[X] Close

'அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்'.. 20 ஆண்டுகளை கடந்தும் காவியமாய் நிற்கும் ‘அழகி’

சிறப்புக் களம்

20-years-of-Azhagi-Tamil-movie-which-was-a-Classic-that-portrayed-the-life-tale-of-Shanmugam-and-Dhanalakshmi-love-by-Thangar-Bachan

“அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்; புன்கணீர் பூசல் தரும்” என்ற குறளின் மூலமாக ‘உள்ளத்தில் இருக்கும் அன்பைத் தாழ்ப்பாள் போட்டு அடைத்து வைக்க முடியாது அன்புக்குரியவரின் துன்பங்காணுமிடத்து, கண்ணீர்த்துளி வாயிலாக அது வெளிப்பட்டுவிடும்’ என்ற அற்புதமான விஷயத்தை உலகத்தாருக்கு முன் வைத்திருப்பார் வள்ளுவர். இந்த குறளின் உண்மையான அர்த்தத்தை தாங்கி நிற்பதுதான் ‘அழகி’ என்ற அன்பின் காவியம். காதல் காவியம் என்பதை விடவும் அன்பின் காவியம் என்பதே பொறுத்தமானதாக இருக்கும். காவியம் என்றால் காலத்தை கடந்தும் மக்களிடம் நிலைத்து நிற்கக்கூடியதே. அந்த வகையில் அழகி திரைப்படம் 20 ஆண்டுகளை கடந்து இன்றளவும், நினைக்கும் பொழுதெல்லாம் மயில் இறகால் வருடப்படும் ஒரு உன்னதமான உணர்வை ஏற்படுத்தும் கலைப்படைப்பாக இருக்கிறது. இந்த காவியத்தை தாங்கிபிடிப்பது இரண்டு முக்கியமான விஷயம். ஒன்று இயக்குநர் தங்கர்பச்சானின் உணர்வுபூர்வமான கதை அம்சம், மற்றொன்று இதயத்தை சில்லிட செய்யும் பின்னணி இசையும்தான். முக்கியமான இடங்களில் எல்லாம் படத்தின் தீம் மியூசிக் மேஜிக் நிகழ்த்தியிருக்கும்.

image

20 வருடங்களை கடந்த காவியம்:


Advertisement

வெளியாகி 20 வருடங்களை கடந்துவிட்டது என்பதால் இந்தப் படத்தில் உள்ள ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியும் பலமுறை பேசப்பட்டிருக்கும். அதனால், சண்முகம் - தனலட்சுமியின் அன்பு வாழ்க்கையில் இடம்பெற்ற சில முக்கியமான தருணங்களை மட்டும் இங்கு நாம் நினைவு கூர்வோம். 

வழக்கமாக தமிழ் சினிமாவில் பெண்கள் மீதான ஆண்களின் காதல் உணர்வுகள் தான் அதிகளவில் பேசப்பட்டு வந்துள்ளது. அதுவும் திருமணத்திற்கு பிறகான உறவு குறித்து பெண்களின் மனநிலையில் இருந்து பேசியிருக்கும் படங்கள் இல்லையென்ற அளவில் தான் இருக்கும். ஆனால், அழகி படம் முழுவதும் தனலட்சுமியாக வாழ்ந்திருக்கும் நந்திதா தாஸ் வெளிப்படுத்தும் உணர்வுகள் நம்மை பல நேரங்களில் கண்ணீரில் உறைய வைத்துவிடுகிறது. நந்திதா தாஸ் வந்த பிறகு படம் அழுத்தமான காட்சிகளால் நிரம்பி வழியும். அவருடைய முகமே அத்துனை உணர்வுகளையும் வெளிப்படுத்தும். பார்க்கும் பார்வை, சிந்தும் கண்ணீர் என எல்லாமே சூழ்நிலையால் அவர் படும் வேதனையின் வலியை நமக்கு அற்புதமாக கடத்தும். 

image

மகன் சாலையில் அடிப்பட்ட உடனே கதறி அழுதுகொண்டே யாராவது காப்பாத்துங்க என சுற்றியிருப்பவர்களிடம் கெஞ்சுவார். அப்பொழுது அங்கு கண்ணீர் வடிய நிற்கும் சண்முகத்தை பார்த்ததும் தலையில் அடித்துக் கொண்டு அழுவார். இருவரும் கண்ணீர் மல்க ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளும் அந்தக் காட்சியை பின்னணியில் வரும் புல்லாங்குழல் இசையும் இன்னொரு உச்சத்திற்கு கொண்டு செல்லும். 

குறிப்பாக, விவேக் காதலியின் குழந்தைக்கு உதவுவதற்காக தனது பைக்கை விற்று பணம் கொடுத்துவிட்டு அதனை மனைவி தேவையானியிடம் மறைப்பதாக விபத்து ஏற்பட்டுவிட்டதாக சொல்லி சமாளிப்பார். அப்போது அங்கு வரும் தனலட்சுமி, அங்குள்ள சூழ்நிலையையும் மறந்து ‘சண்முகம்.. என்ன ஆச்சு’ என பதறிப் போய் பேச முற்படுவார். ஆனால், அதனைக் கூட அவரால் வெளிப்படுத்த முடியாமல் தடுக்கப்பட்டு விடும். 

வழக்கமாக ஆண்கள் தான் தன்னுடைய குழந்தைக்கு காதலியின் பெயரை வைப்பார்கள். ஆனால், இந்தப் படத்தில் தனலட்சுமி தன்னுடைய மகனை பள்ளியில் சேர்க்கும் போது பாலு என்ற அவனது பெயருடன் பாலு சண்முகம் என்று சொல்வார். இது தமிழ் சினிமா கண்டிராத ஒரு காட்சி. 

image

இந்தப் படத்தில் தனலட்சுமி மிகவும் பக்குவமும், அனுபவ முதிர்ச்சியும் கொண்ட ஒரு கதாபாத்திரமாகவே வாழ்கிறார். சண்முகம், தனலட்சுமி இருவருமே பக்குவமானவர்கள் தான். தன்னால் தான் விரும்பும் அன்பருக்கும் துன்பம் வந்துவிடக்கூடாது என தனலட்சுமியும், தான் நேசிக்கும் ஒரு உயிர் தன் கண்முன்னே வேதனைப்படுவதை பார்த்து சகித்துக் கொள்ள முடியாமல் அவளுக்கு ஏதாவது ஒன்று செய்துவிட வேண்டும் என துடிக்கும் சண்முகம் என இருவருமே பக்குவமார்கள்தான். ஆனால், தனலட்சுமிதான் இருவரில் ஒருபடி மேல். ஏனெனில், வாழ்க்கையை இழந்து நிற்கதியாய் நிற்கும் அவள் எந்த இடத்திலும் தன் நிலைமையைச் சொல்லி சண்முகத்தை சார்ந்து வாழ வேண்டும் என்று எண்ணியதே இல்லை. அவனோடு நெருக்கமாவதற்கான எல்லா வாய்ப்புகள் இருந்தும் அவள் அவ்வளவு கண்ணியமாக நடந்து கொள்கிறாள். 

படத்தின் முத்தாய்ப்பான காட்சியே தன்னுடைய செருப்பை அத்துனை ஆண்டுகள் கழித்தும் சண்முகம் பத்திரமாக வைத்திருக்கிறான் என்பதை பார்த்ததும், அடுத்தக்காட்சியில் அந்த செருப்பையும். லெட்டரையும் தூக்கி போட்டதோடு ‘என் மனசில் இருந்த எல்லாத்தையும் தூக்கிப் போட்டேன்’ என்று சொல்வார். இன்னொரு பெண்ணுடன் வாழும் தன்னுடைய காதலனின் சூழ்நிலையை புரிந்து கொண்டு அவ்வளவு அருமையான வார்த்தைகளால் கொஞ்சம் கண்டிப்போடு சண்முகத்திடம் அதனை எடுத்துரைப்பார். எந்த இடத்தில் இந்த காட்சி உச்சம் தொடுகிறது என்றால், சொல்லி முடித்ததும் அதனை கேட்டுவிட்டு சண்முகம் மாடிப்படி ஏறத்தயாராவான், அப்போது ரொம்ப கண்டிப்புடன் பேசிவிட்டோமோ என்று எண்ணி ‘என் மேல கோவமா’ என்று பதறிப் போய் கேட்பார். அதுதான் உண்மையான அன்பின் வெளிப்பாடு. 

இன்னும் தனலட்சுமியாக நந்திதா தாஸ் வரும் ஒவ்வொரு காட்சியுமே நம்மை கண்ணீரிலேயே நனைய வைக்கும். பார்த்திபனை பற்றி நாம் சொல்லவே தேவையில்லை அவரை தவிர இந்தக் கதைக்கு வேறு யாரும் பொருத்தமாக இருக்க மாட்டார்கள். உணர்வுகளை அப்படி தன்னுடைய முகக்கதில் கொட்டி இருப்பார்.  ‘‘அவனவனுக்கெல்லாம் சந்தோஷமெல்லாம் அவனுடைய பழைய காதலிய பாக்குற வரைக்கும்தான்’’ என்ற வசனம் படம் வெளியான தருணத்தில் பரவலாக பேசப்பட்டது.

அற்புதமாக சித்திரிக்கப்பட்ட குழந்தைகள் உலகம்:

image

அழகி படத்தில் தனலட்சுமி - சண்முகம் இடையிலான காட்சிகள் எப்படி உணர்வூர்வமாக சித்தரிக்கப்பட்டிருக்குமோ அப்படிதான் குழந்தைகளின் உலகமும். படத்தில் கிராம சூழலில் இடம்பெற்ற குழந்தைகளின் உலகை பலரும் பாராட்டி இருப்பார்கள். ஆனால், சென்னையில் தனலட்சுமியின் மகன் வரும் ஒவ்வொரு காட்சியின் அவ்வளவு நேர்த்தியாக இருக்கும். குழந்தைகளின் உலகமே வேறு. அவன் படிக்க வேண்டும் என ஆசைப்படுவான். நேரத்தில் சுவையான உணவு இல்லையென்றாலும் ஏதாவது ஒன்றையாவது சாப்பிட வேண்டும். எல்லோரும் டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது வீட்டிற்கு வெளியே அவன் பசியில் வாடிக் கொண்டிருப்பான். அம்மா பசிக்குதுமா, வயிறு வலிக்குது என்று அந்த குழந்தை சொல்லும் போதும் பின்னர் மற்றொரு வேலைக்காரி வந்து திட்டிச்சென்ற பின் ‘பசிக்குதுணா தப்பாம்மா.. ’ என்று வெகுளியாக கேட்கும்போதும் படத்தை பார்க்கும் நமக்கே ஏதோ செய்துவிடும். ‘சண்முகம் உள்ளே வா’ என்று கூப்பிடும் போது, ‘வேணா நான் இங்கே இருக்க.. உள்ள வரக் கூடாதுனு அம்மா சொல்லியிருக்காங்க..’ என்று கூறும் இடத்திலும், நம்மை நெகிழ வைத்திருப்பார். 

சண்முகத்தின் மகள், தனலட்சுமியின் மகன் இருவருக்கும் இடையே இருக்கும் வேறுபட்ட தன்மை, இறுதியில் அன்பால் அவர்கள் கரைந்து போகும் தருணம் எல்லாமே நெகிழ்ச்சியாக இருக்கும். ஒரு குழந்தை தன்னை பார்த்துக் கொள்ளும் ஒருவரிடம் நெருக்கமாகிவிட்டால் அதன் பிறகு வேறு யாரிடமும் அவ்வளவு எளிதில் இணக்கமாகாது. அது தாயாக இருந்தாலும். தேவையானியிடம் மருத்துவர் சொல்லும் அந்த வார்த்தைகள் தான் குழந்தையின் உலகம் பற்றியது. 

image

அழகியை உணர்வு பிழம்பாக்கிய ‘உன்குத்தமா’ பாடல்

அழகி படம் மிகப்பெரிய வெற்றியை தாண்டி தமிழர் நெஞ்சங்களில் நீங்காமல் இன்றளவும் இருப்பதற்கு முக்கியமான காரணம் உன்குத்தமா பாடல்தான். அந்த வான்மழையோடு, இசைஞானியின் இசை மழையும், அவரே கண்ணீரால் வடித்திருந்த பாடல் வரிகளும் குரலும் கேட்கும் ஒவ்வொரு இதயத்தையும் சொல்லவொண்ணா உணர்வு நிலைக்கு கொண்டு சென்றுவிடும். ‘பச்ச பசும் சோலையிலே பாடி வந்த பூங்குயிலே, இன்று நடைபாதையிலே வாழ்வதென்ன மூலையிலே’ என வரும் வரிகள் அவ்வளவும் பொருத்தம். இந்த பாடலுக்கு உருக ஒருவர் காதலித்து இருக்க வேண்டிய அவசியமே இல்லை. இந்தப் படத்தில் இடம்பெற்ற மூன்று முக்கியமான பாடல்களான உன் ‘குத்தமா, ஒளியிலே தெரிவது, பாட்டுச் சொல்லி’ மூன்றையும் இசைஞானி தான் எழுதியிருப்பார். ஒளியிலே தெரிவது பாடல் இன்றும் பலரது பேவரெட். இந்த பாடலின் தீம் தான் படம் முழுவதும் ஒலிக்கும். 

image

அழகி ஏன் காவியம்:

ஒரு கலை என்பது வாழ்க்கையை அப்படியே பிரதிபலிக்கும் கண்ணாடி அல்ல. வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை எது சரி, எது தவறு என சீர்தூக்கி பார்த்து அதில் இருந்து எதிர்கால வாழ்க்கைக்கு எதனை சொல்ல வேண்டுமோ அதனைதான் பொறுப்புடன் கையாண்டு கலையாக ஒரு கலைஞன் மாற்ற வேண்டும். இங்கு பலரது வாழ்க்கையிலும் முன்னாள் காதலி இருப்பார்கள். அப்படி ஒருவர் தம்முடைய வாழ்வில் மீண்டும் வந்தால் எப்படி அணுக வேண்டும் என்பது ஒரு பாடமாக அழகி படம் இருக்கும். எல்லை மீறிய காட்சிகள் வைப்பதற்கான எல்லா சந்தர்ப்பங்கள் இருந்தாலும் கொஞ்சம் கூட இடம் கொடுக்காமல் எல்லாவற்றையும் தவிர்த்துவிட்டு ஒருவர் மீது ஒருவர் எப்படி அக்கறையோடும் அன்போடு இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணமாய் இந்தப் படம் அமைந்துள்ளது.

 

இதில், சண்முகத்தின் மனநிலையும் சரியாக படம் பிடித்துக்காட்டியுள்ளார். உன்னை நான் எங்க இழந்துவிடுவேனோ என்று எனக்கு பயமாய் இருக்கிறது என அவர் சொல்லுவது மிக நேர்த்தியான வாசகம். அவரும் மிகவும் பக்குவமாகவே நடந்து கொள்வார். ஆனால், நிஜத்தில் இப்படியெல்லாம் நடப்பது மிகவும் அரிதுதான். ஆனால், இப்படியெல்லாம் நடந்தால் நல்லா இருக்குமே என நம்மை உணர வைப்பதுதானே ஒரு கலையின் உண்மையான பணி.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close