Published : 02,Dec 2021 04:16 PM

'ஆப்' இன்றி அமையா உலகு 12: Friends2Support - ரத்தக் கொடையாளர், தேவைப்படுவோரை இணைக்கும் ஆப்

Friends-2-Support-Mobile-Phone-Application-which-helps-to-track-and-ask-help-from-Blood-Donors-in-this-week-s-Puthiya-Thalaimurai-Weekly-Series

"தானத்தில் சிறந்த தானம் ரத்த தானம்" என்ற சொலவடை உண்டு. அந்த வகையில் இன்றைய டிஜிட்டல் தொழில்நுட்ப உலகிலும் நமது வாட்ஸ் அப் செயலியில் 'அவசர மருத்துவ சிகிச்சைக்காக A+ / A- / B+ / B / O+ / O- / AB+ / AB - ரத்த வகை தேவைப்படுகிறது' என்ற தகவலை தாங்கிய மெசேஜ் வருவதை நாம் எல்லோரும் கவனித்திருப்போம். சிலர் அந்த மெசேஜை பார்த்தவுடன் சம்பந்தப்பட்ட நபரை தொடர்பு கொண்டு 'தாங்கள் ரத்தம் கொடுக்க தயாராக இருப்பதாக' சொல்வார்கள். சிலர் தங்களுக்கு தெரிந்த நபர்களை அனுப்புவதாக சொல்வார்கள். சிலர் அந்த மெசேஜை அப்படியே நண்பர்களுக்கு ஃபார்வேர்டு செய்வார்கள். எல்லோரது எண்ணமும் ஒன்றுதான். அது... ரத்தம் தேவைப்படும் நபருக்கு உதவுவது என்பதே.

image

எனினும், இதில் சில நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதுண்டு. ரத்தம் கொடுப்பவரும், ரத்தம் தேவைப்படுபவரும் வேறு வேறு இடங்களில் இருக்கலாம். உதாரணமாக, கூடுவாஞ்சேரியில் ரத்தம் கொடுப்பவரும், நீலாங்கரையில் ரத்தம் தேவைப்படுபவரும் இருக்கலாம். இப்படி நிலவும் சில யதார்த்த சிக்கலுக்கு தீர்வு காண உதவுகிறது Friends2Support.org என்ற மொபைல் ஃபோன் அப்ளிகேஷன். இந்த செயலி குறித்து விரிவாகப் பார்ப்போம்.

Friends2Support.org

தன்னார்வமிக்க ரத்தக் கொடையாளர்களை தன்னகத்தே தாங்கி நிற்கின்ற செயலிதான் Friends2Support.org. 'ரத்த தான சேவை வழங்கி வரும் உலகின் மிகப்பெரிய அமைப்புகளில் ஒன்று' என தங்களைப் பற்றிய (About us) விளக்கமாக கொடுக்கிறது Friends2Support அமைப்பு. ஆசிய நாடுகளான இந்தியா, வங்கதேசம், மலேசியா, நேபாளம், ஓமன், இலங்கை மற்றும் ஏமன் என ஏழு நாடுகளில் இந்த அமைப்பு தனது சேவையை வழங்கி வருகிறது. 

image

மிகவும் நெருக்கடியான சூழலில் தனி ஒருவருக்கு தேவைப்படும் ரத்தம் கிடைக்காமல் போகக் கூடாது என்பதே இந்த அமைப்பின் பிரதான நோக்கம். சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்த அமைப்பின் சேவையை அளிக்கும் மொபைல் ஃபோன் செயலியை டவுன்லோடு செய்துள்ளனர். ரத்த தானம் செய்ய தன்னார்வ கொடையாளர்களாக 5 லட்சம் பேர் உள்ளனர். ஆண்ட்ராய்டு, ஆப்பிள் iOS இயங்கு தளம் கொண்ட போன்களில் இதனை பயன்படுத்தலாம். அதே போல http://www.friends2support.org/ என்ற வலைதளத்தின் மூலமாகவும் இதனை பயன்படுத்தலாம்.

ஃப்ரெண்ட்ஸ் டூ சப்போர்ட் தளம் மூலம் தொடர்ந்து ரத்த தானம் செய்து வரும் சென்னையைச் சேர்ந்த ரவியிடம் பேசியபோது, "பொதுவாக மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ரத்த தானம் செய்யலாம் என்று சொல்வார்கள். நான் ஆறு மாதத்துக்கு ஒரு முறை ரத்த தானம் செய்வதை வழக்கமாக கொண்டிருக்கிறேன். ரத்தக் கொடையாளராக ஃப்ரெண்ட்ஸ் டூ சப்போர்ட்டில் பதிவு செய்திருக்கிறேன். நான் வசிப்பது சென்னை ராமாபுரம் பகுதியில் என்பதால் என் பகுதியைச் சுற்றியுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களின் உறவினர்களிடம் இருந்துதான் எனக்கு அழைப்பு வரும். இதனால், எளிதாக போய் ரத்த தானம் செய்வேன். 

image

ஒருமுறை ரத்த தானம் செய்த பிறகு, உடனே செயலியில் அப்டேட் செய்துவிடுவேன். இதனால், அவெய்லபிள் (Available) லிஸ்டில் என் பெயர் வராது. மூன்று மாதங்கள் முடிந்த பிறகுதான். அவெய்லபிள் லிஸ்டில் மீண்டும் வருவேன். எனவே, தேவையின்றி எந்த அழைப்பும் வராது. சம்பந்தப்பட்ட நோயாளிகளின் உறவினர்களிடம் இருந்தே நேரடியாக கால் வருவதால், நாம் ரத்த தானம் செய்வதன் பலனை அறிவதும் நெகிழ்ச்சிக்குரியதாக இருக்கும். போதுமான இடைவெளியில் தொடர்ந்து ரத்த தானம் செய்வதால் நான் ஆரோக்கியமாக இருப்பதையும் உணர்கிறேன்" என்றார்.

இந்த செயலியை பயன்படுத்துவது எப்படி?

இதனை பயன்படுத்துவது மிகவும் எளிது என்பதை பயனர்கள் அது தொடர்பாக தெரிவித்துள்ள கமெண்ட்களைப் பார்த்தும் அறிந்து கொள்ள முடிகிறது. 

> இந்த செயலியை போனில் இன்ஸ்டால் செய்ததும் முதலில் ரத்த வகையை தேர்வு செய்ய சொல்கிறது. 

> அதன் பின்னர் நாடு, மாநிலம், மாவட்டம், நகரம் என அனைத்து விவரங்களையும் கேட்கிறது. அதன் அடிப்படையில் தங்கள் தளத்தில் ரத்தக் கொடையாளர்களாக பதிவு செய்து கொண்டுள்ள தன்னார்வாலர்களின் விவரங்களை தருகிறது. 

image

> தன்னார்வலரின் பெயர், தொடர்பு எண் மற்றும் ரத்தம் கொடுக்க அவர் தயாராக உள்ளாரா என்ற ஸ்டேட்டஸையும் இந்த செயலி மூலம் அறிந்து கொள்ளலாம். 

> மேலும், அந்த தன்னார்வலரை தொலைபேசி அழைப்பு, மெசேஜ் மூலமாக இந்த செயலியின் மூலம் தொடர்பு கொள்ளலாம். அவரது பெயர், தொடர்பு எண் மாதிரியான விவரத்தை சுலபமாக அடுத்தவர்களுக்கு பகிரும் வசதியும் இதில் உள்ளது. 

> மேலும், பயனரின் ரெக்வெஸ்டுக்கு தன்னார்வலர் ரெஸ்பான்ஸ் கொடுக்கவில்லை என்றால், அது குறித்து இதில் புகார் (Report) கொடுக்கவும் முடியும். அதில் தவறான தொடர்பு எண், வேறு ஒருவர் பயன்படுத்துகிறார், கொடையாளரின் லொக்கேஷன் மாறிவிட்டது, அண்மையில்தான் ரத்த தானம் செய்திருந்தார், இதற்கு மேல் ரத்த தானம் கொடுக்க தயாராக இல்லை, ரத்த தானம் கொடுக்க மறுத்துவிட்டார் என ஆறு விதமாக புகார் கொடுக்க முடியும். 

> தமிழ்நாட்டை பொறுத்த வரையில் அரியலூர், சென்னை, கோவை, கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கரூர், கிள்ளியூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாகப்பட்டினம், நீலகிரி, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தஞ்சாவூர், தேனி, திருச்சி, திருவாரூர், திருநெல்வேலி, திருப்பூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, வேலூர், விழுப்புரம், விருதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் இந்த அமைப்பு தனது சேவையை அளித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

> யூனியன் பிரதேமசான புதுச்சேரியிலும் இந்த அமைப்பு சேவை அளித்து வருகிறது. 

> இந்த செயலியை பயனர்கள் இலவசமாக பயன்படுத்தலாம். அதேபோல இதனை பயன்படுத்த பயனர்கள் மொபைல் எண் உட்பட எந்த விவரத்தையும் கொடுக்க வேண்டியதில்லை. ரத்தம் தேவைப்படுபவர் அல்லது தங்களது விவரங்களை தன்னார்வலரிடம் மட்டும் சொன்னால் போதும். 

image

ரத்தக் கொடையாளராக பதிவு செய்ய விரும்புவர்களின் கவனத்திற்கு...

இந்த செயலியை பயன்படுத்தி தங்கள் ரத்தத்தை தானமாக கொடுக்க விரும்புபவர்களும் பதிவு செய்து கொள்ளலாம். 

> மெனு பட்டனில் உள்ள 'Register As Blood Donor' டேப் மூலம் நாடு, மாநிலம், நகரம், மொபைல் எண், பெயர், ரத்த வகை, பிறந்த ஆண்டு, ஊர், வசிப்பிடம், ரத்தம் கொடுக்க தயாரா என்பது மாதிரியான தகவல்களை கொடுத்து பதிவு செய்து கொள்ளலாம். 

> 18 வயதிற்கு மேற்பட்ட தன்னார்வலர்கள் மட்டுமே இதில் பதிவு செய்ய முடியும். 

> 1960-க்கு பின் பிறந்தவர்கள் மட்டுமே இதில் பதிவு செய்ய முடியும். 

மொத்தத்தில் அந்நியர்களையும் அவசர உதவி என்றால் தோழனாக மாற்றும் மேஜிக்கை செய்கிறது இந்த செயலி. 

> ஆண்ட்ராய்டு லிங்க்

> ஆப்பிள் iOS லிங்க்

> முந்தைய அத்தியாயம்: 'ஆப்' இன்றி அமையா உலகு 11: Bynge - தமிழில் வாசிப்பை சுவாசமாக கொண்டோருக்கான செயலி!

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்