Published : 21,Dec 2022 09:48 PM
வெற்றிமாறனுடன் இணைந்த கோபி நயினார் - எதிர்பார்ப்பை எகிறவைக்கும் ‘மனுசி’ பட அறிவிப்பு

வெற்றிமாறன் தயாரிப்பில், இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிக்கும் ‘மனுசி’ திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டரை நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் பாடகியாகவும், நடிகையாகவும் வலம் வருபவர் ஆண்ட்ரியா, கடைசியாக வெற்றிமாறன் தயாரித்த 'அனல் மேலே பனித்துளி' படத்தில் நடித்திருந்தார். இப்படம் கடந்த மாதம் நேரடியாக சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தைத் தொடர்ந்து ஆண்ட்ரியாவின் நடிப்பில் ‘பிசாசு 2’, ‘கா’, ‘மாளிகை’ உள்ளிட்டப் படங்கள் படப்பிடிப்பு நிறைவடைந்து விரைவில் வெளிவர உள்ளன.
மேலும் சில பெயரிடப்படாதப் படங்களிலும் நடிகை ஆண்ட்ரியா நடித்து வருகிறார். இந்நிலையில் நயன்தாராவின் ‘அறம்’ படத்தை இயக்கிய கோபி நயினாரின் இயக்கத்தில், நடிகை ஆண்ட்ரியா ‘மனுசி’ என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், அவரது பிறந்த நாளை முன்னிட்டு இன்று வெளியிடப்பட்டுள்ளது. வெற்றிமாறன் இந்தப் படத்தை தயாரிக்க உள்ளார். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சூர்யா வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
Happy to share the first look posters of #ManusiTheMovie all the best Team! pic.twitter.com/DNRsioQune
— Suriya Sivakumar (@Suriya_offl) December 21, 2022
இரண்டு விதமான போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் குறித்தும், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்தும் எந்த அறிவிப்பும் இன்னும் வெளியாகவில்லை. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2017-ம் ஆண்டு நயன்தாரா நடிப்பில் வெளியான ‘அறம்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் தனிக் கவனம் பெற்றவர் இயக்குநர் கோபி நயினார். முதல் படத்தை பெண் கதாபாத்திரத்தை முன்னிலைப்படுத்தி எடுத்த நிலையில், இரண்டாவது படமும் அதேபோல் இருக்கும் என்றே தெரிகிறது. நாயன்தாராவிற்கு ஒரு மாஸ் ஹீரோவுக்கு நிகரான கெத்தான ஹீரோயின் ரோலை செதுக்கி இருந்தார் கோபி நயினார். இதனால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்தே காணப்படுகிறது.