[X] Close

”பிள்ளைக்கு பெயர் வைத்தீர்களே, சோறு வைத்தீர்களா?”- இபிஎஸ் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் பதில்

தமிழ்நாடு

Minister-Thangam-Thennarasu-answers-for-EPS-accusation-on-DMK-Government

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் முன்வைத்திருந்த ”அடுத்தவர் பெற்ற குழந்தைக்கு சொந்தம் கொண்டாடாமல் இருங்கள்” என்ற குற்றச்சாட்டுக்கு, அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்றைய தினம் செய்தியாளர்களை சந்தித்தார் தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு. அப்போது அவர், நேற்றைய தினம் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வைத்திருந்த “அடுத்தவர் பெற்ற குழந்தைக்கு சொந்தம் கொண்டாடாமல் இருங்கள். எதையும் ‘நாங்கள் தான் செய்தோம்’ என்ற மோகத்தில் இருந்து விடுபட்டு, தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்கு உங்களது சொந்த செயல் திட்டங்களை வகுத்து, அவற்றை நிறைவேற்றிடவும்” என்ற தமிழக அரசை நோக்கிய குற்றச்சாட்டுக்கு பதிலளித்தார்.


Advertisement

அவர் பேசும்போது “அதிமுக அரசின் திட்டங்களை திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டி கொள்வதாக எடப்பாடி பழனிசாமி அபாண்டமான குற்றச்சாட்டை கூறியுள்ளார். உண்மையை சொல்ல வேண்டுமென்றால் சமச்சீர் புத்தகத்தில் ஸ்டிக்கர் ஒட்ட தொடங்கி, வள்ளுவரையே ஸ்டிக்கர் ஒட்டி மறைத்தது அதிமுக ஆட்சிதான். அதேபோல கஜா புயல் நிவாரணத்தின்போது தனியார் தொண்டு நிறுவனங்கள் கொடுத்த நிவாரண பொருட்களில் ஸ்டிக்கர் ஒட்டியதும் அதிமுக ஆட்சிதான். அதிமுக-வை போன்று, திமுக ஸ்டிக்கர் ஒட்டும் ஆட்சி அல்ல. ‘அடுத்தவர் பிள்ளைக்கு சொந்தம் கொண்டாடாமல் இருங்கள்’ என்பதை கேட்கையில், ‘நீங்கள் பெற்ற பிள்ளைக்கு பேர் வைதீர்களே... சோறு வைத்தீர்களா?’ என கேட்க தோன்றுகிறது.

image

திமுக கோடி சூரியனுக்கு இணையானது. அதன் ஒளி உதிரி நட்சத்திரங்களுக்கு தேவைபடுமே , தவிர திமுக-வுக்கு தேவைப்படாது. விதைக்கிற நேரத்தில் வெளியூர் சென்று விட்டு அறுக்கும் நேரத்தில் அரிவாளை தூக்கி வரும் நிலை போல் உள்ளது எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் பேட்டி” என்றார்.

அதேபோல அதிமுக ஆட்சி தாங்கள் கொண்டுவந்தது போல கோயம்பேடு பேருந்து நிலையம், ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனை உள்ளிட்டவைகளில் தனது அதிமுக ஸ்டிக்கரை ஒட்டிக் கொண்டது. இன்றைக்கு திறக்க உள்ள விருதுநகர் மருத்துவ கல்லூரியும் திமுக ஆட்சியில் அறிவித்து தான்” என்றார்.

தொடர்ந்து பாக்ஸ்கான் தொழிற்சாலை குறித்து பேசிய அவர், “பாக்ஸ்கான் தொழிற்சாலையில் ஏற்பட்ட பிரச்னை சுமூகமாக தீர்க்கப்பட்டு இன்று (ஜனவரி 12 ம் தேதி) முதல் தொழிற்சாலை செயல்படும் என முதல்வர் தெரிவித்திருந்தார். அது பின்பற்றப்பட்டு, தொழிற்சாலை திறக்கப்பட்டுள்ளது. அங்கு உள்ள தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான சூழல் ஏற்படுத்தவும் முதல்வர் உத்தரவிட்டு இருந்தார். அதுவும் பின்பற்றப்படும். இவையாவும் முதல்வர் மீது தொழிலாளர்கள், குறிப்பாக பெண்கள் வைத்துள்ள நம்பிக்கையை அதிகப்படுத்தும் வகையில் உள்ளது” என்றார்.

சமீபத்திய செய்தி: கொரோனா தாக்கம்: டிஜிட்டல் முறை பிரச்சாரத்திற்கு மாறிய கட்சிகள் - உ.பி. தேர்தல் கள நிலவரம்

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close