Published : 22,Jul 2022 12:50 PM

எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை ஒரு மாயை! - திரெளபதி முர்முவின் வெற்றி சொல்லும் பாடம்!

Lessons-opposition-parites-learns-from-Draupadi-Murmu-victory-in-Presidential-election

குடியரசுத் தலைவர் மாளிகையை அலங்கரிக்கும் பழங்குடியின முதல் பெண் திரெளபதி முர்முவின் வெற்றி சாதாரணமானது அல்ல.

பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளரான அவர், 6,76,803 (64.03%) வாக்கு மதிப்புகளை பெற்றுள்ளார். எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான யஷ்வந்த் சின்ஹா, 3,80,117 (35.97%) வாக்கு மதிப்புகளை மட்டுமே பெற்றுள்ளார். எதிர்க்கட்சிகளின் குறுக்கு வாக்களிப்பு (Cross-Voting) மூலம் ஒற்றுமை சிதைந்ததால், திரெளபதி முர்மு எதிர்பார்த்ததைவிட அதிக வாக்குகளை பெற்று அற்புதமான வரலாற்று வெற்றியை பதிவு செய்திருக்கிறார்.

image

எதிர்க்கட்சி அணிகளில் ஏற்பட்ட பிளவு மற்றும் குழப்பத்திற்கு குடியரசுத் தலைவர் தேர்தல் முடிவு சான்றாக உள்ளது. நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவையைச் சேர்ந்த 17 எதிர்க்கட்சி எம்.பி.க்களும், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 126 எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களும், அந்தந்த கட்சிக் கொள்கைகளை மீறி திரெளபதி முர்முவுக்கு வாக்களித்துள்ளனர். அசாமில் 22, மத்தியப் பிரதேசத்தில் 19, மகாராஷ்டிராவில் 16, ஜார்க்கண்ட், குஜராத்தில் தலா 10, சத்தீஸ்கரில் 6 எம்.எல்.ஏ.க்களின் வாக்குகள் திரெளபதி முர்முவுக்கு கிடைத்துள்ளன.

பா.ஜ.க. கூட்டணிக்கு இது எதிர்பார்த்த ஒன்றாக இருக்கலாம். ஆனால், காங்கிரஸ் ஆளும் சத்தீஸ்கர் மற்றும் ஜார்க்கண்டிலும் கூட எதிர்க்கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் குறுக்கு வாக்களித்திருப்பது (Cross-Voting) சுட்டிக்காட்டப்பட வேண்டியது. எதிர்க்கட்சி அணிகளிலும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி முகாமிற்குள்ளும் இருக்கும் பிளவுகளை அம்பலப்படுத்தியுள்ளது என்றே பார்க்க வேண்டியிருக்கிறது. 2024 நாடாளுமன்றத் தேர்தல் எப்படியிருக்கும் என்பதை யூகிக்க வைக்கிறது. பல்வேறு மாநிலக் கட்சிகள் பா.ஜ.க.வுக்கு எதிரான ஒரே புள்ளியில் இணைந்து அரசியல் ரீதியாக செயல்பட்டு வரும் சூழலில், எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு கிடைத்த பெரிய வாய்ப்பு மாயை போல் உள்ளது என்பதை அடிக்கோடிட்டு காட்டுகிறது.

image

திரெளபதி முர்மு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து வாக்குகளை பெற்றுள்ளார். அதேசமயம் ஆந்திரா, நாகாலாந்து, சிக்கிம் ஆகிய 3 மாநிலங்களில் எந்தவொரு எம்.எல்.ஏ.வும் யஷ்வந்த் சின்காவுக்கு வாக்களிக்கவில்லை. கேரளாவில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எந்த ஆதரவும் இல்லை என்றாலும், அங்கிருந்து ஒரு எம்.எல்.ஏ.வின் வாக்கை திரெளபதி முர்மு பெற்றார். மேலும், ஆந்திரா, அருணாச்சலப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், மணிப்பூர், மிசோரம், நாகாலாந்து, ராஜஸ்தான், சிக்கிம், தமிழ்நாடு, தெலங்கானா, உத்தரகாண்ட், மேற்குவங்கம் மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களில் இருந்து எதிர்பார்த்த வாக்குளின் எண்ணிக்கையை பெற்றுள்ளார்.

யஷ்வந்த் சின்ஹாவுக்கு பெரும் பின்னடைவாக குறுக்கு வாக்குகள் நடந்தன. உதாரணமாக, அசாம் மாநிலத்தில் இருந்து திரெளபதி முர்மு 104 வாக்குகள் பெற்றார். மாநில சட்டப்பேரவையில் பாஜக கூட்டணியின் பலத்தைவிட 22 வாக்குகள் அதிகம். எதிர்க்கட்சி ஆளும் ஜார்க்கண்டில், ஜே.எம்.எம்., பா.ஜ.க., மற்றும் சுயேட்சைகள் தவிர 10 வாக்குகளைப் பெற்றார். குஜராத்திலும் 10 எம்.எல்.ஏ.க்கள் வாக்குகள் கூடுதலாக கிடைத்துள்ளன.

image

சத்தீஸ்கர், கோவா, ஹரியானா, மகாராஷ்டிரா, மேகாலயா, ஒடிசா மற்றும் பஞ்சாப் மாநிலங்களிலும் குறுக்கு வாக்கு மூலம் திரெளபதி முர்முவுக்கு பலன் கிடைத்தது. எனினும், கர்நாடகா, திரிபுரா மற்றும் புதுச்சேரியில் நிர்ணயிக்கப்பட்ட பலத்தைவிட குறைவான வாக்குகளைப் பெற்றார்.

குடியரசுத் தலைவர் மற்றும் துணைக் குடியரசுத் தலைவர் தேர்தல் போட்டிகளில் பெரும்பாலும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்கள் தொடக்கத்தில் இருந்தே வெற்றி பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், குறுக்கு வாக்குகளின் மூலம் குடியரசுத் தலைவர் மாளிகையில் பழங்குடியினத்தைச் சேர்ந்த முதல் பெண்ணை அமரவைத்து அழகுப் பார்க்க எதிர்க்கட்சியினர் விருப்பமாக இருந்திருப்பார்கள் என்று நேர்மறையாக எடுத்துக் கொண்டாலும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்குவங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜியின் நடவடிக்கைகள் எதிர்க்கட்சிகளின் முகாம்களில் பெரும் பிளவைக் காட்டுகிறது.

image

குடியரசுத் தலைவர் தேர்தலில் யஷ்வந்த் சின்ஹாவுக்கு வாக்களித்ததைப் போலல்லாமல், துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் விலகியிருக்கப் போவதாக மம்தா பானர்ஜி அறிவித்துள்ளது, விரிசல் ஏற்பட்டிருக்கும் கண்ணாடியை சுக்குநூறாக்கியிருக்கிறது. காங்கிரஸ் தன்னிடம் கலந்து ஆலோசிக்கவில்லை என்று அவர் குறிப்பிடுகிறார். எதிர்க்கட்சிகளின் துணைக் குடியரசு வேட்பாளரான மார்கரெட் ஆல்வாவுக்கு வாக்களிக்கப் போவதில்லை என்று அறிவித்துள்ளார். இது பாஜக கூட்டணியின் வேட்பாளர் ஜெக்தீப் தன்கரின் பெரிய வெற்றிக்கு வழிவகுக்கும். மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி அரசாங்கத்திற்கு பெரும் முட்டுக்கட்டையாக இருந்த தன்கருக்கு, மம்தா பானர்ஜி தடையில்லாமல் விலகி நிற்கிறார்.

2024 நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க.வுக்கு எதிராக ஒரு பெரிய எதிர்க்கட்சி கூட்டணியை உருவாக்கும் மம்தா பானர்ஜியின் எண்ணத்திற்கும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் முயற்சிகளுக்கும் குடியரசுத் தலைவர் தேர்தல் முடிவு ஒரு பெரிய அடியாகும்.

image

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி கட்சிகளும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அல்லாத கட்சிகளும் குடியரசுத் தலைவர் மற்றும் துணைக் குடியரசுத் தலைவர் பதவிக்கான போட்டிகளுக்கு ஒன்றிணைய முடியாதபோது, அங்கு வெற்றியை எதிர்பார்க்க முடியாது. தாமரை இலை தண்ணீர் போல இருப்பது தொடருமெனில் அரசியலில் மேலும் பல புதிய வரலாறுகள் எழுதப்படும்.

- ஜி.எஸ்.பாலமுருகன்

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்