Published : 10,Mar 2017 03:55 AM
சிவசேனாவைக் கண்டித்து கேரளாவில் முத்தப்போராட்டம்

கேரள மாநிலம் கொச்சியில் உள்ள மரைன்டிரைவ் பகுதி, சுற்றுலா பயணிகள் அதிகமாக வந்து செல்லும் இடம். சர்வதேச மகளிர் தினத்தில் அங்கு ஏராளமான பெண்களும், ஆண்களும் அமர்ந்து இருந்தனர். இதனைப் பார்த்த சிவசேனா தொண்டர்கள், அவர்களை தகாத வார்த்தையில் திட்டியதோடு, இங்கே மீண்டும் வரக்கூடாது எனக் கூறி பிரம்புகளால் அடித்து விரட்டினர். இந்தச் சம்பவத்தை போலீசாரும் கண்டுகொள்ளாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் இதனை கண்டித்து நேற்று முத்தப் போராட்டம் நடத்தப்பட்டது. “கிஸ் ஆப் லவ்” அமைப்பினர் அழைப்பு விடுத்திருந்த இந்த முத்த போராட்டத்தில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டு, ஒருவருக்கொருவர் முத்தம் கொடுத்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். சிவசேனா கட்சி, கலாசார காவலர்கள் என்ற பெயரில் தனி மனித உரிமைகளைப் பறிப்பதாக அவர்கள் தெரிவித்தனர். இதைப்போல திருவனந்தபுரம், கோழிக்கோடு போன்ற இடங்களிலும் முத்தமிடும் போராட்டங்கள் நடைபெற்றன. ஏற்கனவே கடந்த 2 வருடங்களுக்கு முன்பு கொச்சியில் “கிஸ் ஆப் லவ்” அமைப்பினர் பொது இடங்களில் முத்தப்போராட்டம் நடத்தி, பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த விவகாரம் கேரளா சட்டப்பேரவையிலும் எதிரொலித்தது. அப்போது பேசிய முதலமைச்சர் பினராயி விஜயன், இளைஞர்களிடம் அத்துமீறிய சிவசேனாவினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், போலீசாரும் இந்த சம்பவத்தில் தவறு செய்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.