலோசிப்பதாக தெரிவித்தார். விராட் கோலி, மீராபாய் சானுவை விட அதிக புள்ளிகளை பெற்றுள்ளேன். இன்றைக்குள் அரசிடம் இருந்து முறையான பதில் வரவில்லை என்றால் நீதிமன்றத்தை நாடவுள்ளேன். எனக்கு நீதி வேண்டும்” என்றார் பஜ்ரங்.