Published : 07,Oct 2022 07:53 PM

‘இந்து கடவுள்களை வழிபட மாட்டேன்’ என சூளுரைத்த ஆம் ஆத்மி அமைச்சர் - பாஜக கடும் விமர்சனம்

Won-t-worship-Hindu-gods-AAP-minister-attends-mass-conversion-event-in-Delhi-BJP-hits-back

ஆம் ஆத்மி கட்சியின் சமூக நலத்துறை அமைச்சர் ராஜேந்திர பால் கௌதம், டெல்லியில் நடைபெற்ற பௌத்த மத நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, இந்துக் கடவுள்களை வழிபட மாட்டேன் என உறுதிமொழி எடுத்த வீடியோ வைரலான நிலையில், இந்து விரோத ஆம் ஆத்மி கட்சிக்கு மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள் என்று பாஜக கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளது.

தலைநகர் டெல்லியில் உள்ள அம்பேத்கர் பவனில் கடந்த 5-ம் தேதி நடைபெற்ற பௌத்த மத நிகழ்ச்சியில், சுமார் 10 ஆயிரம் பேர் கலந்துகொண்டு, பௌத்த சமயத்திற்கு மாறினர். இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக ஆம் ஆத்மி கட்சியின் சமூக நலத்துறை அமைச்சர் ராஜேந்திர பால் கௌதமும் கலந்துகொண்டார். விழாவில் மதம் மாறும்போது எடுத்த உறுதிமொழிதான் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதில், “பிரம்மா, விஷ்ணு, மகேஸ்வரர் மீது எனக்கு நம்பிக்கை இல்லை, அவர்களை வணங்கவும் மாட்டேன். கடவுளின் அவதாரம் என்று நம்பப்படும் ராமர் மற்றும் கிருஷ்ணர் மீதும் எனக்கு நம்பிக்கை இல்லை, அவர்களையும் வணங்க மாட்டேன்” இவ்வாறு அனைவராலும் உறுதிமொழி எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

கடந்த 1956-ம் ஆண்டு விஜயதசமி நாளான அக்டோபர் 14 அன்று பல லட்சம் பேருடன் சேர்ந்து, இந்து மதத்தில் இருந்து பௌத்த சமயத்திற்கு மாறினார் டாக்டர் அம்பேத்கர். இந்து மதத்தின் வர்ணாசிரம சாதிய கட்டமைப்பு மற்றும் தீண்டாமையை எதிர்த்து அந்த மதத்தில் இருந்து வெளியேறுவதாகவும் அவர், அப்போது தெரிவித்திருந்தார். "இந்து மதத்தில் பிறந்துவிட்டேன்; ஆனால் ஒருபோதும் இந்துவாக இறக்க மாட்டேன்" என அம்பேத்கர் 22 உறுதிமொழிகளையும் எடுத்திருந்தார்.

image

அம்பேத்கரின் இந்த வழியைப் பின்பற்றி, கடந்த 5-ம் தேதி டெல்லியில் விஜயதசமி நாளன்று நடைபெற்ற பௌத்த மத விழாவில் தான், ஆம் ஆத்மி கட்சியின் சமூக நலத்துறை அமைச்சர் ராஜேந்திர பால் கௌதமும் கலந்துகொண்டு சூளுரை எடுத்திருந்தார். இந்த வீடியோ வெளியாகி சர்ச்சையை கிளப்பிய நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில் இதுதொடர்பான புகைப்படங்களையும் பதிவிட்டு, “புத்தரை நோக்கி செல்லும் பணியை ‘ஜெய்பீம்’ என்று அழைப்போம். அசோக விஜயதசமி அன்று ‘ஜெய்பீம்’ இயக்கத்தின் கீழ், 10,000-க்கும் மேற்பட்ட மக்கள், சாதி மற்றும் தீண்டாமை இல்லாத இந்தியாவை உருவாக்க உறுதிமொழி எடுத்தனர்” என்று குறிப்பிட்டு இருந்தார்.

இதையடுத்து பாஜக கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் தகவல் தொடர்புத் துறை தேசியப் பொறுப்பாளர் அமித் மால்வியா தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்து, "அரவிந்த் கெஜ்ரிவாலின் அமைச்சர் ராஜேந்திர பால் கெளதம் இந்தியாவை உடைக்கும் திட்டத்தை (Breaking India) செயல்படுத்தி வருகிறார். எந்த தவறும் செய்யாதீர்கள், இந்த இந்து மத வெறுப்பு பிரச்சாரத்துக்கு அரவிந்த் கெஜ்ரிவால்தான் 'முதன்மை ஆதரவாளராக' இருப்பார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பா.ஜக. எம்.பி மனோஷ் திவாரி செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்ததாவது, “அமைச்சரின் பேச்சானது இந்து மதத்துக்கும், பௌத்த மதத்துக்கும் நடந்த மிகப்பெரிய அவமதிப்பு. ஆம் ஆத்மி அமைச்சர்கள் நாட்டில் கலவரத்தை உருவாக்க முயல்கிறார்கள். இந்து மதத்தை இழிவுப்படுத்தியதற்காக ராஜேந்திர பால் கெளதமை கட்சியில் இருந்து முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நீக்க வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக ராஜேந்திர பால் மீது புகார் கொடுத்திருக்கிறோம்" என தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் டெல்லி சமூக நலத்துறை அமைச்சர் ராஜேந்திர பால் கௌதம், இந்த வீடியோ குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில், “பாஜக ஒரு தேச விரோத சக்தி. பௌத்தத்தில் எனக்கு நம்பிக்கை உண்டு. அதில் மற்றவர்களுக்கு என்னப் பிரச்சனை?. அவர்கள் வேண்டுமானால் புகார் செய்யட்டும். சட்டரீதியாக எதிர்கொள்வேன். விரும்பிய மதத்தை பின்பற்றும் சுதந்திரத்தை அரசியல் சாசனம் வழங்குகிறது. ஆம் ஆத்மி கட்சிக்கு பாஜக பயப்படுகிறது. அதனால் தான் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறது. எங்கள் மீது பொய் வழக்குகளை மட்டுமே போட முடியும்” என்று கூறியுள்ளார்.

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்