Published : 02,Nov 2021 10:00 AM
பருவநிலை மாற்றம்: சுவிட்சர்லாந்து நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்

பருவநிலை மாற்றம் குறித்து சுவிட்சர்லாந்து ICLEI நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
அண்மையில் பருவநிலை மாற்றம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சுவிட்சர்லாந்து தூதர் ரால்ப் ஹெக்னர் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதில், பருவநிலை மாற்றத்தால் தமிழகம் சந்திக்கும் பிரச்னைகள் என்ன என்பது குறித்து விரிவான ஆலோசனை நடத்தப்பட்டது. வெப்பமயமாதல் அதீத கனமழை உள்ளிட்டவை குறித்து ஆலோசனையில் ஈடுபட்டனர். இதன்பின்னர் ஐசிஎல்இஐ என்ற சுவிட்சர்லாந்து நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
அந்த நிறுவனத்துடன், தமிழக அரசு செய்துள்ள ஒப்பந்தத்தின்படி, மாசுபாட்டை எவ்வாறாக தவிர்ப்பது, அதற்கான ஆலோசனைகளை தமிழக அரசு அதிகாரிகளுக்கு வழங்குவது, ஒட்டுமொத்தமாக பருவநிலை எதிர்கொள்ள தமிழக அரசுக்கு தேவையான அனைத்துவிதமான தேவைகள் மற்றும் உதவிகளை இந்த நிறுவனம் ஒப்பந்தத்தின்படி செய்யும். மேலும் சர்வதேச நாடுகளுடன், தொடர்பிலிருந்து தேவையான உதவிகளை தமிழகத்திற்கும் அரசுக்கும் இந்த நிறுவனம் செய்ய இருக்கிறது.
ஏற்கெனவே தமிழக அரசு 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலுமாக ஒழிப்பதற்காக திட்டத்தை மிகத் தீவிரமாக கையில் எடுத்திருக்கிறது. பாலிதீன் பைகளை தவிர்த்துவிட்டு அதற்கு மாற்றாக பேப்பர் பைகள் மற்றும் துணிப்பைகளை பயன்படுத்துவதற்கான நடைமுறைகளை தமிழக அரசு மிக தீவிரமாக கொண்டு வர இருக்கிறது. இதற்காக மஞ்சள் பை திட்டம் என்ற திட்டத்தை தமிழக அரசு விரைவில் செயல்படுத்த இருக்கிறது.