Published : 04,Sep 2017 07:38 AM

கல்லூரி பேராசிரியை மர்ம மரணம் - போலீசார் தீவிர விசாரணை

mystery-of-the-college-professor---the-police-are-serious-investigations

காஞ்சிபுரம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் பணிபுரிந்த பேராசிரியை திடீரென உயிரிழந்ததில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர் அளித்த புகாரின்பேரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம் இரும்பை கிராமத்தை சேர்ந்த திருநாவுக்கரசு என்பவருடைய மகள் லாவண்யா. இவர் சென்னை சோழிங்கநல்லூர் அடுத்த செம்மஞ்சேரியில் உள்ள ஜேப்பியார் குழுமத்தின் ஒன்றான ஜேப்பியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வந்தார். கடந்த ஜனவரி மாதம் இங்கு பணியில் சேர்ந்த லாவண்யா விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தனது வீட்டிற்கு தினந்தோறும் சென்று வர முடியாத சூழ்நிலையில் கல்லூரி விடுதியில் தங்கி பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் கல்லூரியில் வழக்கம்போல் பணிபுரிந்து வந்த லாவண்யா திடீரென வயிறு வலி என ஜேப்பியார் குழுமத்தின் ஒன்றான சத்தியபாமா மருத்துவ கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு ஒரு மணி நேரம் சிகிச்சை அளித்ததாகவும், ஒரு மணி நேர சிகிச்சையில் லாவண்யாவிற்கு 2 ஊசிகள் போடப்பட்டுள்ளதும் தெரியவந்தது.

பின்னர் அங்கிருந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் லாவண்யாவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல் பெரும்பாக்கத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு லாவண்யாவை பரிசோதித்த மருத்துவர்கள் லாவண்யா வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்த செம்மஞ்சேரி காவல் ஆய்வாளர் லாவண்யாவின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக சென்னை இராயபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதையடுத்து லாவண்யாவின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி கல்லூரி நிர்வாகம் மீதும், மருத்துவமனை மீதும் அவரது பெற்றோர் செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்