Published : 02,Jul 2022 08:03 PM

தமிழில் ஒரு கே.ஜி.எஃப்?.. தனுஷ் படத்தின் மாஸ் அப்டேட் - யார் அந்த ‘கேப்டன் மில்லர்’ ?

Dhanush-will-have-three-looks-in-Arun-Matheswaran-s-Captain-Miller

நடிகர் தனுஷின் புதியப் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தனுஷ் நடிப்பில் பிரம்மாண்டாக உருவாகியுள்ள ஹாலிவுட் திரைப்படமான ‘தி கிரே மேன்’ படம் வருகிற 15-ம் தேதி குறிப்பிட்ட சில திரையரங்குகளிலும், ஜூலை 22-ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓ.டி.டி தளத்திலும் வெளியாகிறது. இதையடுத்து மித்ரன் ஜவஹர் இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடிப்பில் குடும்ப கதையம்சம் கொண்ட படமாக உருவாகியுள்ள ‘திருச்சிற்றம்பலம்’, வருகிற ஆகஸ்ட் 18-ம் தேதி வெளியாகிறது. இந்தப் படங்களை தொடர்ந்து தமிழில் ‘வாத்தி’ என்றும், தெலுங்கில் ‘சார்’ என்றும் பெயரிடப்பட்டுள்ள படத்தில் தனுஷ் நடித்து வருகிறார்.

image

இருமொழிகளில் உருவாகும் இந்தப் படத்தை, பிரபல தெலுங்கு இயக்குநரான வெங்கி அட்லூரி இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இதேபோல் செல்வராகவனின் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘நானே வருவேன்’ திரைப்படத்தின் இறுதிக் கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மிக நீண்ட நாட்களாக பேச்சுவார்த்தையில் இருந்த தனுஷின் புதியப் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘ராக்கி’, சாணிக்காயிதம்’ ஆகியப் படங்களை இயக்கி அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், தனுஷ் நடிக்கவுள்ள படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

image

‘கேப்டன் மில்லர்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. இந்தப்படம் 1930-கள் மற்றும் 40-களில் மெட்ராஸ் பிரசிடென்சியை மையமாக வைத்து எடுக்கப்பட உள்ளது. இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க உள்ளார். சந்தோஷ் நாரயணன் இசையமைக்க உள்ளதாக முன்னதாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது ஜி.வி.பிரகாஷ் கமிட்டாகியுள்ளார்.

இந்தப் படம் குறித்து ஆங்கில இணைய ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள இயக்குநர் அருண் மாதேஸ்வரன், “டி.ஜி. தியாகராஜன் சாரின் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவிருந்த இந்தக் கதையை, கடந்த 2018-ல் நான் எழுதியிருந்தேன். பின்னர் கதை சுருக்கத்துடன் தனுஷை அணுகினேன். நாங்கள் இருவரும் அப்போது இந்தப் படம் குறித்து எதையும் இறுதி செய்யவில்லை. இருப்பினும் இந்தப் படம் 2019-ல் மீண்டும் உருவாகத் தொடங்கியது. இந்தப் படம் தனது முதல் இரண்டு படங்களான ‘ராக்கி’ மற்றும் ‘சாணிக் காயிதம்’ படத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும்.

image

இந்தக் கதை ஒரு ஹீரோயிக் கதாபாத்திரமாக இருக்கும். எனது முதல் இரண்டு படங்களைப் போலல்லாமல், வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கதை வயது வந்தோர் பார்வையாளர்களுக்கான படமாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஆக்‌ஷன் அதிகம் இருக்கும் என்பதால், இது யு/ஏ படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உண்மையில், இரண்டாம் பாதியில் போர் காட்சிகள் இருக்கும்.

ஒரு ஆக்‌ஷன் படத்தை பிரம்மாண்டமாக உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில், நான் உருவாக்கிய ஒரு சுவாரஸ்யமான கற்பனைக் கதாபாத்திரம். நான் எழுதத் தொடங்கும் போது யாரையும் மனதில் வைத்து எழுதாத நிலையில், பாதியிலேயே இந்த கதாபாத்திரத்திற்கு தனுஷ்தான் சரியாக இருப்பார் என்று உணர்ந்தேன். பெரிய நட்சத்திரமாகவும், அதே சமயத்தில் ஒரு அற்புதமான நடிகராகவும் இருப்பதால், தனுஷை எனக்கு தனிப்பட்ட முறையில் பிடிக்கும். படத்தின் கதாநாயகனின் கதாபாத்திரம் வெவ்வேறு காலக் கட்டங்களை கொண்டதால், அதற்கு தனுஷ்தான் பொருத்தமானவர் என்பது தெரியும். கதையில் ஆக்‌ஷன் மற்றும் வெவ்வேறான உணர்ச்சிகள் காட்டக்கூடிய சம்பவங்கள் உள்ளதால், அவர் தான் சரியாக இருப்பார் என்று உணர்ந்தேன்.

image

கேப்டன் மில்லராக தனுஷ் நடிக்கிறார். அந்த கதாபாத்திரத்திற்கு மேலும் இரண்டு பெயர்கள் கூட உள்ளன. படத்தில் மூன்றுவிதமான தோற்றங்களில் தனுஷ் வரவுள்ளார்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இந்தப் படத்திற்கு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்ய, நாகூரன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். கலை இயக்குநராக தா. ராமலிங்கம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ‘பரதேசி’ படத்திற்காக தேசிய விருது பெற்ற பூர்ணிமா ராமசாமி, இந்தப்படத்தின் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்ற உள்ளார். அவருடன் சேர்ந்து தனுஷின் ஆடை வடிவமைப்புக்காக காவ்யா ஸ்ரீராமும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். திலீப் சுப்பராயன் சண்டைக்காட்சிகளை கவனிக்கிறார். பான் இந்தியா படமாக பிரம்மாண்டமாக ‘புஷ்பா’, கே.ஜி.எஃப்’ போன்று தயாரிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

கேப்டன் மில்லர் என்றால் இரண்டு பெயர்கள் நினைவிற்கு வருவார்கள். ஒன்று விடுதலை புலிகள் அமைப்பை சேர்ந்தவர். மற்றொன்று ஹாலிவுட் படத்தின் கதாபாத்திரம். நிஜ கேப்டன் மில்லரின் வாழ்க்கையிலும், சினிமா கதாபாத்திர மில்லரிலும் நிறைய சாகசங்கள் இருக்கின்றன. இவை இரண்டையும் தழுவி புதிய கதை ஒன்றினை இயக்குநர் உருவாக்கி இருக்கலாம். இரண்டையும் குறித்து சுருக்கமாக பார்க்கலாம்.

எல்.டி.டி.இ கேப்டன் மில்லர்

எல்.டி.டி.இ அமைப்பைச் சேர்ந்தவர் வல்லிபுரம் வசந்தன் என்பவரை குறிப்பதாகும். 1987 ஆம் ஆண்டு நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் ஈடுபட்டு இவர் மரணமடைந்தார். 240 கரும்புலிகளில் மில்லர் முதலாவது கரும்புலியாகவும், புலிகளின் முதலாவது தற்கொடைப் போராளி எனவும் புகழப்படுகிறார். கரும்புலிகள் நாள் ஆண்டு தோறும் ஜூலை மாதம் 5 ஆம் நாள் நினைவுகூரப்பட்டு வருகிறது. இவரது நினைவாக தாக்குதல் நடைபெற்ற இடத்தில் 2002 ஆம் ஆண்டில் மில்லரின் சிலை ஒன்று திறந்து வைக்கப்பட்டது. தற்போது வெளியிடப்பட்டுள்ள மோஷன் போஸ்டரில் உள்ள முகம் இவரை ஒத்து போகும் வகையில் உள்ளது. இதனால், இலங்கை ராணுவம், விடுதலைப்புலிகள் இடையிலான சண்டைக் காட்சிகள் இந்தப் படத்தில் இடம்பெற வாய்ப்புகள் உள்ளதாக பார்க்கப்படுகிறது.

image

கேப்டன் மில்லர் கதாபாத்திரம்:

கேப்டன் மில்லர் என்பது 1998 ஆம் ஆண்டு வெளியான ஹாலிவுட் படமான சேவிங் பிரைவேட் ரியான் படத்தில் வரும் கதாபாத்திரம். இது காலம் கடந்து ரசிகர்கள் மனதில் நின்ற ஒரு கதாபாத்திரம். இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் நடைபெறும் ஒரு படம் தான் இது. போர் முனையில் சிக்கியிருக்கும் ஒரு வீரரை மீட்டுக் கொண்டு வந்து அவரது தாயிடம் ஒப்படைக்கும் பணியை ஏற்கும் கேப்டன் மில்லர் கதாபாத்திரத்தின் சாகசம் நிறைந்த காட்சிகள் கொண்ட படம் தான் இது. இந்தப் படத்தில் நிறைய ஆஸ்கர் விருதுகள் கிடைத்தன. இந்தக் கதாபாத்திரத்தை தழுவி கூட ஒரு ஸ்கிரிப்டை அருண் மாதேஸ்வரன் எழுதியிருக்கலாம். 

image

மோஷன் போஸ்டரை பார்க்கும் போது ஒரு பிரம்மாண்ட படைப்பாக இது உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மோஷன் போஸ்டரின் உருவாக்கத்டிஹ்ல் கே.ஜி.எஃப் படத்தில் சாயல் சற்றே தெரிகிறது. அதனை போன்று மாஸ் ஹீரோ செண்ட்ரிக் படமாக இதனை உருவாக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்