Published : 20,Feb 2023 10:48 AM
”கஞ்சாவை நுகர்ந்தால் மட்டும் பத்தாது..” - அதீத போதை தரும் வேலைக்கான சம்பளம் இத்தனை லட்சமா?

கஞ்சாவை மோப்பம் பிடிக்கும் வேலைக்காக 88 லட்சம் ரூபாய் சம்பளம் கொடுப்பதாக அறிவித்திருக்கிறது ஜெர்மனியைச் சேர்ந்த ஃபார்மசி நிறுவனம்.
உலகம் முழுவதும் ஊழியர்களை ஆட்குறைப்பு செய்யும் செய்திகளே தொடர்ந்து வெளியாகி வரும் வேளையில் ஜெர்மனியைச் சேர்ந்த மருந்தக நிறுவனம் ஒன்று 88 லட்சம் ரூபாய் சம்பளத்தில் வேலைக்கு ஆட்களை எடுக்கப்போவதாக அறிவித்திருக்கிறது.
உலகிலேயே அதிக போதை தரும் வேலையாக ஜெர்மனி நிறுவனத்தின் இந்த அறிவிப்பு கருதப்படுகிறது. ஜெர்மனியின் கொலோன் என்ற பகுதியில் இயங்கி வரும் Cannamedical என்ற நிறுவனம், மருத்துவம் குணம் வாய்ந்த கஞ்சாவை ஜெர்மனியில் உள்ள மருந்தகங்களில் விற்பனை செய்வதற்காக, அதன் வாசனையை நுகர, உணர மற்றும் புகைக்கக் கூடிய, தரத்தை சரிபார்க்கக் கூடிய தேர்ந்த ஆட்களை வேலைக்கு எடுக்கப்போவதாக கூறியிருக்கிறது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான டேவிட் ஹென் சிறுபத்திரிகையிடம் பேசியிருக்கிறார். அதில், “ஆஸ்திரேலியா, கனடா, போர்ச்சுகல், மெசடோனியா, டென்மார்க் போன்ற நாடுகளில் உள்ள தங்களது வியாபாரிகளுக்கு தரமானவற்றை அனுப்புவதற்காகவே இந்த வேலைக்கு ஆட்களை எடுக்கிறோம்” என்றிருக்கிறார்.
மேலும், “இந்த வேலையில் சுலபமாக சேர்ந்துவிடலாம் என பலரும் விண்ணப்பித்திருக்கிறார்கள். ஆனால் இந்த வேலையை செய்யக்கூடியவர் மருத்துவ கஞ்சாவை பயன்படுத்தக் கூடிய பயனர் என்று ஜெர்மனியில் பதிவு செய்திருக்க வேண்டும்.” என்றும் டேவிட் ஹென் தெரிவித்திருக்கிறார்.
இந்த நிலையில்தான் ஜெர்மனியில் சுமார் 40 லட்சம் பேர் போதை வஸ்துக்களை பயன்படுத்தி வருபவர்கள் என்று தெரிய வந்திருக்கிறது. இதுபோக கடந்த ஆண்டு ஜெர்மனியின் சுகாதாரத்துறை அமைச்சர் கார்ல் லாட்டர்பாக் கஞ்சா பயன்பாடு குறித்து பேசி தலைப்புச் செய்தியாக்கினார்.
அதன்படி பொழுதுபோக்குக்காக கஞ்சா பயன்படுத்துவதை சட்டப்பூர்வமாக்குவதை ஆதரித்திருந்தார். மேலும், 30 கிராம் வரை மரிஜூவானா எடுத்துக்கொள்வோருக்கான அபராதத்தையும் நீக்கியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.