Published : 25,May 2018 03:57 AM
முதல் அலகை மூட தமிழக அரசு உத்தரவு : ஸ்டெர்லைட்

ஸ்டெர்லைட் ஆலையின் முதல் அலகை மூட தமிழக அரசின் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளதாக ஸ்டெர்லைட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மும்பை பங்குச் சந்தைக்கு ஸ்டெர்லைட் நிறுவனம் எழுதியுள்ள கடிதத்தில், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கடந்த 23ம் தேதி ஸ்டெர்லைட் நிறுவனத்தின் மின் இணைப்பை துண்டித்ததோடு, ஆலையின் முதல் அலகை மூடுமாறு உத்தரவிட்டுள்ளது. ஏற்கெனவே மார்ச் 27-ஆம் தேதி முதல் ஆலை செயல்படாமல் தான் இருந்து வருகிறது. அரசின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு இருக்கிறோம். அரசிடம் இருந்து மறு உத்தரவு வந்த பின்பு ஆலை இயங்கத் தொடங்கும்” என தெரிவித்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தொடர்ச்சியான போராட்டம் நடைபெற்று வந்த நிலையில், கடந்த 22-ஆம் தேதி போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.