Published : 01,Apr 2022 09:44 AM

ஐபிஎல் 2022: அதிரடியை தொடருமா பஞ்சாப்? - எழுச்சி பெறுமா கொல்கத்தா?

IPL-2022-Match-8-KKR-vs-PBKS-Match-Prediction-Who-will-win-today-IPL-match-between-KKR-vs-PBKS

தொடர்ந்து 2-வது வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் பஞ்சாப் அணியும், கடந்த ஆட்டத் தோல்வியிலிருந்து மீண்டெழும் தாகத்துடன் கொல்கத்தா அணியும் இருக்கின்றன.

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 8-வது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை  நடத்துகின்றன. இந்த ஐபிஎல் சீசனின் முதல் போட்டியே இரு அணிகளுக்கும் நல்ல துவக்கமாக அமைந்தது. ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா அணி வலுவான சென்னை அணியை எளிதாக வீழ்த்தியிருந்தது. மயங்க் அகர்வால் தலைமையிலான  பஞ்சாப் அணி பெங்களூருவுக்கு எதிராக 206 ரன்கள் இலக்கை விரட்டிப்பிடித்து வியக்க வைத்தது. இரு அணிகளுமே சமபலம் வாய்ந்த அணிகள் என்பதால் இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.  

image

பஞ்சாப்பின் அதிரடி தொடருமா?

பஞ்சாப் கிங்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் பெங்களூருவுக்கு எதிராக 206 ரன்கள் இலக்கை துரத்தி, இறுதிக்கட்ட ஓவர்களில் ஷாருக்கான், ஒடின் ஸ்மித் ஆகியோரது அதிரடியால் 6 பந்துகளை மீதம் வைத்து வெற்றி கண்டது. பானுகா ராஜபக்சே, தவான், ஷாருக்கான், ஒடியன் சுமித் பேட்டிங்கில் மிரட்டினர். இப்போட்டி மூலம் தாங்கள் அபாயகரமான அணி என்பதை நிரூபித்துள்ளது பஞ்சாப். இன்றைய ஆட்டத்திலும் அதே போல் அதிரடி காட்டும் உத்வேகத்துடன் ஆயத்தமாகிறார்கள். 3 நாள் தனிமைப்படுத்துதல் நடைமுறையை முடித்து பயிற்சியை தொடங்கியுள்ள முன்னணி வேகப்பந்து வீச்சாளர் காஜிசோ ரபடா இன்றைய ஆட்டத்தில் களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவரது வருகை பஞ்சாப் அணியின் பந்துவீச்சை வலுப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

image

எழுச்சி பெறுமா கேகேஆர்?

தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று அசத்திய ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, அடுத்த ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூருவிடம் பணிந்தது. பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில் வெறும் 128 ரன்னில் சுருண்டு பேட்டிங்கில் சொதப்பியது. இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா அணியின் பேட்டிங் படை எழுச்சி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பந்து வீச்சில் உமேஷ் யாதவ், டிம் சவுதி, சுழற்பந்து வீச்சாளர்கள் சுனில் நரின், வருண் சக்ரவர்த்தி கலக்குகிறார்கள். பேட்டிங்கிலும் ஒருங்கிணைந்து ‘க்ளிக்’ ஆகும் பட்சத்தில் கொல்கத்தா அசுரபலம் வாய்ந்த அணியாக உருவெடுக்கும்.

பனியின் தாக்கம் காரணமாக பெரும்பாலும் 2-வது பேட் செய்த அணிகளே வெற்றி பெற்றிருப்பதால், இந்த ஆட்டத்திலும் ‘டாஸ் ’ முக்கிய பங்கு வகிக்கும். தொடர்ந்து 2-வது வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் பஞ்சாப் அணியும், கடந்த ஆட்டத் தோல்வியிலிருந்து மீண்டெழும் தாகத்துடன் கொல்கத்தா அணியும் இருக்கின்றன. இரு அணிகளும் ஏறக்குறைய சரிசம பலத்துடன் மல்லுகட்டுவதால் யாருடைய கை ஓங்கும் என்பதை கணிப்பது கடினம். இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்தப் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

image

இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: அஜிங்க்யா ரஹானே, வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா, ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), சாம் பில்லிங்ஸ், ஷெல்டன் ஜாக்சன் (விக்கெட் கீப்பர்), ஆண்ட்ரே ரஸ்ஸல், சுனில் நரைன், டிம் சவுத்தி, உமேஷ் யாதவ், வருண் சக்கரவர்த்தி

பஞ்சாப் கிங்ஸ்: மயங்க் அகர்வால் (கேப்டன்), ஷிகர் தவான், லியாம் லிவிங்ஸ்டோன், பானுகா ராஜபக்சே (விக்கெட் கீப்பர்), ஷாருக் கான், ஒடியன் ஸ்மித், ராஜ் பாவா, அர்ஷ்தீப் சிங், ஹர்ப்ரீத் பிரார், சந்தீப் சர்மா, ராகுல் சாஹர்

இதையும் படிக்கலாமே: ஒரே ஒரு ஓவர் மொத்த ஆட்டமும் க்ளோஸ்' - சிஎஸ்கே தோல்வி; லக்னோவுக்கு முதல் வெற்றி!

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்