[X] Close

இந்தியாவில் அதிகரிக்கும் செயற்கை கருத்தரித்தல் முறை... பின்னணியும் களநிலவரமும் என்ன?-அலசல்

சிறப்புக் களம்

தொழில்நுட்ப அடிப்படையிலான மகப்பேறு சிகிச்சை வழங்கும் சேவைகளை ஒழுங்குபடுத்தும் சட்ட மசோதாவை நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் பின்னணி குறித்தும், இந்தியாவில் அதிகரித்து வரும் குழந்தையின்மை பிரச்னை மற்றும் செயற்கை கருத்தரிப்பு மையங்கள் அதிகரிப்பு குறித்தும் இந்த செய்தி தொகுதிப்பில் ஆராயலாம். 

இதுதொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்தியாவை பொறுத்தவரையில் குழந்தையின்மை பிரச்சனையால் 2.75 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய புள்ளிவிவரங்கள் தெரிவித்ததை அறிய முடிந்தது. குறிப்பாக நகர்ப்புறங்களில் 6ல் 1 தம்பதி குழந்தையின்மை பிரச்சனைக்கு ஆளாவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இந்தியாவில், திருமணமான தம்பதிகளில் 46 % பேருக்கு குழந்தையின்மை பிரச்னை இருப்பதாகவும், 31 - 40 வயதுக்கு உட்பட்ட 63% தம்பதிகளுக்கும், 21 - 30 வயதுக்குட்பட்ட 34% தம்பதிகளுக்கும் குழந்தையின்மை பிரச்னை இருப்பதாகவும் தரவுகள் சொல்கின்றன. கடந்த பத்து ஆண்டுகளில் நம் நாட்டில், பெண்கள் கருத்தரிக்கும் விகிதம் 17 சதவீதம் குறைந்து உள்ளது. மக்கள் தொகையில் 2ஆம் இடத்தில் உள்ள, இந்தியா குழந்தையின்மை பிரச்னையில் முதலிடத்தில் உள்ளது. இப்படி அதிகரித்துவரும் குழந்தையின்மை பிரச்னையை தீர்க்க, நவீன தொழில்நுட்பங்கள் உதவியுடன் மேற்கொள்ளப்படும் செயற்கை கருத்தரித்தல் மிகச்சிறந்த தீர்வாக அமைந்து வருகிறது.

image


Advertisement

செயற்கை கருத்தரித்தல் வரலாறு: 1978-ம் ஆண்டில் முதன்முதலாக இங்கிலாந்தில் செயற்கை கருத்தரிப்பு முறையில் குழந்தை பிறந்தது. பின்னர் இந்தியா உள்ளிட்ட நாடுகளிலும் அம்முறை நுழைந்தது. இந்தியாவில் தனியார் மருத்துவமனைகளில் தரப்பட்டு வந்த செயற்கை கருத்தரிப்பு சேவை கடந்த 2007-ம் ஆண்டு முதல் அரசு மருத்துவமனைகளே தரத்தொடங்கியுள்ளன. இந்தியாவை பொருத்தவரை கடந்த 40 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 80 லட்சம் குழந்தைகள் செயற்கை கருத்தரித்தல் மூலமாக பிறந்திருப்பதாக ‘செயற்கை கருவூட்டலுக்கான இந்திய சங்கம்’ கூறுகிறது.

குழந்தையின்மை அதிகரிக்க காரணம் என்ன? அனைத்து துறைகளிலும் கோலோச்சி வரும் நவீன தொழில்நுட்பங்கள் நமது வாழ்க்கையை எவ்வளவோ நல்ல விதங்களில் எளிமையாக்கியுள்ளது, மாற்றியிருக்கின்றது. ஆனால் இந்த தொழில் நுட்பங்களால், நம்மில் பலரும் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் சந்திக்கும் பாதிப்புகளும் ஏராளம். அதில் மிகமுக்கியமானது, மலட்டுத்தன்மை. இந்தியாவைப் பொறுத்த வரை ஆண் பெண் இருபாலரிடமும் மலட்டுத்தன்மை ஏற்பட்டு, குழந்தையின்மைக்கான காரணங்கள் அதிகரித்து வருகிறது. இதன்பின்னணியில் வாழ்வியல் முறைகளில் ஏற்படும் மாற்றம்; செயற்கை உரங்களால் விளைவிக்கப்பட்ட காய்கறிகள், தானியங்களை உண்பது; புரதம் உள்ளிட்ட சத்து மிகுந்த உணவு வகைகளை உண்ணாதது; வேலைப்பளு; மன அழுத்தம் அதிகரிப்பு; திருமண வயது அதிகரிப்பு; ஹார்மோன் குறைபாடுகள் உள்ளிட்டயாவும் காரணங்களாக சொல்லப்படுகிறது.

இந்தியாவில், செயற்கை கருத்தரித்தல் துறையின் வளர்ச்சியும் மக்களவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவும்: குழந்தையில்லா தம்பதியர், திருமணம் ஆன ஒரு வருடம் கழித்து மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று சொன்ன காலம் மாறிவருகிறது. இப்போது, திருமணத்திற்கு முன்பே, ஆண் - பெண் இருபாலரும் தாங்கள் திருமண பந்தத்திற்கு முழு தகுதியானவரா என்று பரிசோதனை செய்து கொள்ளும் 'ப்ரீ மேரிட்டல் கவுன்சலிங்' நடைமுறைக்கு வந்துவிட்டது.


Advertisement

image

பல்வேறு காரணிகளால் ஆணுக்கும் பெண்ணுக்கும் இயல்பாக கருத்தரிப்பதில் பல்வேறு சிக்கல்கள் தற்போது உருவாவதால், பலர் குழந்தை பெற்றுக்கொள்வதற்காக ஐவிஎஃப் உள்ளிட்ட மருத்துவ தொழில்நுட்பங்களின் உதவியை நாடுகின்றனர். விளைவு, நாடு முழுவதும் செயற்கை கருத்தரித்தல் மையங்களின் எண்ணிக்கை புற்றீசலாக பெருகி வருகிறது. இவற்றில் பல மையங்கள் எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி, நெறிமுறைகளை பின்பற்றாமல் செயல்படுவதாகக் குற்றச்சாட்டுகளும் உள்ளன. இதையடுத்து தொழில்நுட்ப அடிப்படையிலான மகப்பேறு சிகிச்சை வழங்கும் சேவைகளை ஒழுங்குபடுத்தும் சட்ட மசோதாவை நாடாளுமன்ற மக்களவை நிறைவேற்றியுள்ளது. செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை மையங்களுக்கான விதிகளை வகுத்து அவை நெறிகளுக்கு உட்பட்டு பாதுகாப்பான சேவையை வழங்குவதை இம்மசோதா உறுதிப்படுத்துகிறது.

தொடர்புடைய செய்தி: நாடாளுமன்றத்தில் தொடரும் மோதல்: அமளிகளுக்கு மத்தியில் தமிழக எம்பிக்கள் பேசியது என்ன?

இம்மசோதாவின்படி, இனி எல்லா செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை மையங்களும் பதிவு செய்யப்பட வேண்டும். பதிவு செய்யப்படத் தகுதியான சிகிச்சை மையங்களின் குறைந்தபட்ச தரத்தினை வகுக்க மத்திய அரசினால் தேசிய வாரியம் அமைக்கப்படும். மேலும், கருமுட்டைகள், விந்தணுக்கள் தானம் செய்வோருக்கான அடிப்படைத் தகுதி, அவர்கள் எத்தனை முறை தானம் வழங்கலாம் போன்றவையும் இம்மசோதாவில் வரையறுக்கப்பட்டுள்ளது. ஆண் அல்லது பெண் குழந்தை வேண்டும் என திட்டமிட்ட கருத்தரிப்பு, கருமுட்டைகள், விந்தணுக்கள் விற்பனை, செயற்கை முறையில் கருத்தரித்த குழந்தைகளைக் கைவிடுதல் அல்லது அவர்களை முறையாகப் பராமரிக்காமல் இருத்தல், செயற்கை கருவுறுதலைத் தேர்ந்தெடுக்கும் இணையரை ஏமாற்றுதல், தானம் அளிப்பவரை ஏமாற்றுதல் போன்றவை சட்ட விரோதமாகக் கருதப்படும். இந்த குற்றங்களில் ஈடுபட்டால் ஐந்து முதல் பன்னிரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ஐந்து லட்சம் முதல் இருபத்தைந்து லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும்.

செயற்கை கருத்தரித்தல் என்பது என்ன? எப்போதெல்லாம் மருத்துவரால் பரிந்துரைக்கப்படும்? இதை புரிந்துக்கொள்வதற்கு, குழந்தை உருவாதல் எப்போதெல்லாம் சிக்கலாகிறது என்பதை அனைவரும் புரிந்துக்கொள்ள வேண்டும்” என்கிறார் மருத்துவர் அஞ்சுகம்.

அதுகுறித்து விரிவாக பேசிய அவர், “ஆண்களுக்கு விந்து உருவாக்கத்திலோ வெளியேற்றத்திலோ சிக்கல் இருப்பது- அது பெண்ணின் முட்டையுடன் சேர்வதில் சிக்கல் இருப்பது - பெண்ணின் கருமுட்டை உருவாக்கத்தில் சிக்கல் இருப்பது போன்ற சூழல்களில்தான் குழந்தை உருவாதலில் பிரச்னை ஏற்படுகிறது. இவை மூன்றும் உடல்சார்ந்த என்னென்ன மாற்றங்களின்போது நிகழக்கூடும் என்பதை சொல்கிறேன்.

image

* ஆணின் உடலில் விந்து பாதிக்கப்பட்டு பலவீனமாக இருப்பது, பிறப்புறுப்பு சார்ந்த பாதிப்புகள் / அடைப்புகள் போன்றவை இருந்தால் அவர்களுக்கு நிகழலாம். இவையாவும் அவர்களுக்கு இயற்கையாகவோ அல்லது செயற்கையாகவோ (ஏதேனும் மருத்துவ சிகிச்சையின் போது அதன் பக்கவிளைவாகவோ / சூழல் காரணமாகவோ ஏற்படலாம். சூழல் என்றால் உதாரணத்துக்கு அதிக வெப்பமயமான இடத்தில் அன்றாடம் பல மணி நேரம் பணிபுரிவது, ரசாயண கூடங்களில் பணிபுரிவது போன்ற நேரங்களில் அதன் காரணமாக அவர்களுக்கு ஹார்மோன் பிரச்னைகள் ஏற்பட்டு விந்து பாதிக்கப்படுவது) ஏற்படும்.

* இதேபோல பெண்ணின் உடலில் கருமுட்டை பலவீனமாக இருப்பது, விந்துவுடன் சேரமுடியாமல் போவது, கர்ப்பப்பை பலவீனமாக இருப்பது போன்ற நேரங்களில் பெண்களுக்கு குழந்தை உருவாவதில் சிக்கல் ஏற்படும். இவையும் இயற்கையாகவோ அல்லது செயற்கையாகவோ (வாழ்வியல் மாற்றங்களால் சினைப்பை நீர்க்கட்டி போன்ற பாதிப்புகள், உடல் எடை மிக அதிகமாகவோ / குறைவாக இருத்தல் போன்றவை) ஏற்படலாம்.

இவையன்றி, இருதரப்பினருக்குமே தீவிர நோய்ப்பாதிப்பு ஏதேனும் இருப்பது, அதன் காரணமாக நிறைய மருந்துகள் எடுக்க வேண்டியிருப்பது அல்லது ரேடியேஷன் உள்ளிட்ட தீவிர சிகிச்சைக்கு உட்படுவது போன்ற நேரங்களில் அதன் விளைவாக விந்து - முட்டை உருவாதல் மற்றும் இணைதலில் சிக்கல் ஏற்படும்.

இதுபோன்ற சூழல்களில், அவர்கள் செயற்கை கருத்தரித்தலுக்கு அறிவுறுத்தப்படுவர். செயற்கை கருத்தரித்தல் என்பது, நேரடியாக செயற்கையாக ஆணின் விந்தணுவும் - பெண்ணின் கருமுட்டையும் சேர்க்கப்படுவதல்ல. அதற்கு முன்னதாக அதை இயற்கையாக நிகழ வைக்கும் வழிமுறைகளும் உள்ளன. படிப்படியாக அவர்களுக்கு என்ன மாதிரியான பாதிப்பு உள்ளது, எதனால் குழந்தை உருவாவதில் சிக்கல் உள்ளது, என்ன மாதிரியான சிகிச்சை அவர்களுக்கு தேவைப்படுகிறது என்பதெல்லாம் அறிந்து, அவை கொஞ்சம் கொஞ்சமாக பின்பற்றப்படும். இதில் எந்தளவுக்கு உயரிய சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறதோ, அந்தளவுக்கு செலவும் அதிகரிக்கும். இந்த செலவு, மிக அதிகமாக செல்வதை தொடர்ந்து, மக்களவையில் கட்டண நிர்ணயம் கொண்டுவரப்பட்டுள்ளது. அந்தவகையில் இந்த கட்டண நிர்ணயம், மிகவும் வரவேற்கத்தக்க கூடிய விஷயம்.

image

செயற்கை கருத்தரித்தல் என்றவுடன், சிலர் பயப்படுவதுண்டு. ஆனால் பயம் தேவையில்லை. எந்த மையத்துக்கு செல்கின்றீர்களோ, அந்த மையம் தரமானதா என்று ஆராய்ந்துக்கொண்டால் போதும். செயற்கை கருத்தரித்தல் என்பது, சட்ட அனுமதியுடன் - சம்பந்தப்பட்ட பெற்றோரின் அனுமதியுடன் செய்யப்பட வேண்டிய விஷயம். ஒருவேளை நீங்கள் செல்லும் மையத்தில் சட்ட ரீதியான அணுகல் இல்லை, உங்கள் அனுமதியின்றி எதும் செய்கின்றனர் என தெரிந்தால், அது தவறென்பதை உணர்ந்து புகார் தெரிவிக்கவும். இன்றைய தேதிக்கு, எல்லா அரசு மருத்துவமனைகளிலும் மகப்பேறு மருத்துவர் மூலம் செயற்கை கருத்தரித்தலுக்கான ஆரம்ப நிலை சிகிச்சைகளை பெறலாம். சில இடங்களில், உயரிய வசதிகளும் மேற்கொள்ளப்படுகின்றன என்பதால், அங்கு செல்வதையும் தம்பதிகள் முதன்மை படுத்தலாம். அங்கு விலையும் குறைவாக இருக்கும் என்பதால், நிச்சயம் மக்களுக்கு உதவும் நோக்கில் இருக்கும்.

செயற்கை கருத்தரித்தல் மூலம் குழந்தை பெறும் தம்பதிக்கு, ஆண் குழந்தை பிறப்பதற்கான வாய்ப்பே அதிகமென்பது குறிப்பிடத்தக்கது. இது விமர்சனமாக பார்க்கப்பட்டாலும், இதன் பின்னணியில் உள்ள மருத்துவ விளக்கத்தை மக்கள் உணரவேண்டும். அந்த விளக்கம் - ‘அதிக செயல்பாட்டு சக்தியுடைய விந்தணு தான், வீரியமான கருமுட்டையோடு சேர்த்துவைக்கப்படும். அதிக செயல்பாட்டு சக்தி, ஆண் குழந்தைக்க்கான Y க்ரோமோசோமில்தான் இருக்கும். ஆகவே அது அதிகம் தேர்ந்தெடுக்கப்படுகிறது’. செயற்கை கருத்தரித்தல் செல்வோருக்கு ஆண் குழந்தை பிறக்க இதுதான் காரணமே தவிர, வேறெந்த மருத்துவத்துக்கு அப்பாற்பட்ட காரணமும் இல்லை” என்றார்.


Advertisement

Advertisement
[X] Close