Published : 22,Jul 2018 01:35 PM

"எந்த கட்சிகளுடன் கூட்டணி" - முடிவெடுக்க ராகுலுக்கு முழு அதிகாரம்

CWC-authorises-Rahul-Gandhi-to-take-call-on-alliances-for-2019-polls

காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் கட்சியின் தலைவர் ராகுல் காந்திக்கு வழங்கப்பட்டுள்ளது. 

காங்கிரஸ் கட்சியின் தலைவராக கடந்த டிசம்பர் மாதம் ராகுல் காந்தி பொறுப்பேற்றார். 51 உறுப்பினர்களுடன் புதிதாக மத்திய காரிய கமிட்டியை ராகுல் காந்தி சமீபத்தில் அமைத்தார். இந்த காரிய கமிட்டியில் உறுப்பினர்களாக 23 பேர், நிரந்தர அழைப்பாளர்களாக 19 பேர், சிறப்பு அழைப்பாளர்களாக 9 பேர் என மொத்தம் 51 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். 

              

இந்நிலையில், மாற்றியமைக்கப்பட்ட காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் டெல்லியில் இன்று நடைபெற்றது. நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக விவாதிக்கவும், ஆலோசிக்கவும் காங்கிரஸ் கட்சியின் புதிய காரிய கமிட்டியின் இந்த முதல் கூட்டம் கூடியது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில், முன்னாள் தலைவர் சோனியாகாந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், ஏ.கே.அந்தோணி உள்ளிட்ட மூத்த தலைவர்களும், காரிய கமிட்டி உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி புதிதாக அமைக்கப்பட்டுள்ள காரிய கமிட்டி கடந்தகாலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தின் பாலம் என்று கூறினார். கட்சி உறுப்பினர்கள் நாட்டில் ஒடுக்கப்பட்டவர்களுக்காக உழைக்கவேண்டும் என கேட்டுக்கொண்டார். மக்களின் நம்பிக்கையை மீண்டும் பெறுவதற்கு கட்சியின் உறுப்பினர்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

   

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் அசோக் கெலாட், கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் ராகுல் காந்திக்கு வழங்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார். காங்கிரஸ் கட்சி தேர்தல் பிரச்சார குழுவையும் அமைக்க உள்ளதாக அவர் கூறினார். 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்